Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

Covid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா?

கொரோனா தொற்றுக்குள்ளாகும் பலருக்கும் நீரிழிவு நோய் வருவதாகச் சொல்கிறார்களே.... அது எந்தளவுக்கு உண்மை?

- சுருளி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் முத்துச்செல்லக்குமார்.

``கோவிட் நோய்த்தொற்றால் அந்த நோயாளிக்கு நீரிழிவு ஏற்படுமா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் முடிவு தெரிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். இந்த வைரஸ் தனது கூம்பு போன்ற ஸ்பைக் புரதத்தின் உதவியால் நம் நுரையீரலில் உள்ள ஏசிஈ 2 ஏற்பிகளில் எளிதாக இணைகிறது. இந்த ஏற்பிகள் நுரையீரலில் மட்டுமன்றி நம் உடலின் பல உறுப்புகளிலும் உள்ளன. ஆகவே, கணையத்திலுள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களையும் (பி செல்) இந்த வைரஸ் நெருங்க வாய்ப்புண்டு. அங்கு இந்த ஏற்பிகள் இருந்து செயல்படுகின்றனவா என்பது இதுவரை முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் வைரஸானது இந்த பீட்டா செல்களுக்குள் நுழைய அதற்கு உதவும் துணை ஏற்பிகள் அங்கிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த வைரஸ், பீட்டா செல்களைப் பாதித்தால் நோயாளிக்கு இன்சுலின் சுரப்பு குறையும். எனவே, அவர் `புதிய நீரிழிவு நோயாளி'யாக மாற வாய்ப்பு உண்டு. குறிப்பாக டைப் 1 டயாபடிஸ் எனப்படும் முதல்வகை நீரிழிவு நோயாளியாக மாற வாய்ப்பு உண்டு.

ஏற்கெனவே ஒரு வைரஸ் (Coxsackievirus) தொற்றால் கணைய பீட்டா செல்கள் அழிந்து முதல்வகை நீரிழிவு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்கள், பீட்டா செல்களை அழித்துவிடுகின்றன. எனவே, கோவிட் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமாகி பல வாரங்கள் ஆனபோதும், ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தாத போதும் ஏற்கெனவே நீரிழிவு இல்லாதவராக இருந்து இப்போது ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தால் அவருக்கு கோவிட் 19 தொற்றால் நீரிழிவு வந்ததா என கண்காணித்து தீர்மானிக்க வேண்டும்.

HbA1c எனும் ரத்தப் பரிசோதனையில் கடந்த 3 மாதங்களில் ரத்தச் சர்க்கரையின் அளவு எப்படியிருந்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அது நார்மலாக இருந்து, கோவிட் தொற்றுக்குப் பிறகு, அதிகரித்திருந்தால் கோவிட் தொற்றால் அது அதிகரித்திருக்கலாம் என சந்தேகிக்கலாம்.

நீரிழிவு நோய்

Also Read: Covid Questions: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

கொரோனா தொற்றுக்கு முன்பும் HbA1c அளவானது அதிகமிருந்து, தொற்றுக்குப் பிறகும் அது அதிகமாகவே இருந்தால், அவர்கள் ஏற்கெனவே நீரிழிவுநோய் பாதிப்புக்குள்ளாகும் `ப்ரீ டயாபடிக்' நிலையில் இருந்திருக்கலாம் அல்லது அதுவரை நீரிழிவு இருந்ததே தெரியாதவர்களாகவும் இருக்கலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/are-people-who-got-infected-to-covid-are-likely-to-become-diabetic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக