Ad

சனி, 19 ஜூன், 2021

Covid Questions: தடுப்பூசி போட்ட பின் அறிகுறிகள் இல்லையெனில் மருந்து வேலை செய்யவில்லை என அர்த்தமா?

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது லேசான தலைவலியும் உடல் அசதியும் இருந்தது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போதும் அந்த அறிகுறிகள் இருக்குமா? எத்தனை நாள்களுக்கு அந்த அறிகுறிகள் நீடிக்கும்? ரத்தம் உறைதல் பாதிப்பு வருமா?

- ஆறுமுகச்சந்திரன் (விகடன் இணையத்திலிருந்து)

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் தடுப்பூசியின் மருந்து வேலை செய்யவில்லை என்கிறார்களே... அது உண்மையா?

- அழகுசுந்தரம் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

``கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் டோஸ் போட்டுக்கொண்டபோது காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் வந்து, அடுத்த டோஸில் அவை இல்லாமலிருக்கலாம். முதல் டோஸில் அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு இரண்டாவது டோஸில் அறிகுறிகள் தென்படலாம். அல்லது இரண்டு டோஸ்களிலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் வரலாம். அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். தடுப்பூசியின் மூலம் ஒரு ஆன்டிஜெனை உடலுக்குள் கொடுக்கிறோம். அது உடலுக்குள் எத்தகைய ரியாக்ஷனை ஏற்படுத்துகிறது என்பதுதான் இது. அதற்கு நீங்கள் முதலில் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஆன்டிஜென் உள்ளே நுழையும்போது நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலானது அதை வெளியேற்ற உடலிலுள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டிவிடும். அப்படித் தூண்டப்படும்போது ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே விளைவுகள் இருக்கும். தீவிர நோய் எதிர்ப்பாற்றல் உள்ள, ஆன்டிபாடி அதிகமுள்ள நபராக இருந்தால் தடுப்பூசியால் எந்தப் பக்க விளைவுமே ஏற்படாமலும் போகலாம். ஆன்டிஜென் உள்ளே போய்தான் ஆன்டிபாடியை உருவாக்கப் போகிறது என்றால் அதற்கேற்ப தடுப்பூசியின் ரியாக்ஷன் வேறுபடும். அதற்காக காய்ச்சலோ, உடல் வலியோ வந்தால்தான் தடுப்பூசி வேலை செய்கிறது என்றெல்லாம் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?

முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதும் குறைந்த அளவில் உங்கள் உடலுக்குள் ஆன்டிஜென் வந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அது வெள்ளை அணுக்களை எதிர்த்து வெற்றிபெற்றுவிடுகிறது. அடுத்த டோஸ் கொடுக்கும்போது அது மீண்டும் தூண்டப்படுகிறது. அதன் விளைவாக வேறொரு புதிய அறிகுறி உருவாகலாம். தடுப்பூசியின் நோக்கமே ஒரு நோயை மிகமிகக் குறைந்த அளவில் உருவாக்கி, அந்த நோயில் சாதாரணமாக என்னென்ன பிரச்னைகள் வருமோ, அவற்றை உடலுக்குள் உருவாக்கி, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதுதான். தடுப்பூசி என்பது உள்ளே நுழையும் கிருமியை எப்போதும் தடுக்காது. அந்தக் கிருமியோடு போராட உடல் தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்ள உதவும். எனவே, அறிகுறிகள் மாறுபடுவதை நினைத்து எந்தக் குழப்பமும் கொள்ள வேண்டாம். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் ரத்தம் உறைதல் பிரச்னையெல்லாம் நிச்சயம் வராது. பயப்பட வேண்டாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/if-covid-19-vaccine-didnt-show-the-symptoms-means-that-is-not-efficient

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக