கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடகரா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது. ஒரு காரை விபத்துக்குள்ளாக்கி அதில் இருந்த் 25 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்ததாக அந்த கார் டிரைவர் போலீஸில் புகார் அளித்தார். அதை விசாரித்த போலீஸார் கொள்ளையில் ஈடுபட்டதாக மூன்றுபேரை பிடித்ததுடன் அவர்களிடம் இருந்து 1.12 கோடி ரூபாயை கைப்பற்றினர். 25 லட்சம் கொள்ளைப்போனதாக புகார் உள்ளது. ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடித்தததாக கைதானவர்கள் கூறுகின்றனர். இதில் ஏதோ விவகாரம் உள்ளது என்பதை போலீஸார் உணர்ந்தனர்.
விரிவாக விசாரணை செய்தபோது அந்த பணத்தை கொண்டுவந்தது தர்மராஜன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் என தெரியவந்தது. ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் செலவுக்காக கணக்கில் காட்டப்படாத அந்த பணம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. பணம் கொள்ளைபோன சமயத்தில் காரில் இருந்த தர்மராஜன் கேரள பா.ஜ.க-வின் ஏழு முக்கிய நிர்வாகிகளை போனில் அழைத்து பேசியுள்ளார். அதில் பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரனின் மகன் ஹரிகிருஷ்ணனிடம் பேசியுள்ளதாக கண்டறியப் பட்டது. இதையடுத்து பணம் காரில் கொண்டுவரப்பட்ட விவகாரம் கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் பக்கம் திரும்பியது.
`பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் ஹெலிகாப்டரில் பறந்து தேர்தல் பிரசாரம் செய்தது கணக்கில் வராத கள்ளப்பணத்தில்தான்’ என காங்கிரஸ் எம்.பி முரளீதரன் குற்றம்சாட்டினார். மேலும் சில வேட்பாளர்களை தேர்தலில் இருந்து வாபஸ் பெற வைக்க பணம் கொடுத்ததாக புகார்கள் கிளம்பின. அதுமட்டுமல்லாது பழங்குடியின தலைவர் ஜானு என்பவரை பா.ஜ.க-வில் இணைக்க பணம் வழங்குவதாக கே.சுரேந்திரன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு மாவட்டத்துக்கு 10 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படார பணம் வினியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் பா.ஜ.க-வினரோ இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்கள். இதுபற்றி பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "பணத்தை கொள்ளையடித்தவர்கள் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வழக்கை திசை மாற்றுகின்றனர். எங்களுக்கும் அந்த பணத்துக்கும் சம்பந்தம் இல்லை" என்கிறார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து கட்சி ரீதியாக விசாரணை நடத்த மூன்றுபேர் குழுவை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க டெல்லி தலைமை.
பா.ஜ.க-வின் பண விவகாரம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது. "சட்டசபையை நிறுத்தி வைத்துவிட்டு பா.ஜ.க-வின் பண விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்" என எதிர்கட்சியான காங்கிரஸ் மனு அளித்தது. கடந்த 7-ம் தேதி இதற்கு பதிலளித்து சட்டசபையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "பண விவகாரம் குறித்து டி.ஐ.ஜி தலைமையில் தனி டீம் விசாரணை நடத்தி வருகிறது. 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.12 கோடி ரூபாயும், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 96 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்த வழக்கு சம்பந்தமாக கேரள போலீஸிடம் கேட்டிருந்த ஆவணங்கள் கடந்த ஜூன் ஒன்றாம் தேதியே வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
கடந்த சி.பி.எம் ஆட்சியில் ஸ்வப்னா சுரேஷ் தங்கம் கடத்தல் வழக்கு போல இந்த முறை பா.ஜ.க மீதான வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-on-bjp-kerala-state-president-after-theft-money-caught
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக