Ad

புதன், 21 ஜூலை, 2021

சிர்கா முதல் கோவிட் வரை; உலகை உலுக்கிய கொள்ளை நோய்களின் வரலாறு! - பகுதி 1

``போரால் உயிரிழந்தவர்களைவிட நோயால் உயிரிழந்தவர்கள்தான் அதிகம்" என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இது சாதாரண பழமொழி என்று கடந்து போய்விட முடியாது. வரலாற்று நெடுகிலும் நடந்த கோர சம்பவங்களை உற்றுநோக்கினால் இதில் பற்றிப்படர்ந்திருக்கும் நிதர்சனத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதுவரையில் நெப்போலியன், அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான், ராஜேந்திர சோழன் போன்ற மாவீர மன்னர்களின் படையெடுப்புகளையும், அவர்கள் ஆட்சிசெய்த நிலப்பரப்புகள், வீரம், கொடை, அறம் பற்றிதான் வரலாற்றுப் பாடங்கள் நமக்கு கற்பித்திருக்கின்றன.

ஆனால், நம் கண்ணில்படாத கொடூர கிருமிகள் பல, இனம் மொழி, மதம், நிறம், நாடு, கண்டம் என எந்தப் பேதங்களுமின்றி பேயாட்சி நடத்தியதை நாம் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பிளேக், காலரா, ஃப்ளு, கொரோனா போன்ற கொடூர நோய்கள்தான் அவை. குறுநில மன்னர்களாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆட்சி செய்யும் கிருமிகளை எபிடெமிக் (Epidemic) என்றும், கண்டங்கள் கடந்து போர்த்தொடுத்து தனது ஆட்சியை நிறுவும் கிருமிகளின் பரவலை பேண்டெமிக் (Pandemic - பெருந்தொற்று) என்றும் கூறுகிறது மருத்துவ உலகம். கொரோனா ஒரு பேண்டெமிக்.

கொரோனா மரணம்

கொரோனா தற்போது இந்த உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைப்பதையும், துடிக்கத் துடிக்க கோடிக்கணக்கான உயிர்களைக் குடித்து வருவதையும் கனத்த மனதோடு கண்முன்னே காண்கிறோம். இதேபோலத்தான் நம் முன்னோர்களும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல நோய்களை எதிர்கொண்டும், அதனால் உயிர்துறந்தும் வந்தார்கள்!

இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் கொரோனா நோய்த்தொற்றைப் போலவே, வரலாறு நெடுகிலும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் வெவ்வேறு வகையான நோய்க்கிருமிகள் அலை அலையாய் தொடர்ந்து வந்து இப்போது போலவே அப்போதும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தன நம் மானுட சமுதாயத்தை.

மருத்துவக் கட்டமைப்புகள், தடுப்பூசிகள் எனத் தற்காப்பு சாதனங்களை நிரம்பப் பெற்ற இந்த நவீனகாலத்திலேயே அவற்றை எதிர்கொள்ள முடியாது முடங்கிப்போய்க் கிடக்கிறோம் என்றால், இவை எவையுமே இல்லாத பழங்கால சந்ததியினர் என்னென்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படி, சரித்திரப் பேரழிவுகளை நிகழ்த்திய நூற்றாண்டு நோய்களையும், அவை ஏற்படுத்திய பேரிழப்புகளையும் வரலாற்றுத் துயரக் கதைகளின் வலிமிகுந்த காலத்திற்கும் உங்களை அழைத்துச் செல்கிறோம். மு(அ)கக்கவசங்களை அணிந்துகொள்ளுங்கள்!

multiple funeral pyres of those who died of COVID-19

நோய்களின் சாம்ராஜ்ஜியம்: அத்தியாயம் ஒன்று

சிர்கா (காலம்: கி.மு. 3000)

இன்றைய காலகட்டத்தில், தற்போது உலகையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் எந்த நாட்டில் உருவானது எனக் கேட்டால், தயக்கமே இல்லாமல் அனைவரும் சீனாதான் என்று சொல்வார்கள். சரி, அதேபோல் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில், உலகில் கண்டறியப்பட்ட முதல் நோய் எது, அது முதன்முதலில் எந்த நாட்டில் உருவானது என்று கேட்டால் நிச்சயம் அனைவரும் குழம்பிப் போவார்கள்! ஆனால், குழப்பம் வேண்டாம், அதுவும் சீனாவில்தான் முதலில் அறியப்பட்டது.

ஆம், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவில் அறியப்பட்ட, ஒரு தொற்றுநோய்தான் தற்போது வரையில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களிலேயே மிகப் பழைமையானது. `சிர்கா' என்றழைக்கப்படும் அந்த நோயானது, கி.மு 3000 ஆண்டுவாக்கில், சீனாவின் வடகிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின் உயிரைப் பாரபட்சமின்றி பறித்தது. குறிப்பாக, வடகிழக்கு சீனாவின் `ஹாமின்மங்கா' மற்றும் `மியாசிகோ' என்ற இரண்டு கிராமங்களையே முற்றிலும் அழித்தது. சீனாவில் எல்லையாக இருக்கும் மங்கோலியா நாட்டிலும், சிர்கா நோயின் தாக்கம் மிகத் தீவிரமாகப் பாதித்தது. மொத்தத்தில், ஒரு தொற்றுநோய் சீனாவின் ஒரு முழு பிராந்தியத்தையும் அழித்ததாக இதன் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

china நோய்

இதை உறுதி செய்யும் விதமாக, 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை, இடைப்பட்ட காலத்தில் சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வடகிழக்கு சீனாவில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிப் பணியை மேற்கொண்டனர். அப்போது, 29 வீடுகளைக் கொண்ட, வரலாற்றுக்கு முந்தைய ஒரு கிராமத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அதில் சுமார் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள், எரிந்த நிலையில் புதையுண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்த வீடுகள் ஒவ்வொன்றிலும், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களின் எலும்புக் கூடுகள் ஒன்றாகக் காணப்பட்டன. பலகட்ட வரலாற்று ஆய்வின் முடிவில் இதற்கான காரணமும் கண்டறியப்பட்டது. அதாவது, சிர்கா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, குணப்படுத்த முடியாமல் உயிரிழந்து போனவர்களை, ஒரே வீட்டில் அடைத்து வைத்து, அவர்களின் உடல்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், சிர்கா நோயால் பாதிக்கப்பட்ட எந்த வயதினரும் காப்பாற்றப்படவில்லை என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

`ஹாமின்மங்கா' என்றழைக்கப்படும் இந்தத் தொல்பொருள் பகுதியை, சீன அரசாங்கம், `பாதுகாக்கப்பட்ட பகுதி' என அறிவித்து, இன்றளவும் பாதுகாத்து வருகிறது.

Representational Image

Also Read: உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!#VikatanPhotoCards

பிளேக் ஆப் ஏதென்ஸ் (காலம்: கி.மு. 430- 426)

கிரேக்க நாட்டின் தலைநகரமாக விளங்கும் ஏதென்ஸ், மூவாயிரம் ஆண்டு வரலாற்றைக்கொண்ட மிகப்பழைமையான நகரம். உலகுக்கே முதன்முதலில் மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்திய ஏதென்ஸ்தான், முதன்முதலாகப் பெருந்தொற்று நோயாலும் பாதிக்கப்பட்டது. அதாவது கி.மு. 430-ம் ஆண்டு வாக்கிலேயே ஏதென்ஸ் நகர மக்களைத் தாக்கியது அந்த நோய். பிலெப்போனேசிய போர்ச்சூழலின்போது பரவிய இந்த நோயால் ஏதென்ஸ் நகரின் 20% மக்கள் இல்லாமல் போயினர். அதாவது 75,000 முதல் 1,00,000 வரையிலான மக்கள் மாண்டு போயினர்.

இந்த நோயின் தாக்குதலைப் பற்றி, அப்போது அதே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, உயிர் தப்பிய கிரேக்க வரலாற்றாசிரியர் துசிடைடிஸ், ``பிலெப்போனேசிய போரின் இரண்டாவது ஆண்டில் ஒரு புயல் போலத் தோன்றி ஏதென்ஸ் நகரில் வீசியது. லிபியா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய தேசங்களின் எல்லைகளைத் தாண்டி ஏதென்ஸின் சுவர்களைத் துளைத்து நுழைந்தது இந்த நோய்!” எனத் தன் குறிப்புகளின் மூலம் தெரிவிக்கிறார். மேலும், ``இந்த பிளேக் நோயின் அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, குடல் புண்கள் மற்றும் கொப்புளங்கள் போன்றவை இருந்தன" எனத் துசிடைடிஸ் விளக்கியுள்ளார்.

இதை வைத்து ஆராய்ச்சி செய்த தற்போதைய அறிஞர்கள் இன்றுவரையில் அது என்ன நோயாக இருக்கும் என்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இதன் அறிகுறிகள், நோய்த்தாக்கங்களை வைத்து மூலக்கூறு ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் சிலர் ஏதென்ஸ் பிளேக் நோயை பெரியம்மை என்றும், சிலர் சாதாரண டைபாய்டு காய்ச்சலாக இருக்கலாம் என்றும், சிலர் எபோலா போன்ற வைரஸாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெயர் தெரியாத நோய்களை `பிளேக்' என்றே பண்டையகால மக்கள் அழைத்து வந்தனர். எப்படி இருப்பினும், ஏதென்ஸ் நகரில் பிளேக் நோய் பரவி மிகப்பெரிய அளவிலான உயிர்சேதத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும், இந்த நோய்த்தொற்றால்தான் பண்டைய கிரேக்க சாம்ராஜ்யமே வீழ்ந்தது என்று கூறுகிறார்கள் வரலாற்றறிஞர்கள்.

Bubonic Plague

Also Read: அன்று வேப்பிலை... இன்று ஸ்டிக்கர் - கொள்ளை நோய் நாள்களின் நினைவைப் பகிரும் தேனி பாட்டிகள்

கி.மு. 430 முதல் கி.மு. 426 வரை சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஆட்டிப்படைத்து, ஏதென்ஸ் மக்களில் மூன்றில் ஒரு பங்கினரை கொன்றுகுவித்த இந்த பிளேக் நோயின் ஆதிக்கம் இதோடு முடிந்துபோய்விடவில்லை. அடுத்தடுத்த நூற்றாண்டுகளிலும் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கி, அது செய்த அட்டூழியங்களை வரும் பகுதிகளில் காண்போம்!



source https://www.vikatan.com/news/healthy/story-of-deadliest-diseases-in-the-history-part-one

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக