க்ரியேட்டிவிட்டிக்கு எல்லையே இல்லை. அதுவும் கார்களை ரீ-மாடிஃபிகேஷன் செய்யும் ஐடியாவுக்கு ‛வானமே எல்லை!’ நம் ஊரில் பல்ஸரை ஹார்லி டேவிட்சன் ஆக்குவார்கள்; ஸ்கூட்டியை டுகாட்டி ஆக்குவார்கள்; ஆம்னியை ஆடி ஆக்குவார்கள். அதிலும் சொகுசு கார்களைப் பொருத்தவரை ரீ-மாடிஃபிகேஷன் செய்வதில் யாரும் தலையிடவே முடியாது. ஆனால், எல்லாமே விதிகளுக்கு உட்பட்டுத்தான் சாலையில் ஓட வேண்டும் என்பது சட்டம்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பேன்ட்டம் (Phantom) கார் ஒன்றை இத்தாலி நாட்டின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சீஸ் செய்துள்ளதுதான் ஹாட் டாப்பிக். காரணம், அந்த காரின் இன்டீரியர் கஸ்டமைசேஷன் அப்படி. அலிகேட்டர் என்று சொல்லப்படும் முதலைத் தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட சீட்களை அந்த காருக்குப் பொருத்தியிருப்பது தெரிய வந்துள்ளதால், இன்டீரியரை அகற்றுவதோடு - அந்த காரின் உரிமையாளருக்குக் கடுமையான அபராதம் விதித்திருக்கிறது இத்தாலி நாட்டு சுங்கத்துறை.
ரோல்ஸ் ராய்ஸ் என்பது ப்ரெஸ்டீஜியஸ் கார். அந்த நிறுவனத்தின் விலை அதிகமான கார், பேன்ட்டம். இந்திய மதிப்பில் இதன் ஆன்ரோடு விலை சுமார் 10.5 கோடி ரூபாய். இதில் கம்பெனி தரும் ஆக்சஸரீஸ்கள் பொருத்து விலை இன்னும் கூடும். அதில் ரீ-மாடிஃபிகேஷனைப் பொருத்தவரை, கம்பெனியின் Brochure-ல் உள்ள சில கஸ்டமைசேஷனுக்குத்தான் அனுமதி. ஆனால், கம்பெனி விதிமுறைகளில் இல்லாதபடி அதன் கஸ்டமைசேஷன் அமைந்திருந்ததுதான் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கோபத்துக்குக் காரணம். அருகிவரும் விலங்கினமான முதலையின் தோலைப் பயன்படுத்தி, ஆஃப்டர் மார்க்கெட்டில் அதன் சீட்களைத் தயாரித்திருந்தது தெரிய வந்ததால், அந்த காரை சீஸ் செய்துள்ளார்கள் அதிகாரிகள்.
ரஷ்யாவிலிருந்து அந்த கார் இத்தாலிக்கு இறக்குமதி ஆனபோது பிடிபட்டிருக்கிறது. ரோம் நகரில் உள்ள மிகப்பெரிய ப்ரீமியம் கார் ஷோரூமுக்கு அது மறுவிற்பனைக்காக வந்த கார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன கார்கள், உலகம் முழுதும் வெரைட்டியாக கஸ்டமைசேஷன் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், முதலைத் தோல் சீட் கொண்ட ஒரு சொகுசு கார் இப்போதுதான் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
உலகளவில் முதலைகள் என்பது - அழிந்து வரும், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் வகையறாவில் வரும் விலங்கினம். வாஷிங்டனில் உள்ள (Convention on International Trade in Endangered Species of Wild) CITES என்றொரு அமைப்புக்குக் கீழ் உள்ள 160 நாடுகளுக்கு மட்டுமே முதலைத் தோல் ஏற்றுமதிக்கு அனுமதி உண்டு. இதற்கும் CITES-ன் சான்றிதழ் தேவை.
அதை விடுங்க… நாம் எல்லோருக்குமே நமது வாகனத்தை நமக்குப் பிடித்ததுபோல் கஸ்டமைஸ் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். நம் ஊரில் உங்கள் வாகனங்களை மாடிஃபிடிகேஷன் செய்யும்போது, இந்த 8 விஷயங்களைக் கவனிங்க!
நிறம்
உங்கள் வாகனத்தை எந்த கலருக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இந்த கலர் மாற்றத்துக்கு RTO அனுமதி நிச்சயம் வேண்டும். ஆர்சி புத்தகத்திலும் இதை எண்டோர்ஸ் பண்ண மறக்காதீர்கள். அதைத் தாண்டி ‘Vinyl Body Wrap’ பொருத்துவதும் வேண்டாமே!
டயர்கள்
உங்கள் காரின் டயர்களை எந்த சைஸுக்கும் செக்ஸனுக்கும் வேண்டுமானாலும் மாற்றி்க் கொள்ளலாம். ஆனால், அது காரின் அகலத்தைத் தாண்டி வெளியே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது சட்டப்படி குற்றம் இல்லை. ஆனால், காரின் நிலைத்தன்மையும் மைலேஜும் காலியாகும். பாதசாரிகளுக்கும் இது ஆபத்து.
சீட்கள்
சீட்களின் எண்ணிக்கையை மாற்றுதல் சுத்தமாக நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. லெதர் சீட்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், இதுபோன்ற விலங்குத் தோல்களை லெதர் சீட்களாகப் பயன்படுத்தினால்… சட்ட விரோதம்!
அலாய் வீல்கள்
அலாய் வீல்களைப் பொருத்தவரை உங்கள் இஷ்டம்தான். இதிலும் சட்டச் சிக்கல் இல்லை. ஆனால், இதில் செக்ஷன் மாறினால், மைலேஜ் அடிவாங்கும்.
இன்ஜின்
உங்கள் வாகனத்தின் இன்ஜின் சிசி, அந்த நிறுவனத்தின் தயாரிப்பு அளவைத் தாண்டக் கூடாது. உதாரணத்துக்கு, ஒரு 150 சிசி பல்ஸரில் 200 சிசி இன்ஜினைப் பொருத்துவது தப்பு பாஸ்.
ஹார்ன்
ஆஃப்டர் மார்க்கெட்டில் ஹார்ன்கள்தான் எக்கச்சக்கமாகக் கிடைக்கும். உங்கள் ஹார்னின் சத்தம் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால், தயாரிப்பு அளவைவிடத் தாண்டக் கூடாது. உதாரணத்துக்கு, 80 டெசிபல் அளவைத் தாண்டினால் சட்டப்படி குற்றம். பல குரல் கொண்ட மல்ட்டி ஹார்ன்களுக்கும் தடா!
வாகனத்தின் அளவு
ARAI (Automotive Research Association of India) அனுமதித்துள்ள அளவைத் தாண்டி உங்கள் வாகனத்தின் நீள, அகல, உயரத்தை மாற்றுவது சட்டப்படி குற்றம். ARAI-ன் அனுமதி இருந்தால் ஓகே!
எக்ஸாஸ்ட்
சிலர் சாதாரண ஸ்ப்ளெண்டருக்கு 'டப் டுப்’ என ஹை பீட் எக்ஸாஸ்ட் பொருத்தி பறப்பார்கள். இதுவும் சட்டப்படி குற்றம். அதேபோல் டபுள் எக்ஸாஸ்ட் பொருத்துவதும் தவறு. ஆஃப்டர் மார்க்கெட்டில் எக்ஸாஸ்ட் வாங்கிப் பொருத்தினால், RTO-வின் அப்ரூவல் முத்திரை இருக்கிறதா என்று பார்க்கவும்.
source https://www.vikatan.com/automobile/motor/rolls-royce-car-with-crocodile-upholstery-seized
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக