Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

Solar Eclipse: 2021-ன் முதல் சூரிய கிரகணம், இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா?

கடந்த மே 26 அன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாகவும், வெளிச்சமாகவும் நிலவு காட்சியளித்தது. உலகின் பல மூலைகளில் இருந்து அந்த நிகழ்வை மக்கள் பார்த்து ரசித்தார்கள். அன்று காட்சியளித்த நிலவின் அழகிய புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால், அது இந்தியாவில் தெரியவில்லை. அந்த சந்திர கிரகணத்தையடுத்து இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஜூன் 10 (வியாழக்கிழமை) நிகழவிருக்கிறது. இந்த நிகழ்வையும் உலகின் சில பகுதிகளில் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என நாசா தன் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

சூரிய கிரகணம்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வரும் ஜூன் 10 அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்குத் தூரத்தில் நிலவு இருக்காது என்பதால், சூரியன் நிலவை மறைக்கும் அந்த நேரத்தில் சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலானவர்களால் பார்க்க முடியாது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்களால் மட்டும் பகுதியாக இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Lunar Eclipse: 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சந்திர கிரகணம்... இந்தியாவில் பார்க்க முடியுமா?

இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் சில தளங்களில் ஸ்ட்ரீமிங்கில் காணலாம். Timeanddate.com சூரிய கிரகணத்தில் நேரலை செய்வதற்கான லிங்க்கை அதன் தளத்தில் பகிர்ந்திருக்கிறது.


source https://www.vikatan.com/science/astronomy/first-solar-eclipse-of-2021-is-going-to-happen-on-june-10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக