Ad

சனி, 19 ஜூன், 2021

கொண்டைக்கடலை சாலட் | கிரீக் சாலட் | கேபேஜ் கோல்ஸ்லா... சாலட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக்கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது... சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும். வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும்.

வெள்ளரிக்காயையும் வெங்காயத்தையும் வெட்டிப் போட்டுச் சாப்பிடுவதுதான் சாலட் என நினைக்காதீர்கள். தினம் தினம் வெரைட்டியாக செய்து சாப்பிட வித்தியாசமான சாலட் ரெசிப்பீஸ் இதோ உங்களுக்கு... தினமும் சாப்பிட முடியாதவர்கள் வீக் எண்டிலாவது முயற்சி செய்யலாமே...

தேவையானவை:

கொண்டைக்கடலை - அரை கப்
வெங்காயத்தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) - 2
சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், பச்சை குடமிளகாய் - தலா அரை
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - ஒரு பல் (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

கொண்டைக்கடலை சாலட்

செய்முறை:

கொண்டைக்கடலையை ஊறவைத்து லேசாக உப்பு போட்டு வேக வைக்கவும். வெங்காயத்தாளின் அடியிலுள்ள வெள்ளை வெங்காயம், மூன்று நிற குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும்.

வெங்காயத்தாளின் பச்சை பாகத்தைப் பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி நன்றாகக் குலுக்கினால் சாலட் டிரெஸ்ஸிங் தயார்.

வேகவைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய காய்கறிகள், லெட்யூஸ் இலைகள், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு, சாலட் டிரெஸ்ஸிங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சைப் பாகத்தை மேலே தூவிப் பரிமாறவும்.

தேவையானவை:

வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா ஒன்று
தக்காளி (கெட்டியானது) - 2
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
பனீர் - 100 கிராம்
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
பூண்டு பவுடர் - அரை டீஸ்பூன் (அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்)
உப்பு - தேவைக்கேற்ப

கிரீக் சாலட்

செய்முறை:

குடமிளகாய்கள், தக்காளி ஆகியவற்றை விதைகளை எடுத்துவிட்டு சதுரங்களாக வெட்டவும். வெங்காயம், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் சதுரமான துண்டுகளாக வெட்டவும். லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பௌலில் சேர்க்கவும்.

அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், ஓரிகானோ, பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். நறுக்கிய காய்கறி கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வெளிநாடுகளில் கிரீக் சாலடில் ஃபெட்டா சீஸ் என்னும் சீஸ் வகையைச் சேர்ப்பது வழக்கம். இதற்குப் பதில் நம் நாட்டில் பனீர் சேர்க்கலாம்).

தேவையானவை:

நறுக்கிய பச்சை கோஸ், நறுக்கிய சிவப்பு கோஸ் - தலா ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

கேபேஜ் கோல்ஸ்லா

செய்முறை:

பச்சை கோஸ், சிவப்பு கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளை நன்றாகக் கழுவி துடைத்து, நீள நீளமாக மெல்லிய குச்சியைப் போல நறுக்கவும். கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்கா விட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். வடிகட்டிய தயிருடன் சர்க்கரை, உப்பு, கடுகு பேஸ்ட் (அ) பொடி, மிளகுத்தூள், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு ஆகிவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் டிரெஸ்ஸிங் தயார். நறுக்கிய காய்கறிகளை ஒரு பெரிய பவுலில் போடவும். இதனுடன் டிரெஸ்ஸிங்கை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: பொதுவாக கோஸ் கோல்ஸ்லாவில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையானவை:

கோதுமை ரவை - கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய் - தலா ஒன்று
புரோக்கோலி - பாதியளவு
கெட்டியான தக்காளி - 2
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 7 அல்லது 8
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

ரோஸ்டட் வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

செய்முறை:

கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். மூன்று கலர் குடமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். புரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

`அவன்’ ட்ரேயில் ஆலிவ் ஆயிலை ஊற்றி நறுக்கிய கலர் குடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றைப் போட்டு 15 - 20 நிமிடங்கள் நிறம் மாறாமல் ரோஸ்ட் செய்யவும் (இல்லையென்றால் ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும்). பிறகு, வதக்கிய குடமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (புரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பௌலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:
இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம் அல்லது வேகவைத்த சிறுதானியங்களையும் சேர்க்கலாம்.



source https://www.vikatan.com/food/recipes/peas-salad-greek-salad-cabbage-ghonsla-salad-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக