Ad

சனி, 19 ஜூன், 2021

Father's Day: அற்புதங்களை நிகழ்த்தும் அப்பாவிற்கு ஒரு மகளின் அன்புக் கடிதம்!

அப்பா...

`ஆசைகள் அற்றவர், கோபக்காரர், வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாதவர், சம்பாத்தியம் தவிர வேற எதுவும் தெரியாது,  நீ பண்ண தப்பு அப்பாக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சுருவாங்க...'

இப்படி அப்பாக்களுக்கு சொல்லப்பட்ட பிம்பங்கள் உடைந்து, அப்பாவை, நண்பனாய், அம்மாவாய், அனைத்துமாய் உணர்ந்து, தோளில் சாய்ந்து அழுத தருணம் நம் எல்லோருக்கும் இருக்கும். அந்த நிமிடத்தில் உலகமே உடன் இருப்பது போன்ற புது நம்பிக்கை பிறந்திருக்கும். தன்னைப் பற்றி யோசிக்க நேரம் இல்லாத அப்பாக்கள், பிள்ளைகள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருப்பார்கள். என் அப்பாவும்... நன்றிகளை எதிர்பார்க்காத எல்லா அப்பாக்களுக்கும் மகள்களின் சார்பாக இந்த அன்புக் கடிதம்! 

அப்பா

`அப்பாக்களுக்கு அழத்தெரியாதாம்'... யார் சொன்னது.? அப்பாக்களின் கண்ணீரை நாம் பார்த்ததில்லை அவ்வளவுதான். பிரசவ அறையில் நம் பிறப்புக்காக மூச்சடைத்து அம்மா கதறிய நேரத்தில், அறைக்கு வெளியே கலங்காத அப்பாக்கள் இன்றுவரை இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. அழுகையை அடக்குவதுதான் வாழ்க்கையின் ஆகப்பெரிய துயரமே. தான் கலங்கினால் குடும்பம் உடைந்து விடும் என்ற எண்ணத்தால் பல நேரங்களில் அப்பாக்கள் அழுவது கிடையாது. கண்ணீரை அடக்கி முகத்தில் சிரிப்பை ஏந்தும் அப்பாக்களுக்கு வலிகள் எப்போதும் பழகிப்போனவை.

மகன் பிறப்பான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாராம் என் அப்பா. அது அந்தத் தலைமுறையின் எதிர்பார்ப்பு. அதில் என் அப்பாவை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால், மகனை எதிர்பார்த்திருந்த நிலையில் மகள் பிறந்துவிட்டால், அதற்குப் பின் தன் மகளே உலகமென்றாகிப்போன அப்பாக்களால்தான் அழகாகிப்போகிறது மகள்களின் உலகம். மகள் வளர வளர தன் ஆணாதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, அழிந்து, மகளின் அன்புக்கு அடிமையாகிப் போகிறார்கள் அப்பாக்கள். அப்படித்தான் என் அப்பாவும், நான் வளர வளர தானும் வளர்ந்தார், பெண் அடிமைத்தன சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்தபடி. 

குழந்தை

அப்பா முதன்முதலாக என்னைத் தூக்கியதோ, கொஞ்சியதோ நினைவில் இல்லை. ஆனால் எனக்காக நிழலாய் வந்து துணை நின்ற என் அப்பாவின் உழைப்புதான், இன்று என் அடையாளமாக மாறியிருக்கிறது. தேய்ந்தும், பல ஒட்டுத் தையல்களுடன் இருப்பதுதான் அப்பாவின் செருப்பு. டீக்கறைகள், சுருக்கங்கள், ஊதுவத்தி சுட்ட ஓட்டைகள் என்றிருக்கும் அப்பாவின் சட்டை. அப்பாவின் கைகள் ரேகை அழிந்து, காய்த்துதான் இருக்கும். உள் துணி நைந்து, கிழிந்து, தன் உயிரைவிடத் தயாராக இருக்கும் பர்ஸையும் அப்பா செலோடேப் போட்டு ஒட்டி வைத்துப் பாதுகாப்பார். `புது செருப்பு வாங்கலாம்லப்பா' என்று சொல்லும் போதெல்லாம், அவர் அதை ஏற்றுக்கொள்வதே இல்லை. மாறாக,`உனக்கு யூனிஃபார்ம் வாங்கணும்', `உன் பொறந்த நாளைக்கு டிரஸ் எடுக்கணும்' என்ற கணக்குகள்தான் அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும். நான் பிறப்பதற்கு முன்பு வரை அப்பா இப்படியெல்லாம் சிக்கனமாக இருந்ததில்லையாம். குழந்தைகள் பிறந்த பிறகு ஓர் ஆண், தான் ஏற்கும் பொறுப்பால்தான் அப்பா ஆகிறார் என்பதை, பல முறை அப்பாவின் செயல்பாடுகள் எனக்கு உணர்த்தியிருக்கின்றன.

கிராமத்தில் பிறந்த பெண்கள், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி தனக்கான அடையாளத்தை உருவாக்குவதில், அப்பாசாமிகளின் பங்குதான் முதன்மையானது, முக்கியமானது. சைக்கிள் ஓட்டுவது தொடங்கி, தெருவில் நின்று விளையாடுவது வரை `பொம்பளப் புள்ளைக்கு இதெல்லாம் தேவையா?' என எத்தனையோ கேள்விகளும், கேலிகளும் என்னை பின் தொடர்ந்த போதெல்லாம், என் ஆசைகளுக்குத் துணையாய் நின்றவர் அப்பாதான். நான் மேடைகளில் பரிசு வாங்கியபோது அப்பாவை மேடைக்குக் கீழே நான் பார்த்ததில்லை. அப்பாவின் கைகள் எனக்காக வேறு இடத்தில் உழைத்துக்கொண்டு இருக்கும். ஆனால், பள்ளியில் நான் பரிசு வாங்கிய தட்டு, தம்ளர்களைக்கூட பெரும் விருதுகள்போல அடிக்கடி தொட்டுப் பார்க்கும், அட்டைப்பெட்டிக்குள் பத்திரப்படுத்தும் அப்பாவின் கைகளை, அந்த அன்பை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. 

தங்கமீன்கள்

அப்பாவின் கண்டிப்பான முகம் சில நேரங்களில், `அப்பாவுக்கு நம்ம மேல அன்பு, அக்கறை இல்லையோ...' என்ற எண்ணத்தையும் அவ்வப்போது கொடுத்திருக்கிறதுதான். ஆனால், டீச்சர் அடித்ததில் எனக்கு ரத்தம்கட்டியபோது பள்ளியில் வந்து அவர் கர்ஜித்ததும், காய்ச்சலில் நான் படுத்தபோது அவர் பாதி உயிராகிப்போனதும் என... உலகத்திலேயே பாசமான அப்பா நம்ம அப்பாதான் என்று என்னை அவர் உணரவைத்த தருணங்கள் பல நூறு.

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அப்பா உட்பட எந்த ஆணையும் நெருங்கக்கூடாது என்பது கிராமங்களில் எழுதப்படாத விதி. ஆனால் தெருக்களில் எப்போதும் கைப்பிடித்தும், வெற்றிகளில் கட்டிப்பிடித்தும் என்னைக் கொண்டாடிய அப்பா, சில நேரங்களில் எனக்காக நாப்கின்களும் வாங்கிக் கொடுத்தது உண்டு. வயதுக்கு வந்த பின் தாவணி - பாவடை சட்டைதான் நான் படித்த பள்ளியின் சீருடை. நம் பாராம்பர்ய ஆடை என்றாலும் மைதானங்களில் விளையாடும் போது அசெளகர்யமாக இருக்கும். அதனால் பல தோழிகள் விளையாட்டு மைதானத்திற்கே வர மாட்டார்கள். இந்தப் பிரச்னையை அப்பாவிடம் சொல்லியபோது, அடுத்த வருடமே, வெளியூரில் இருக்கும் சுடிதாரை சீருடையாக கொண்ட  பள்ளியில் சேர்த்து என்னைப் படிக்க வைத்தார். 

Father (Representational Image)

இன்று நான் விதவிதமாக ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும், தையல்காரரிடம் அப்பா என்னை அழைத்துச் சென்று, அளவு எடுக்கச் சொல்லி, பார்த்துப் பார்த்து தைத்து வாங்கிய அந்த வெள்ளை நிற பூப்போட்ட சுடிதாரை நான் அணிந்தபோது, ஓர் இளவரசிபோல என்னை உணரவைத்த நாள்தான் மனதில் இனித்துக்கிடக்கிறது இப்போதுவரை.

அப்பா கல்லூரிக்குச் சென்றதில்லை. நான் கல்லூரியில் காலடியெடுத்துவைத்தபோது, `நம்ம தலைமுறையிலேயே முதல் ஆளா காலேஜுக்குப் போற...' என்று பெருமை பொங்க என்னை வழியனுப்பி மினுங்கிய அந்தக் கண்கள்தான், படிப்பு என்னும் பொறுப்பை என்னை உணரவைத்தது. அந்த கிராமத்துத் தகப்பனை பெருமைப்படுத்தும் பயணத்தில் என்னை நானே செலுத்திக்கொள்ள எனக்கு உந்துசக்தி கொடுத்தது. 

தந்தை - மகள்

சில தோல்விகளில் நான் எனர்ஜி குறையும் போதும், அடுத்தடுத்த இலக்குகளுக்காக ஊக்கம் கொடுத்தவர் அப்பாதான். வீட்டுப்பாடங்கள் எழுதுவது தொடங்கி, தேர்வு நேரத்தில் காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதுவரை எல்லாவற்றிலும் அப்பாவின் பங்கு இருக்கும். நான் செய்யும் தவறுகளையும் மறைக்காமல் அப்படியே சொல்லும் அளவிற்கான சுதந்திரமும் அப்பாவிடம் எப்போதும் இருக்கிறது. நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த பெண்ணியவாதி, என் அப்பாதான்.

ஒவ்வொரு வருடமும் தன் சேமிப்பு பணத்தை எடுத்து என் திருமணத்திற்காக நகை வாங்குவது அப்பாவுக்கு வழக்கமான ஒன்று. ஒரு வருட சேமிப்பை ஒவ்வொரு தாளாக எண்ணி நகைக்கடையில் அவர் கொடுக்கும்போது, பல முறை குற்றஉணர்வில் குறுகியிருக்கிறேன். `நகையெல்லாம் எதுக்குப்பா?' என்று கேட்டால், `நான் உன் கூட ஆயுசுக்கும் வர முடியாது. உனக்கு அவசரம்னா இது உதவும்' என்பார். அந்த நேரத்தில் அப்பாவின் கசங்கிய சட்டையைப் பார்த்து கண்கள் கலங்கியிருக்கிறேன். என்னுடைய முதல் சம்பளத்தில் நான் வாங்கிய முதல் பொருள், அப்பாவுக்கு சட்டைதான்.

எனக்குத் திருமணம் என்றதும், அதுவரை பார்க்காத ஒரு சந்தோஷத்தை அப்பாவின் முகத்தில் பார்த்தேன். எனக்காக ஓடி ஓடி ஒவ்வொன்றையும் செய்த அப்பாவின் கண்கள், என் மணநாளில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்த் துளிகளை வடித்துக்கொண்டே இருந்தன. அந்தப் பிரிவு, அப்பாவின் மீதான் அன்பை இன்னும் இன்னும் அதிகரித்தது. இதுவரை அப்பா நம்மை பார்த்துக்கொண்டது போதும், இனி அப்பாவை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொடுத்தது.

Father (Representational Image)

Also Read: ``தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் முன்னே...'' - இன்று தந்தையர் தினம்!

ஆனால் இப்போதும், `எம்ப்ளாய்மென்ட் கார்டு ரெனியூ பண்ணணும்மா' என்று நினைவூட்டி அதைச் செய்துமுடிப்பதிலிருந்து, `உனக்குப் பிடிக்குமேனு இளசான நுங்கா பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு' என்று கைகளில் கொடுப்பதுவரை... அப்பாதான் என்னை இப்போதும் பார்த்துக்கொள்கிறார். எனக்கான வேலைகள் செய்யும் போது அப்பாவுக்கு சோர்வே வருவதில்லை, நரைத்த பின்னரும்கூட. எனக்குக் கொடுத்த அன்பை இரட்டிப்பாக்கி இன்று என் மகளிடமும் கொடுக்கும் அப்பாவுக்கு... நன்றியை கண்ணீரால்தான் சொல்ல வேண்டும்!



source https://www.vikatan.com/lifestyle/relationship/a-thank-you-letter-for-my-beloved-father

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக