Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

`தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை; சொத்து அபகரிப்பு வழக்கில் இந்து மகா சபா தலைவர் கைது!'

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபரான இவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், முன்னாள் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்பட10 பேர் மீது காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்றினை அனுப்பியிருந்தார்.
அந்த புகார் மனுவில் ராஜேஷ், "நான் கணினி விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக பணப் பிரச்னை இருந்தது. அந்த பணப் பிரச்னை தீர்ந்த நிலையில், வெங்கடேசனிடம் வாங்கிய 2 கோடி ரூபாய்க் கடனுக்காக நான் நடத்தி வந்த செக்யூரிட்டி நிறுவனத்தை அவரிடம் விற்றுவிட்டேன். இந்நிலையில், வெங்கடேசன் சிவா என்பவரிடம் 20 கோடி ரூபாய் பெற்று, வெங்கடேசன் மோசடி செய்து விட்டார். இதில், பெரும் தொகையை என்னிடம் கொடுத்து விட்டதாகத் திருமங்கலம் காவல் நிலையத்தில் என் மீது பொய் புகாரளித்துவிட்டனர்.

Also Read: சென்னை: தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை! -போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு

அந்தப் புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்திய திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் என்னுடைய சொத்துக்களின் அசல் ஆவணங்களைக் கேட்டு என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். இந்நிலையில், அப்போது திருமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த சிவகுமார் சக காவலர்கள் மற்றும் குண்டர்களை வைத்து என்னையும், என் வருங்கால மனைவி, தாய் மற்றும் மைத்துனரை செங்குன்றம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்து என்னைக் கட்டாயப்படுத்தி என்னுடைய சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டனர். எனவே, இதில் தொடர்புடைய காவலர்கள் மற்றும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டு என்னுடைய சொத்துக்களை மீட்டுக் கொடுக்க உதவ வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சினிமாவை விஞ்சும் வகையில் தொழிலதிபரைக் குடும்பத்தோடு கடத்தி காவல்துறையினர் சொத்துக்களை எழுதி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ராஜேஷின் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

சென்னை தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கிய குற்றச்சாட்டில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது வழக்கு 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அதில், அப்போதைய திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், திருமங்கலம் காவல் ஆய்வாளர், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பண்ணை வீட்டில் அடைத்து வைத்துத் துன்புறுத்தி அவருடைய சொத்துக்களை அபகரித்தது உறுதியானது. அதனையடுத்து, குற்ற வழக்கில் தொடர்புடைய காவலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ கண்டன் என்பவரின் உத்தரவின் பேரில் தான் ராஜேஷை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தி காவலர்கள் சொத்துக்களை எழுதி வாங்கியது தெரியவந்தது. ஏற்கனவே, இந்து மகா சபாவைச் சேர்ந்த கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டன் மீது பாலியல் மற்றும் பண மோசடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த சொத்து அபகரிப்பு வழக்கில் மூளையாகச் செயல்பட்ட அவரை கைது செய்யத் தீவிரம் காட்டினார். அதன்படி, நேற்று சென்னையில் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ கண்டனை சி.பி.சி.ஐ.டி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், ஸ்ரீ கண்டன் மீது பணம் பறிப்பு, காயப்படுத்துதல், ஒருவர் சொத்தை அபகரித்து, மற்றவர்களுக்கு வழங்குதல் என, ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/cbcid-police-arrested-hindu-maha-saba-leader-who-involved-in-a-dacoity-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக