கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், பெங்களூருவிலுள்ள ஒரு மருத்துவமனையின் ஐ.சி.யு-வுக்குள் இருந்து பர்கா தத் தனது தொலைக்காட்சிக்கு நேர்முக பேட்டியும் வர்ணனையும் அளித்தார். இது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கோவிட் -19 தொற்றுள்ள நோயாளிகளைக் காண அவரவர் குடும்பத்தினர்கூட அனுமதிக்கப்படாத கடுமையான சூழலில், ஒரு பத்திரிகையாளரை ஐ.சி.யுவிலிருந்து `லைவ்' செய்ய அனுமதித்ததை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
பர்கா தத் இதற்கு முன்பே இதுபோன்றதொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அப்போது தன் தந்தையின் மரணத்தைக்கூட தனது பிரபலத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தினாரெனப் பரபரப்பாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
பர்காவின் தந்தை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது, ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக தந்தையின் மரணத்துக்குப் பிறகு கூறியிருந்தார். ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர் சோனு, ஆக்சிஜன் சிலிண்டர் நிரம்பியிருப்பதாகவும், பர்கா தத்தும் அதைச் சோதித்துப் பார்த்ததாகவும் கூறினார்.
``பயணத்தின்போது அவர் குறுக்கிட்டு, ஆக்ஸிஜன் சப்ளையை சரிபார்க்க மீண்டும் மீண்டும் கூறினார். அது நன்றாக வேலை செய்கிறது என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். நாங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மருத்துவமனையை அடைந்தோம். அவருடைய இரண்டு வாகனங்களும் கூடவே வந்தன. நோயாளியின் பராமரிப்பாளரும் கூடவே இருந்தார். நோயாளியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஆம்புலன்சில் இருந்து இறங்கினார். அதன் பிறகும் நான் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே 15-20 நிமிடங்கள் நின்றிருந்தேன்” என்று ஆம்புலன்ஸ் டிரைவர் சோனு கூறியிருந்தார்.
இப்போது மருத்துவர்கள் அணிவது போன்ற பிபிஈ கிட் உடையும் மைக்குமாக ஐ.சி.யு-வின் உள்ளே சென்ற பர்காவைத் தொடர்ந்து அவரது கேமரா குழுவும் நுழைந்தது. அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர் முன் மைக்கை நீட்டி ஒரு பேட்டியும் எடுத்தார் பர்கா. அதோடு, தான் ஐ.சி.யூ அறைக்குள் இருப்பதைப் பற்றி ஒரு ட்வீட்டும் செய்தார் அவர். இதைத்தான் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து பர்காவின் பணியை #VultureJournalism எனவும் சிலர் விமர்சித்துள்ளனர்.
அதோடு, பர்காவுக்கு பேட்டி கொடுத்த மருத்துவர் மீதும், நோயாளிகளுக்கும் பிறருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ஐ.சி.யு-வுக்குள் நுழைந்த பர்கா குழுவினர் மீதும், இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதோடு, எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பின்பற்றாமல் இருந்த மருத்துவமனை நிர்வாகம் மீதும் கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
- எஸ்.சங்கீதா
source https://www.vikatan.com/news/india/netizens-slams-barkha-dutt-live-coverage-from-icu-ward-of-bengaluru-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக