வெற்றிகரமாக சசிகலாவின் 4-வது ஆடியோவும் ரிலீஸாகிவிட்டது! அ.தி.மு.க தொண்டர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு சசிகலா பேசியதாக வெளியாகிவரும் ஆடியோக்கள் கடந்த சில தினங்களாக அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், நேற்று கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா ரகுபதி என்ற தொண்டரிடம் சசிகலா பேசுகிற ஆடியோ வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை எகிறவைத்து வருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து தமிழ்நாடு திரும்பிய சசிகலா, 2021 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே, 'அரசியலை விட்டு விலகுகிறேன்' என யாரும் எதிர்பாராத வகையிலான முடிவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் சசிகலா.
2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக, அ.தி.மு.க-வில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பிறகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி சார்பில் அறிக்கை வெளியானது. ஆனாலும் இந்தத் தேர்வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முழு சம்மதம் இல்லை என்பதுபோன்ற செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை உறுதிப்படுத்துவதுபோல், அண்மைக்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனியே அறிக்கைகள் வெளியிடுவதும், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட விதத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிப்பதுமான உட்கட்சிப் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. அ.தி.மு.க தலைவர்களிடையேயான இந்த முரண்பாடு கட்சியின் தொண்டர்களுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கட்சித் தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக ஒரு ஆடியோ சமூக ஊடகம் வழியே பரவியது.
இந்த ஆடியோவில், 'தொண்டர்கள் யாரும் கலங்கவேண்டாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சியில் இன்றைக்கு இவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். யாரும் கவலைப்படவேண்டாம். விரைவிலேயே நான் கட்சியை வழிநடத்த வருவேன்' என்ற ரீதியில் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளில் சசிகலா பேசியிருந்தார். மேலும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையிலான மோதல்களையும் இந்த ஆடியோ தகவல் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இதையடுத்தும் சில ஆடியோக்கள் வெளியாகின. இதில், 'எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும்? ஆனாலும் தொண்டர்கள் யாரும் கவலைப்படாதீர்கள். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க-வைக் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன்' என்று வெளிப்படையாகவே பேசியிருந்தார் சசிகலா.
இப்படி சசிகலா பேசியதாக அடுத்தடுத்து வெளியாகிவரும் ஆடியோக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ''சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே சிலர் இதுபோன்ற முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் இந்தக் குழப்பத்துக்கு செவி சாய்க்க மாட்டார்கள்'' என்றார். ஆனாலும் அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு விரைவில் சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது போன்ற செய்திகள் கட்சி வட்டாரங்களிலிருந்தே கசிய ஆரம்பித்திருக்கின்றன. சசிகலா ரீ என்ட்ரி குறித்தான தகவல்களையெல்லாம் உறுதிப்படுத்துவதுபோல், அ.தி.மு.க தலைவர்கள் பலரும் எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக சொல்லாமல், நடக்கும் விஷயங்களை அமைதியாகக் கண்காணித்தபடி கனத்த மௌனம் காத்து வருகின்றனர்.
சசிகலா ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தாமல், அ.தி.மு.க தலைவர்கள் இப்படி அமைதிகாத்து வருவதே, சசிகலாவின் வருகையை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது என்கின்றனர் தமிழக அரசியலை ஆழ்ந்து கவனித்துவருபவர்கள். இதுகுறித்து அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசியபோது, தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையோடு நம்மிடையே பேசியவர்கள், ''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க சார்பாக போட்டியிட மொத்தம் 8,227 பேர் விருப்பமனு கொடுத்தனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்கூட நடத்தப்படவில்லையே என்ற ஆதங்கம் இவர்களில் நிறையபேருக்கு இருக்கிறது.
இப்படி தலைமை மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் முகவரி, டெலிபோன் எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சசிகலா தரப்புக்கு போய் சேர்ந்துவிட்டது. இதுதவிர, கடந்த வாரத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் சசிகலாவை நேரிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் மனம் விட்டுப் பேசிய சசிகலா, 'நீங்கள்தான் என்னைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தீர்கள். அப்புறம் நீங்களே என்னை கட்சியைவிட்டு நீக்கி, புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனவும் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். இப்போது கட்சியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். மறுபடியும் நான் கட்சிக்குள் வருவதாக இருந்தால், பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டுதான் வருவேன். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்யுங்கள்' என்று கட்டளையிட்டிருக்கிறார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்திடமும் தனது முடிவு குறித்து போனில் நீண்டநேரம் உரையாடியிருக்கிறார். சசிகலாவின் இந்தத் திட்டத்துக்கு ஓ.பி.எஸ்-ஸும் முழு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
Also Read: அமுல் நிறுவனத்தை சைவ பால் தயாரிக்க சொன்ன பீட்டா; வலுக்கும் எதிர்ப்பு!
அதாவது சசிகலா, பொதுச்செயலாளர், ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுதான் டீல். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பொதுக்குழு உறுப்பினர்களில் தனக்கு ஆதரவாக உள்ள 600 பேரும் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதை ஓ.பி.எஸ்-ஸும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
கட்சியில் சீட் கிடைக்காது அதிருப்தியில் உள்ளவர்கள், கட்சியில் கொங்கு மண்டலத்துக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பிடிக்காத பல்வேறு சமூகத்தையும் சேர்ந்தவர்கள், சசிகலாவினால் கட்சிப் பொறுப்புகளைப் பெற்ற ஆதரவாளர்கள் எனத் தனித்தனியான பட்டியல்கள் அனைத்தையும் சசிகலாவின் கைகளில் கசேர்த்துவிட்டனர் இந்த முக்கியஸ்தர்கள். இதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுப்பதுதான் திட்டம். இதன் முதல்படியாகத்தான், கட்சியினர் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறார் சசிகலா.
கட்சியின் அடிப்படைப் பலமாக இருக்கும் சாதாரண தொண்டர்களுக்கும் தானே போன் செய்து நலம் விசாரிக்கிற இந்த டெக்னிக், கட்சித் தொண்டர்களிடையே நன்றாகவே எடுபட்டிருக்கிறது. இந்த ஐடியாவை சசிகலாவுக்கு வழங்கியதோடு, கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகளையும் செய்துவருவதில் முக்கியமானவர் அ.தி.முக-வின் நியமன எம்.பி ஒருவர்தான்.
ஓ.பி.எஸ் தவிர மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேரும் சசிகலாவிடம் பேசி, தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சசிகலாவோடு பேசிவருகிறார்கள். இதற்கிடையே, எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் வி.ஐ.பி-கள், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, ஜெயிக்கிற அணியில் இடம்பிடித்துவிடும் முயற்சியாக அமைதி காத்துவருகிறார்கள்'' என்கின்றனர்.
Also Read: அரசு வழக்கறிஞர் நியமனம்! - உஷ்ணத்தில் உடன்பிறப்புகள்
இதற்கிடையே, தற்போது சசிகலா குடியிருந்துவரும் தி.நகர் வீடு, கட்சிக்காரர்களை நேரில் சந்தித்துப்பேசுவதற்கு உண்டான வசதிகளோடு இல்லையாம். எனவே, பெசன்ட்நகரில் உள்ள தன் கணவரது பங்களா வீட்டைப் புதுப்பித்து விரைவில், அங்கே குடிபோகவிருக்கிறார் சசிகலா.
இதற்கான வேலைகள் எல்லாம் ஜரூராக நடைபெற்று வருகிறது. போயஸ்கார்டனில், சசிகலாவுக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் புதிய வீட்டுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட சூழலிலும், 'அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகுதான், போயஸ்கார்டன் புது வீட்டுக்கு வருவேன்' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சசிகலா கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/policies/article-about-reason-behind-the-sasikalas-phone-call-to-the-admk-party-members
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக