Ad

சனி, 19 ஜூன், 2021

முதல்முறையாக பெட்ரோல் ரூ.100-ஐத் தாண்டிய விலை! மோடி அரசுக்கு சம்பந்தம் இல்லையா?!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. அதிகபட்சமாக 108 ரூபாயைத் தொட்டுவிட்டது. இதை ஒரு பெருமையாகவோ, சாதனையாகவோ மத்திய பா.ஜ.க அரசால் மார்தட்டிக்கொள்ள முடியாது. பெட்ரோல் விலை உயர்வைக் கண்டு சமானியர்கள் கதறுகிறார்கள்... கண்ணீர் வடிக்கிறார்கள்... கோபாவேசத்துடன் போராட்டங்களை நடத்துகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) ஒரு மோட்டார் சைக்கிளுக்கு பாடை கட்டி, அதைச் சுற்றி நின்றுகொண்டு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை மாதர் சங்கத்தின் பெண்கள் நடத்தியிருக்கிறார்கள். அன்றைய தினம், கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கட்டைவண்டியில் ஆட்டோ, ஸ்கூட்டர்

‘மோடி அரசே, பெட்ரோல் விலையைக் குறையுங்கள்... டீசல் விலையைக் குறையுங்கள்... சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறையுங்கள்... என்று எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், ‘கூல் ஆக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. பெட்ரோலியத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானிடம் கேட்டால், என்ன சொல்கிறார் தெரியுமா? ‘பெட்ரோல் விலையை உயர்த்தி, சாமானிய மக்களின் தலைமீது சுமை ஏற்றுவதாக காங்கிரஸ் கட்சி கவலைப்பட்டால்... காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான வரிகளைக் குறையுங்கள்’ என்கிறார் பிரதான். ஆஹா, அருமையான யோசனை.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கவலைப்படும் அத்தனை பேரும் அதீதமாக வரிகள் விதிக்கப்படுவதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள். பெட்ரோல் மீது அளவுக்கு அதிகமாக வரிகள் விதிக்கப்படுகின்றன என்றும், வரிகளைக் குறைத்துவிட்டால் பெட்ரோல் விலை குறைந்துவிடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த சூட்சுமம் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கும் தெரிந்ததால்தான், பெட்ரோல் மீதான வரிகளைக் குறையுங்கள் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அவர் யோசனை சொல்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மட்டும் அவர் சொல்லவே இல்லை.

பெட்ரோல் நிலையம்

பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தளவில், அவர் எப்போதுமே ஏழைகளைப் பற்றி அதிகமாக கவலைப்படக்கூடியவர். தேர்தல் பிரசாரங்களிலும் மன் கி பாத் உரைகளிலும் பெரும்பாலும் ஏழைகளின் துயரங்களை நினைத்து அவர் அதிகமாக கவலைப்படுவார். எனவே, பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வால் ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது நிச்சயம் பிரதமருக்கு கவலையை உண்டாக்கியிருக்கும். பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்ந்தால் காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துவிடும் என்பதும் பிரதமருக்குத் தெரியும். விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று கவலைப்பட்டால், பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகளைக் குறைத்தாலே போதுமானது. என்ன காரணமோ தெரியவில்லை... வரிகளைக் குறைப்பதற்கு மத்திய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக, பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று பழிபோடுகிறார் பிரதமர் மோடி.

இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிய அந்த நன்னாளில், ‘எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதில் காங்கிரஸ் ஆட்சி கவனம் செலுத்தியிருந்தால், நடுத்தர மக்கள் சுமையைத் தாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது’ என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் அப்போது, முக்கியமான ஒரு கேள்வி ஒன்றையும் பிரதமர் எழுப்பினார்... ‘நம்மைப் போன்ற பன்முக, திறமைவாய்ந்த தேசம் எரிபொருளில் அதிகமாக இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டுமா?’ என்பதுதான் அந்த கேள்வி. பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றனவே. பெட்ரோல் விலை உயராமல் இருப்பதற்கு ஏழு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்கிற அப்பாவி இந்தியனின் கேள்விக்கு ஆட்சியாளர்களின் பதில் என்ன?

தர்மேந்திர பிரதான்

சரி, வரிகள் குறைப்பு நடவடிக்கை ஒருபுறம் இருக்கட்டும். பெட்ரோலியப் பொருள்களின் விலையை யார் முடிவு செய்கிறார்கள் என்ற குழப்பம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. நீண்டகாலமாக மத்திய அரசுதான் விலையைத் தீர்மானித்து வந்தது. பின்னர், அந்த அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டது. பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்துவதோ, குறைப்பதோ எண்ணெய் நிறுவனங்களின் முடிவைப் பொறுத்தது. அரசுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லப்பட்டது. அதை எல்லோரும் நம்பிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் விலை இந்தியாவில் உயரவே இல்லை. அந்த மர்மம் குறித்து பலரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Also Read: பா.ஜ.க-வை அலறவிடும் மம்தா ! அவருக்கு மட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?!

அதாவது, கடந்த மார்ச் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து பெட்ரோல் விலை உயரவே இல்லை. மேற்கு வங்கத்துக்கும் அசாம் மாநிலத்துக்கும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடியும்வரை பெட்ரோல் விலை ஒருமுறை கூட உயரவில்லை. மேலும், ஒருமுறை விலை குறைக்கப்பட்ட அதிசயமும் அப்போது நிகழ்ந்தது. மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.

எப்படா தேர்தல் முடியும் என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தவர்கள்... மே 4-ம் தேதி பெட்ரோல் விலையை உயர்த்திவிட்டார்கள். அதன் பிறகு, 24 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போது, 108 ரூபாயில் வந்து நிற்கிறது. தேர்தல் நேரத்தில் ஏன் விலைகள் உயரவில்லை? எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கிறன என்றால், சட்டமன்றத் தேர்தல்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம்

பெட்ரோல் விலை மட்டுமல்ல... ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்னும் சில மாதங்களில் 1,000 ரூபாயைத் தாண்டக்கூடிய அபாயமும் இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்கள் விலைகளில் 60 சதவிகிதம் வரிதான். அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை100 ரூபாயென்றால், அதன் அடக்கவிலை 40 ரூபாய்தான். 60 ரூபாய் வரியாக விதிக்கப்படுகின்றன. வரியைக் கணிசமாகக் குறைத்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளும் குறைந்துவிடும். மற்றொருபுறம், இந்தியாவில் அடிக்கடி தேர்தல்கள் வந்தால், பெட்ரோல் விலை உயராது என சாமானியர்களின் மனம் குமுறுகிறது. பெருந்தொற்றால் மிகுந்த இன்னல்களைச் சந்தித்துள்ள சூழலில் விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் எண்ணம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/first-time-in-india-one-litre-petrol-price-sell-above-100-rupees-is-this-right

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக