கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டிலேயே கோவை தான் முதலிடம் பிடித்துள்ளது. அதனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் இரண்டு முறை கோவை வந்து ஆய்வு செய்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்து ஆய்வு செய்தார்.
Also Read: `கோவை புறக்கணிக்கப்படவில்லை, எல்லா ஊரும் எங்க ஊர்தான்!' - முதல்வர் ஸ்டாலின்
இதை ஆதரித்தும், விமர்சித்தும் இப்போதுவரை சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர், “ஸ்டாலின் ஆய்வு செய்தது கொரோனா வார்டே கிடையாது. அது எமர்ஜென்ஸி நோயாளிகள் காத்திருக்கும் அறை” என்றெல்லாம் கூறிவந்தனர்.
ஸ்டாலின் ஆய்வு செய்த அதே இடத்தில் மக்கள் சிலர் அமர்ந்திருப்பது போலவும், ஒரு நபர் செல்ஃபி எடுப்பது போலவும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஸ்டாலின் ஆய்வு செய்த இடத்தின் தற்போதைய நிலை’ என்று சமூக வலைதளங்களில் அது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைதன்மை குறித்து விசாரித்தபோது,
“ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக அமைக்கப்பட்டது” என்றும், “இல்லை இல்லை அது வார்டுதான்” என்றும் கலவையான தகவல்கள் வந்தன. இதுகுறித்து விளக்கம் கேட்க இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரவீந்திரனை தொடர்பு கொண்டோம்.
“அது எமர்ஜென்ஸி மற்றும் ஜீரோ டிலே வார்டு. ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை உடனடியாக இங்கு அனுமதித்து, ஆம்புலன்ஸை அனுப்பிவிடுவோம். நோயாளிகளுக்கு முதல்கட்ட சிகிச்சையை இங்கு வழங்கிவிட்டு, பிறகு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அட்மிட் செய்வோம். ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கொரோனா ஐ.சி.யூ வார்டை ஆய்வு செய்தார். அதேபோல டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த 7 நோயாளிகளிடம் அந்த இடத்தில் (ஜீரோ டிலே வார்டு) வைத்து நலம் விசாரித்து, அவர்களின் கருத்துகளை கேட்டார்.
கொரோனா வார்டில் படம் எடுக்கவில்லை. டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த நோயாளிகளிடம் விசாரித்த படத்தையும், பழைய செல்ஃபி ஒன்றையும் இணைத்து பரப்பி வருகின்றனர். இப்போதுகூட அந்த வார்டில் நோயாளிகளின் இருக்கின்றனர்” என்றார்.
மேலும், அந்த வார்டின் தற்போதைய நிலை என்று டீன் ரவீந்திரன் சில படங்களை அனுப்பி வைத்தார். அதனையும் இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.
source https://www.vikatan.com/news/tamilnadu/factcheck-about-coimbatore-esi-hospitals-viral-photo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக