வருடா வருடம் மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கப்படும் டெக் நிகழ்வான ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்தியாவில் ஆப்பிள் பயனர்கள் குறைவு என்றாலும், உலகின் ப்ரீமியம் மொபைல் பிராண்ட் தன் பயனர்களுக்கு அப்படி என்னதான் வசதிகளை வழங்குகிறது எனப் பார்ப்பதற்காகவே ஒரு தனி ஆர்வம் டெக்கீக்களுக்கு இடையே இருக்கும்.
இந்த வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில்தான் தன் சாதனங்களுக்கு என்னென்ன அப்டேட்களை வழங்கவிருக்கிறது ஆப்பிள் எனத் தெரிய வரும். கொரோனா காரணமாக இந்த நிகழ்வும் முழுமையான ஆன்லைன் நிகழ்வாகவே நடக்கிறது. எப்போதும் 'அள்ளிக் கொடுப்பது' தான் ஆப்பிளின் வழக்கம். இந்த முறை என்னென்ன அப்டேட்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது எனப் பார்க்கலாம்.
iOS 15:
ஐபோன்களின் இயங்குதளத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனான ஐஓஎஸ் 15-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். புதிய வெர்ஷனில் ஃபேஸ்டைம், ஐமெஸேஜ், கேமரா மற்றும் ஆப்பிள் மேப்ஸ் ஆகிய வசதிகளை மேம்படுத்தியிருக்கிறது. ஃபேஸ்டைமில் போர்ட்ரெய்ட் மோஃட், கிரிட் வ்யூ ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஷேர்டைம் என்ற புதிய வசதியையும் இதனுடன் சேர்த்திருக்கிறது ஆப்பிள். இந்த வசதியின் மூலம் நம்முடைய திரையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஆப்பிளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றிருந்த ஃபேஸ்டைமை இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸிலும் பயன்படுத்தலாம். ஆனால், வெப் ப்ரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் ஒன்லி வசதியான ஐமெஸேஜ்-ம் புதிய வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது.
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்து எந்தெந்த நோட்டிபிகேஷன்களை நாம் பெற வேண்டும் என்று மாற்றம் செய்து கொள்ளும் வகையில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. கேமராவில் புதிய அப்டேட்டாக லைவ் டெக்ஸ்ட் வசதியைச் சேர்த்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலம் ஒரு புகைப்படத்தில் இருக்கும் வாக்கியங்களை கேமரா கொண்டே ஸ்கேன் செய்ய முடியும். போட்டோக்களுக்கு மெமரீஸ் என்ற புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இதன் மூலம் நம் கேலரியில் இருக்கும் போட்டோக்களை மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ கொண்டு ஒன்றிணைத்து ஆப்பிள் மியூசிக்கில் இருக்கும் இசையையும் சேர்த்து நமக்குக் கொடுக்கும்.
ஐபேட் ஓஎஸ் 15 மற்றும் வாட்ச் ஓஎஸ் 8:
ஆப்பிள் ஐபேட்களின் பிரத்யேக இயங்குதளமான ஐபேட் ஓஎஸ்ஸும் (iPadOS) பல புதிய வசதிகளைப் பெற்றிருக்கிறது. கடந்தாண்டு ஐஓஎஸ்-க்கு வழங்கப்பட்ட ஆப் லைப்ரரி வசதி தற்போது ஐபேடிற்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆப்களை ஒரே திரையில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் மல்ட்டிடாஸ்கிங் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நோட்ஸ் ஆப் மற்றும் மொழிபெயர்ப்பு செயலியும் புதிய அப்டேட்களைப் பெறுகின்றன.
வாட்ச் ஓஎஸ்-ன் (WatchOS) புதிய வெர்ஷனான வாட்ச் ஓஎஸ் 8-ம் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தது. புதிய வாட்ச்ஃபேஸை (Watchface) புதிய வெர்ஷனில் சேர்த்திருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் வாட்சில் இருந்த மெஸேஜ்களுக்கு ரிப்ளை செய்யும் வகையில், கையால் எழுதும் வசதியைச் சேர்த்திருக்கிறது. நமது மூச்சு எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டும் இந்தப் புதிய வெர்ஷனில் இடம்பெற்றிருக்கிறது. வொர்க்அவுட் ஆப்பில், புதிய மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட புதிய வொர்க்அவுட் வகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ப்ரைவசி:
ஆப்பிளில் மற்ற அப்டேட்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் ப்ரைவசிக்கும் இருக்கும். இந்த ஆண்டும் பயனர்களின் பிரைவசி தொடர்பான பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். அவை என்னென்ன?
ப்ரைவசி வசதிகளில் புதிதாக 'மெயில் ப்ரைவசி புரொடக்ஷன்' என்ற புதிய வசதியை ஆப்பிளின் மெயில் ஆப்பில் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பயனர்களின் தகவல்களைச் சேகரிக்க மெயிலை அனுப்புபவர்களால் முடியாது. மேலும், பயனர்களின் ஐபி அட்ரஸையும் மறைக்கும் வகையில் புதிய அப்டேட்டை அறிவித்திருக்கிறது ஆப்பிள். ஐபி அட்ரஸை ட்ராக் செய்யும் ஆப்பிள் ட்ராக்கர்களையும் ப்ளாக் செய்திருக்கிறது ஆப்பிள். இந்த அப்டேட்கள் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தைக் கொண்டு சேகரிக்கப்படும் தகவல்களை ஒன்று திரட்டி உருவாக்கப்படும் உங்கள் புரொபைலை இனி உருவாக்க முடியாது.
ஐஓஎஸ் 14-லேயே ப்ரைவசி நியூட்ரிஷன் லேபிள்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். தற்போது அதனை இன்னும் மேம்படுத்தியிருக்கிறது. புதிய வெர்ஷனில் ஆப் பிரைவசி ரிப்போர்ட் வசதி ஒன்றையும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலம், ஒரு ஆப் எப்போதெல்லாம் நாம் கொடுத்திருக்கும் அனுமதிகளை வைத்து நம் தகவல்களைச் சேகரிக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இது மட்டும் இல்லாமல், நம்மிடம் சேகரிக்கும் தகவல்களை எந்தெந்த மூன்றாம் தர நிறுவனங்களுடன் அந்தக் குறிப்பிட்ட ஆப் பகிர்ந்து கொள்கிறது என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
ஆப்பிளின் சஃபாரி ப்ரௌசரில் மட்டும் பயன்படுத்தக்கூடிய, விபிஎன் போன்று செயல்படக்கூடிய ப்ரைவேட் ரிலே வசதியையும் அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள். இதன் மூலம் யாராலும் நீங்கள் என்ன உள்ளடக்கத்தை இணையத்தில் பார்க்கிறீர்கள் எனக் கண்டறியவே முடியாது என உறுதியாகக் கூறுகிறது ஆப்பிள்.
இந்த அப்டேட்கள் எல்லாம் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/technology/tech-news/apple-new-updates-unveiled-in-wwdc-21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக