போர்த்துகீசிய நாட்டிலிருந்து 1592-ல் மதுரைக்கு பொர்ணாண்டஸ் பாதிரியார் வருகை தந்தார். மன்னர் வீரப்ப நாயக்கரின் அனுமதியுடன் மதுரையின் முதல் மாதா கோயிலை அவர் நிறுவினார். 1606-ல் இத்தாலியின் தஸ்கினியிலிருந்து ராபர்ட்-டி-நோபிலி (Roberto-de-Nobili) இந்தியாவின் கோவாவிற்கு வந்தார், அங்கிருந்து கொச்சியில் சில காலம் இருந்துவிட்டு மதுரைக்கு வந்தார். சைவ உணவு, ஒரு நாளைக்கு ஒருவேளை உண்ணுவது, தன் உடலில் ஒரு பூணூலை மாட்டி அதில் ஒரு சிலுவையைத் தொங்கவிட்டு அவர் ஒரு துறவியின் கோலத்திற்கே தன்னை மாற்றிக்கொண்டார், அவர் தன்னை ரோமாபுரி பார்ப்பணர் என்று அழைத்துக்கொண்டார்.
தமிழ் மொழியைப் பயின்று தமிழ் போர்த்துக்கீசிய அகராதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றினார். இவரைத் தொடர்ந்து போர்த்துகள் நாட்டின் லிஸ்பன் நகரில் இருந்து வந்த ஜான் டி பிரிட்டோ 1680-ல் மதுரை வந்து மறவர் நாட்டில் சமயப் பணியாற்றினார்.
இத்தாலி நாட்டிலிருந்து வந்த கான்ஸ்டண்டின் ஜோசப் பெஸ்கி மதுரைக்கு வந்து சமயப் பணியாற்றினர். தமிழ் பயின்று தன்னை வீரமாமுனிவர் என்ற பெயரில் மட்டும் அல்லாமல் தமிழ்ப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். திருக்குறளை லத்தின் மொழிக்கு மொழியாக்கம் செய்தது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழின் முக்கிய நூல்களை இயற்றினார்.
கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக வருவாய் அதிகாரியாக மதுரைக்கு வந்த எல்லிஸ் அவர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றினார். ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார், திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதி வெளியிட்டார். அவரது தமிழ்த் தொண்டின் நினைவுகூரலாகவே மதுரையின் ஒரு பகுதிக்கு இன்று எல்லிஸ் நகர் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புதிய இங்கிலாந்து சபைகள் நிறுவப்பட்டபோது சமயத்தை முன்வைத்து பெரும் கொந்தளிப்புகள் நிகழ்ந்தன. இங்கிருந்து ஒரு பிரிவினர் வெளியேறி அமெரிக்கா சென்றனர். அங்கு அவர்கள் செல்வாக்கு பெற்று வளர்ந்த பின் கீழை நாடுகளிலும் இறைப்பணி செய்யும் விருப்பத்தோடு புறப்பட்டனர். 1816-ல் இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் தங்களின் சபைகளை நிறுவினர். அங்கே இருந்த தமிழர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்ததும், இந்தியா நோக்கிக் கிளம்பினார்கள். தமிழ்நாட்டிலும் மிஷனரியை உருவாக்கும் நோக்குடன் பாக் ஜலசந்தியைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை வந்தடைந்தனர்.
திரு.லெவிஸ்பால்டிங் மற்றும் ஹொய்சிஸ்டன் ஆகியோர் 1834-ல் மதுரைக்கு வந்தனர். மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் முதலில் உலா வந்தனர். மக்களைச் சந்தித்தனர், அவர்களை அறிந்துகொள்ள முற்பட்டனர். அதன் பின்னர் திரு.லெவிஸ்பால்டிங் தனது தலைமையகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார், அதில் “தெருக்கள் ஒழுங்கற்றும் குறுகியதாகவும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான மக்களுக்கு வேளாண்மைதான் முக்கியத் தொழில், கால்நடை வளர்ப்பில் பலர் ஈடுபடுவதைக் காண முடிகிறது. ஜாதிகளுக்கேற்றபடி தொழில் முறைகள் உள்ளன. போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு, வசதியானவர்கள் மனிதர்கள் சுமக்கும் பல்லக்குகளில் பயணம் செய்கின்றனர். மக்களிடையே பேய் ஆடுதல், அருள்வாக்கு போன்ற பழக்கங்கள் உள்ளன. கோடாங்கி என்கிற ஒருவரிடம் அனைவரும் குறி கேட்கிறார்கள். ஜாதிச் சண்டைகள், பிறர்மீது வழக்கு போடுதல், பகை, களவு, வழிப்பறி, சூதாட்டம் போன்றவை உள்ளன. கடுமையாக உழைக்கும் சாமானியர்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள்.கோவில்களில் உள்ள பிராமணர்கள் எனப்படுகிறவர்கள்தான் முதல்நிலைச் சாதியினராக உள்ளனர், அவர்கள்தான் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள். இங்குள்ள மக்களிடையே 80 வகையான ஜாதிப் பிரிவுகள் உள்ளன” என்று மதுரையின் சமூகத்தை அவர் விவரித்தார்.
திரு.லெவிஸ்பால்டிங் அறிக்கையைப் பரிசீலித்த அமெரிக்கன் மிஷனரி தமிழகத்தில் மிஷனரிகளைத் தொடங்க கவர்னர் ஜெனரலிடமும் சென்னை அரசிடமும் அனுமதி கேட்க 1835களின் இறுதியில் விண்ணப்பித்தனர், சில காலத்தில் அனுமதியும் கிடைத்தது.
மதுரையில் மிஷனரி சார்பில் பள்ளிகள் ஏற்படக் காரணமானவர் டேனியல் பூர். 1835-ல் மறைத்தளப் பணியாக மதுரை வந்த அவர் இங்குள்ள கல்விச்சாலைகளின் நிலையைக் கண்டறிந்தார். அதன் பின்னர் தனது அறிக்கையை சமர்பித்தார். டேனியல் பூரின் அறிக்கையின்படி மதுரையில் 7 பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஒரு பள்ளியில் தமிழும் தெலுங்கும் பிராமணர்களால் கற்றுத் தரப்பட்டது. மீதமுள்ள 6 பள்ளிகளில் தமிழ், ஹிந்துஸ்தானி மொழிகள் இந்து மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்களாலும் கற்றுத் தரப்பட்டது. 1845-ல் பசுமலையில் பள்ளி தொடங்கப்பட்டது, மெல்ல மெல்ல சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து பள்ளிக்கு குழந்தைகள் வரத்தொடங்கினார்கள்.
1836-இல் மதுரையில் பிராட்டஸ்டண்டு சபை தொடங்குவது என்று முடிவு செய்தனர், கொஞ்சம் ஊரை விட்டு வெளியே இருக்கலாம் என்ற முடிவுடன் அவர்கள் இடம் தேடினார்கள். இறுதியாக மதுரைக்குத் தெற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில், பசுமலை மலையடிவாரத்தில் உள்ள ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே புதிய இங்கிலாந்து சபையை நிறுவினார்கள்.
1845-ல் மதுரை ரயில் நிலையம் அருகே யூனியன் கிறிஸ்டியன் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அரசரடியில் பெரிய இடம் ஒன்றை வாங்கினார்கள், அது மதுரை இறையியல் கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலில் உள்ளது.1847-ல் பசுமலையில் தேவாலயமும் ஒரு மருத்துவமனையும் கட்டப்பட்டன. பின் அருகில் இன்னொரு சர்ச் கட்டி அதற்கு உவைற்றின் சர்ச் என்று பெயரிட்டனர்.
இத்தனை நடவடிக்கைகள் நடைபெற்ற போது ஆதரவு எவ்வளவு இருந்ததோ அதற்கு ஏற்றாற்போல் அவ்வப்போது சில எதிர்ப்புகளும் வந்து கொண்டுதானிருந்தன. இந்தச் சமூகத்தில் பல படிநிலைகளில் உள்ள ஜாதியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே வகுப்பறையில் படிக்கும்போது மாணவர்களிடையே பிரச்னைகள் எழவே செய்தது. 1847-ல் மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் பசுமலைப் பள்ளியில் சமபந்தி விருந்து நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள். உயர் ஜாதியினரும் வசதியானவர்களும் தங்கள் பிள்ளைகளை இந்த சமபந்தி போஜனத்தின் வாயிலாக பள்ளி நிர்வாகம் கேவலப்படுத்துவதாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னை பெரிதாகி அடிதடி, கைதுகள், வழக்குகள் என இந்த விசயம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த சமபந்திக்குப் பிறகு பசுமலைப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
1890களில் திருமங்கலத்தில் மதுரை சுதேசிக் கல்லூரி (Madurai Native College) தொடங்கப்பட்டு அங்கே பையன்களுக்கான உறைவிடப் பள்ளி செயல்பட்டு வந்தது. திருமங்கலத்தில் பின்பு நிலவிய இடப்பற்றாக்குறை காரணமாகப் பசுமலை உவைற்றின் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. பசுமலைக்கு இந்தக் கல்லூரியை மாற்றினால் மதுரை மாணவர்கள் வர ஏதுவாக இருக்கும் என்று கருதினார்கள், ஆனால் மதுரையில் இருந்து மாணவர்கள் பசுமலை தொலைவாகவும் ஊருக்கு வெளியே இருப்பதாகவும் கருதினார்கள். அதனால் சுதேசிக் கல்லூரி மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்தவப் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டது.
சுதேசிக் கல்லூரியின் முதல்வர் வாஷ்ப்ர்ன் அவர்கள் மெல்ல கல்லூரிக்கு இடம் தேடி மதுரை நகரம் முழுவதும் வலம் வந்தார். அவரது கண்களில் வைகை ஆற்றின் வட கரையில் நீண்ட, குறுகியதான குளமும் அதன் இருபுறமும் பனை மரக்காடுகளும் வயல்களும் உள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு கண்ணில் பட்டது. அந்த நிலத்தின் மேற்கே அழகர்கோயிலுக்குச் செல்லும் வண்டிப்பாதை இருந்தது. பனைமரக் காடான இந்தப் பகுதியில் மதுரை சுதேசிக் கல்லூரிக்குச் சொந்தமாகக் கட்டடத்தைக் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது. முதலில் சிறிய தற்காலிகக் கட்டடங்களுடன் இந்த இடத்திற்குக் கல்லூரி மாற்றப்பட்டது. வைகை ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒரு முறை கற்பாலத்தைக் கடக்கும் சில மாணவர்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுவிட்டது இதனை அடுத்து 1889-ல் மதுரையில் வைகை ஆற்றுக்குக் குறுக்கே முதல் மேம்பாலம் கட்டப்பட்டது, இன்றளவும் மொத்த மதுரையின் போக்குவரத்தை கம்பீரமாக தன் முதுகில் கடத்தும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அதுவே.
வாஷ்ப்ரன் இந்த இடத்தில் விரிவான கட்டடங்களுக்கான திட்டத்தைத் தலைமையிடத்திற்குத் தெரிவித்தார், அனுமதி கிடைத்ததும் தன் வசம் இருந்த நன்கொடையை வைத்துக் கொண்டு கட்டடத்தை 1898-ல் கட்டத் தொடங்கினார். மைசூர் அரண்மனையைக் கட்டிய, சென்னை உயர் நீதிமன்றத்தைக் கட்டிய அதே பொறியாளர் ஹென்ரி இர்வின் தான் இந்தக் கல்லூரிக் கட்டடத்தையும் கட்டினார். 1904-ல் சுதேசிக் கல்லூரி புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கிய போது அது அமெரிக்கன் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது.
வாஷ்ப்ரனுடன் இணைந்து இந்தக் கல்லூரியின் இரண்டாவது முதல்வர் வில்லியம் மைக்கேல் ஜம்புரோ என்பவர் இன்று கல்லூரி இருக்கும் இடத்தில் வசித்த குடும்பங்கள் மற்றும் ஏனைய கிறித்தவக் குடும்பங்கள் குடியிருப்பதற்காகக் கோரிப்பாளையம் பகுதியில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி தனது சொந்தப் பொறுப்பில் மக்களுக்கு தானமாக வழங்கினார். இன்று வரை இந்தப்பகுதி ஜம்புரோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
1921-ல் மதுரை நிலத்தின் முதல் பெண் நவீனக் கல்விச்சாலையில் கல்வி கற்க அமெரிக்கன் கல்லூரியில் இணைகிறார். 1919-ல் அமெரிக்கன் கல்லூரியில் ரபீந்திரநாத் தாகூர் ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார், இந்தச் சொற்பொழிவுகள் அனைத்திற்கும் நுழைவுக் கட்டணம் இருந்தது, இந்தச் சொற்பொழிவுகள் மூலம் ரூ.2365 திரட்டப்பட்டது. அதில் ரூ.365-தை அமெரிக்கன் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு ரூ.2000த்தை மேற்கு வங்கத்தின் சாந்திநிகேதனில் அவர் கட்டி எழுப்பிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கான நிதியாகக் கொண்டு சென்றார்.
1906-ல் பசுமலை டிரேடு ஸ்கூல் என்றும் பசுமலை இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் என்றும் பெயரிட்ட தொழிற்கல்விப் பாடசாலை இன்றளவிலும் சுற்றிலும் உள்ள கிராமத்துப் பிள்ளைகளுக்குத் தொழிற்கல்வியைக் கற்றுத்தருகிறது. இந்தத் தொழிற்பாடசாலையில் தான் மதுரையின் முதல் வளாக வேலை (Campus Interview) வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பசுமலையில் இதே வளாகத்தில் லெனாக்ஸ் அச்சகம் தொழிற்பாடசாலைக்கான பாடங்களை அச்சடித்து வழங்கியது.
மதுரை நகரின் மேற்கே புட்டுத்தோப்பு அருகே அமைந்துள்ள கேப்ரன்ஹால் பெண்கள் கலாசாலை மிகவும் புகழ்பெற்றது. மறைத்தளப் பணியாக மதுரைக்கு வந்த கேப்ரன் அம்மையார் இங்கிருந்த பெண்கள் போர்டிங் பள்ளியைக் கட்டினார். என் அம்மா பொன்மலர் அவர்கள் கேப்ரன்ஹால் பள்ளியின் போர்டிங்கில் தங்கிப் பயின்ற மாணவி.
மறைப்பணியாளர்களாக மதுரைக்கு வந்த பல வெளிநாட்டவர்கள் மருத்துவர்களாக இருந்தனர். மதுரையில் வருடம்தோறும் நிலவிய தொற்று நோய்களினால் மக்களின் அவல நிலை கண்டு மருத்துவ மனைகள் ஏற்படுத்தினார்கள். டாக்டர் ஸ்டீல், டாக்டர் ஸ்கூடர், டாக்டர் ஷெல்டன் ஆகியோர் மதுரையின் பல பகுதிகளில் டிஸ்பென்சரிகள் தொடங்கினார்கள்.
1848-ல் மதுரைக் கீழவெளி வீதியில் மிஷன் சார்பாக மருத்துவமனை தொடக்கப்பட்டது. 1800 நோயாளிகள் எட்டு மாதங்கள் வந்து சிகிச்சை பெற்றதாக டாக்டர் ஷெல்டன் ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறார். இந்த மிஷனின் மருத்துவமனையை உடனடியாக விரிவாக்கம் செய்யும் பொருட்டு மதுரை கோட்டைச் சுவருக்குக் கிழக்குப்புறம் பெரிய நிலம் வாங்கப்பட்டு அதுவே இன்று கீழவாசலில் உள்ள மிஷன் ஆஸ்பத்திரியாகச் செயல்படுகிறது.
1876-1878களில் தாது வருடப் பஞ்சம் ஏற்பட்ட போது மதுரையில் வரலாறு காணாத அவலநிலை ஏற்பட்டது, அந்த நேரம் மிஷனரியின் பணிகள் மிகவும் தீவிரமாக இருந்தன. அந்த நேரத்தில்தான் மிஷன் ஆஸ்பத்திரியில் பெண்கள், சிறுவர்களுக்கு எனத் தனி மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
இந்த வளாகத்தில்தான் பின்னர் சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி, நர்சிங் பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன.
மதுரைக் கீழவாசலில் உள்ள புனித மேரி ஆலயம் 1862-ல் மதுரை கோட்டைக்கு வெளியே கட்டப்பட்டது. தெற்குவாசலில் உள்ள தேவாலயம் 1885-ல் திருமதி. கேப்ரன் அவர்களால் கட்டப்பட்டது. மதுரையின் எல்லா தேவாலயங்களின் வாசல்களிலும் குதிரை லாயங்கள் இருந்தன.
மதுரை நகரின் மையத்தில் மேங்காட்டுப் பொட்டல் அருகே இயங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ.சி. கிறித்தவ இளைஞர் சங்கத்தை பசுமலை இளைஞர்கள் சிலர் கூடி, தொடங்கினார்கள். 1800களில் மதுரை ஒய்.எம்.சி.ஏ.சி. அருகே இருக்கும் இதே பொட்டலில் ராணுவ வீரர்களின் முகாம்களும் குடியிருப்புகளும் மிகுந்து மெயின் கார்டு ஸ்கொயர் ((MAIN GUARD SQUARE) இருந்தது.
1874-ல் பசுமலையில் புதிய இங்கிலாந்து சபை கட்டி முடிக்கப்பட்ட போது பாஸ்டன் நகரிலிருந்து 336 ராத்தல் எடையுள்ள கோவில் மணி வரவழைக்கப்பட்டது. இந்த மணி வந்த போது பசுமலை ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றிருந்ததால், இங்கு இதனைப் பொருத்த இயலவில்லை, உடன் இந்த மணி அருகில் இருந்த திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வழங்கப்பட்டது என்பது வரலாறு.
மின்சாரம் இல்லாத நிலையில் பசுமலை கடும் சிரமங்களுக்கு ஆளானது. மெழுகுவர்த்திகள், சிமினி, அரிக்கேன், தீப்பந்தங்களின் பயன்பாட்டில்தான் மொத்த வளாகமும் இயங்கியது. மலை சூழ் பகுதி என்பதால் கடுமையான பூச்சிகள் பாம்புகள் நடமாட்டம் இருந்தது. பிராட்டஸ்டண்டு சபை அமெரிக்காவிலிருந்து சக்தி மிக்க ஜெனரேட்டரை வரவழைத்து மின்சாரம் தயாரித்து இந்த வளாகத்தை ஒளியூட்டியது. இந்தப் புதிய வெளிச்சத்தின் வருகை மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
பசுமலையில் மின்சாரம் வந்த செய்தியைக் கேட்டு மக்கள் கால்நடையாகவும் மாட்டு வண்டிகளிலும் அலை அலையாய் வந்தனர். "மலைக்கு மேல இருந்து கம்பி வழியாக சீமெண்ணையை ஊற்றி விடுறாங்க, அந்த சீமெண்ணையால நிக்காம விளக்கு எல்லாம் எரியுது" என்று தென் தமிழகமே பேசியது. பின்னர் இதே போன்ற வசதியை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் இதே சபை செய்து கொடுத்தது.
Also Read: தூங்காநகர நினைவுகள் - 20: தபாலின் சிறகுகள்!
மதுரையில் தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகிய பழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. தேவதாசி முறை இந்துக் கோவில்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. கோவிலுக்குப் பெண்களை நேர்ந்து விடுவது நேர்த்திக்கடன்களில் ஒன்றாக இருந்தது. மதுரைக்கு வந்த மறைத்தளப் பணியாளர் திருமதி. ஏமி கார்மைக்கேல் இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். தேவதாசி முறைக்கு அர்ப்பணிக்கப்படும் சிறுமியரை மீட்டுத் தத்தெடுத்து வளர்த்தார். இதனால் சனாதன வாதிகள் இவரைப் பிள்ளை பிடிப்பவர் என்று கூறி அடித்து விரட்டினர், இவருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன.
மதுரையில் ஈவா மேரி சுவிப்ட் என்ற மறைத் தளப் பணியாளரான பெண் பணியாளர் மதுரை, புதூரில் உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராகப் போராடினார். இந்து மக்கள் இவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர், இவரைத் திட்டியும் எதிரில் நின்று முழக்கங்களும் எழுப்பினர். மிஷனரிகளே வெளியேறு, எங்க கடவுள்கள் கோபப்படுவார் என்பது அன்று சனாதன வாதிகளின் முழக்கமாக இருந்தது.
கிறித்துவத்தின் வருகை மதுரைப் பகுதியில் கல்வியின் மடைகளைத் திறந்து அதை அனைவருக்குமானதாக மாற்றியது, கல்வியை வேலை வாய்ப்புடன் இணைத்து ஒரு நவீன திசைவழியை ஜாதியத்தின் இரும்புச் சங்கிலியில் பூட்டப்பட்ட மக்களுக்கு அறிமுகம் செய்தது. சுதந்திரத்திற்குப் பின்புகூட குலக்கல்வி முறை ஜாதியத் தொழிலைச் செய்தல் என்கிற கீழ்மைகள் பேசப்பட்ட சூழலில் அதற்கெல்லாம் ஒரு முன்னோடிச் செயலாக கல்வியை ஜனநாயகப்படுத்தியதில் கிறித்துவக் கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.
அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வந்தபோதும் மதுரை மூவாயிரம் ஆண்டுகளாக வந்தோர் அனைவரையும் தன் இரு கரங்களால் அரவணைத்த ஊராகவே வரலாறு நெடுகிலும் கம்பீரமாக நிற்கிறது, வந்த அனைவரிடத்திலும் இருந்த சிறந்தவற்றைத் தன்வயப்படுத்தி, வந்தவர்களுக்குத் தமிழ் மொழியைப் பருகக் கொடுத்தது, அவர்களைத் தமிழன்னையின் பிள்ளைகளாக மாற்றியது. இதனால்தான் மதுரை பல்சமய உரையாடல்கள் நிகழ்ந்த உலகத்தின் மூதூராகத் திகழ்கிறது.
நன்றி:
Seventy-Five Years in the Madura Mission: A History of the Mission in South India Under the American Board of Commissioners for Foreign Missions
அறியப்படாத மதுரை- ந.பாண்டுரங்கன்
பசுமலை வரலாற்றுக் கதைகள் - டி. தேவராஜ்
source https://www.vikatan.com/government-and-politics/education/memories-of-madurai-the-arrival-of-educational-institutions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக