Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

புத்தம் புது காலை : பஜ்ரங் பூனியா, கிரேட் காமா... ஏன் தோப்புக்கரணம் போடச் சொல்கிறார்கள்?! #Yogaday

ஒரே சமயத்தில் உங்களால் எத்தனை தோப்புக்கரணம் போடமுடியும்?

ஐம்பது, நூறு, ஐநூறு... இதுவே முடியாதுதானே?

ஆனால் ஒரேசமயத்தில் ஐயாயிரம் தோப்புக்கரணங்கள் போட்ட ஒரு மனிதர் இந்தியாவில் இருந்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

தற்காப்புக் கலைகளில் ஒன்றாகவும், கடந்த பதினைந்தாயிரம் ஆண்டுகளாக, மனிதர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகவும் விளங்கும் மல்யுத்தத்தில் பல விருதுகள் பெற்றவரும், நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் ஹரியானாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா, மல்யுத்தத்தில் தானும் 'தி க்ரேட் காமா'வைப் போல வரவேண்டும் என்று கூறிய பிறகுதான் நமக்கு அவரைப் பற்றித் தெரிகிறது.

யார் இந்த கிரேட் காமா?

ஒருகாலத்தில் உலகிலேயே மல்யுத்தத்தில் யாராலும் இவரை வெல்லமுடியாது என்ற அளவிற்கு திறமைகொண்ட கொண்ட குலாம் முகமது பக்‌ஷ் பட் என்பவரைத்தான், மக்கள் 'தி க்ரேட் காமா' என்று பெருமையுடன் அழைத்திருக்கிறார்கள். 1878-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே மல்யுத்தத்தைக் கற்றுத்தேர்ந்து, ஜோத்பூர் மன்னரின் பிரியமான மல்யுத்த வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.

பஜ்ரங் பூனியா

இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் வசித்துவந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் அமெரிக்க, ஸ்வீடன், இங்கிலாந்து நாடுகளின் மல்யுத்த வீரர்களை தொடர்ந்து அதுவும் மிகவும் எளிதாக வென்றுகொண்டே இருந்ததால் 'பஞ்சாப்பின் சிங்கம்' என்றழைத்த மக்கள், இன்றும் இவரைவிடச் சிறந்த மல்யுத்த வீரர் உலகிலேயே பிறக்கவில்லை என்கிறார்கள்.

உண்மையில் இந்த கிரேட் காமா என்ற பஞ்சாப் சிங்கத்திற்குப் பெரிதும் உதவியது அவரது தினசரி உடற்பயிற்சிகள் தானாம். அதிலும் வெகு எளிதாக ஐயாயிரம் முறைகள் பைட்டக் (baithak) என்ற இந்தியன் ஸ்க்வாட்டிங்கை மேற்கொள்வாராம். அதாவது, ஒரு நிமிடத்திற்கு நூறிலிருந்து இருநூறு முறை ஸ்க்வாட்டிங் மற்றும் ஐம்பதிலிருந்து நூறு முறை வரை புஷ்-அப்ஸ் என்ற தண்டால் எடுப்பார் என்றும், அதற்கேற்றவாறு உணவையும் உட்கொள்வார் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

ஆனால், இந்த பைட்டக் என்ற இந்தியன் ஸ்க்வாட் அல்லது இந்து ஸ்க்வாட் முறை, நம் அனைவருக்கும் பரிச்சயமான, எளிமையான உடற்பயிற்சிதான். கிட்டத்தட்ட தோப்புக்கரணம் போலவேதான் செய்யவேண்டும் என்றாலும், உட்கார்ந்து எழும்போது கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்ளாமல் அவற்றை படகுக்குத் துடுப்பு போடுவதுபோல பின்புறமாய் அசைக்க வேண்டும்.

தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் தோப்புக்கரணத்தைப் போலவே, நேராக நின்றபடி, கால்களை சிறிது அகட்டி, பாதங்களை தரையில் அழுத்தமாக ஊன்றி நின்றபடி, முழங்கால்களை மடக்கி உட்கார்ந்து எழும்போது, கைகளைத் துடுப்பு போல, முன்பிருந்து பின்பக்கம் கொண்டுவருவதுடன், மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும் வேண்டும்.

பஜ்ரங் பூனியா

இந்தப் பயிற்சியால் முழங்கால், தொடை எலும்புகளுக்கும், கணுக்கால், முழங்கால், தொடை, இடுப்பு, தண்டுவடத் தசைகளுக்கும் வலிமை கூடுவதுடன், இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இருதய மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியமும், அதேசமயம் நுரையீரல்களின் ஆரோக்கியமும், இவற்றின் மூலமாக அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியமும் கூடுகிறது என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள். இதையே தொடர்ந்து மேற்கொள்ளும்போது தசைகள் வளர்ச்சியடைந்து, உடற்கட்டு வலிமை பெறுவதால், சிறந்த பாடி பில்டிங் உடற்பயிற்சியாக இந்தியன் ஸ்க்வாட் கருதப்படுவதுடன், மல்யுத்த வீரர்களுக்கு முக்கியமான பயிற்சியாகவும் இது விளங்குகிறது.

என்னதான் உட்கார்ந்து எழுவதுபோல் சாதாரணமாக இருந்தாலும், ஒரு உடற்பயிற்சியை ஐயாயிரம் முறைவரை செய்வது சாத்தியம் தானா என்று கேட்டால், "மிகச்சிறிய வயதில் இந்த உடற்பயிற்சியை மேற்கொண்ட என்னைப் போன்றவர்களாலேயே எளிதாக ஆயிரக்கணக்கில் செய்ய முடியும் என்றிருக்க, தி கிரேட் காமாவால் நிச்சயம் இன்னும் அதிகம் செய்திருக்க முடியும்..." என்று கூறும் பஜ்ரங் புனியா, இந்த உடற்பயிற்சிதான், டோக்கியோ ஒலிம்பிககில் Freestyle wrestling போட்டியில் தனக்குப் பதக்கம் வாங்கித் தரவிருக்கிறது என்று நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.

யோகா தினம்

இந்த சர்வதேச யோகா தினத்தன்று, 'Yoga for Wellbeing' அதாவது, 'அனைவரின் ஆரோக்கியத்திற்கும் யோகா' என நம் அனைவரையும் யோகா செய்ய ஐக்கிய நாடுகள் சபை அழைப்புவிடுத்துள்ளது.

மனதையும் ஒருநிலைப்படுத்தி, உடலை வளைத்து, முறுக்கி உள்உறுப்புகளை வலிமைப்படுத்தி, தோற்றத்தை இளமையாக்கும் எல்லாவிதமான ஆசனங்களையும், மூச்சுப்பயிற்சிகளையும் மேற்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை, எந்தவொரு உபகரணமும் இல்லாமல் எளிதில் செய்யக்கூடிய இந்த பைட்டக் என்ற இந்தியன் ஸ்க்வாட்டை, தி க்ரேட் காமா போல ஆயிரக்கணக்கில் எல்லாம் வேண்டாம், தினமும் ஐந்து நிமிடங்கள் செய்தாலே ஆரோக்கியம் நிச்சயம் என்று மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்துவதால், இயன்றவரை இந்தியன் ஸ்வாக்ட்டிங்கை மேற்கொள்வோம்!

இந்த எளிய, ஆனால் வலிய உடற்பயிற்சி நமக்கு ஆரோக்கியத்தைப் பெருக்கட்டும். பஞ்சரங் பூனீயாவிற்கு பதக்கங்களை அள்ளி வழங்கட்டும்!

#யோகா_தினம்



source https://sports.vikatan.com/healthy/who-is-the-great-gama-and-wrestler-bajrang-punia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக