உலகம் நம்பமுடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் நவீனமடைந்துகொண்டே செல்கிறது. ஆனால், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை நிலை ஒவ்வொரு நாளும் பின்னோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித உரிமை, சமூக நீதி போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இக்காலகட்டத்தில்தான் சக மனிதனை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் அவலமும் அரங்கேறுகிறது.
சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், இனத்தின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள், தங்கள் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் பழங்குடிகள் என இன்றைய நவீன உலகில் விளிம்புநிலை மக்களாக மாற்றப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் அநேகம். என்றாலும், இவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், இவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் ஏராளமான போராளிகளும், செயற்பாட்டாளர்களும் இன்று களத்தில் நிற்கின்றனர்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகச் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய புரட்சிகரச் சிந்தனையாலும், தீரமிக்கப் போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினான் ஓர் இளைஞன்; இறந்து 120 ஆண்டுகளாகிவிட்ட போதும், இன்றளவும் பழங்குடிகள் மத்தியிலும், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞன்தான் பிர்சா முண்டா.
"உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்த பிர்சா முண்டா, இந்தியாவில் பழங்குடிகள் உரிமைக்கான முதல் போராட்டத்தை முன்னெடுத்தவர். பிரிட்டிஷ் இந்தியாவில், அன்றைய பீகார் மாநிலத்தில் உலிஹதி என்ற கிராமத்தில் 1875-ம் ஆண்டு சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு முண்டா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் பிர்சா முண்டா.
இன்றைய ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார் மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் விடுதலை வீரரான பிர்சா, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், சாதிய, நிலப் பிரபுத்துவத்தையும் ஒரே நேரத்தில் எதிர்த்தவர்.
இந்தியாவின் காடுகளை தனக்குச் சொந்தமாக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தபோது, "நீர் நமது... நிலம் நமது... வனம் நமது!" என்ற முழக்கத்தின் மூலம், பழங்குடி மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார் பிர்சா முண்டா. பழங்குடிகள் வரலாற்றின் முதல் போராட்டமான இது நடந்த 1895-ம் ஆண்டு பிர்சா முண்டாவின் வயது வெறும் 19 தான்.
Also Read: பழங்குடிகள், தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் - அமெரிக்காவில் கூடிய தமிழர்கள்
நிலவுடமையாளர்கள், ஜமீன்தார்கள் உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது "ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்துப் படை திரட்டிப் போராடினார். "உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" எனும் கோட்பாட்டுக்குச் செயல் வடிவம் தந்த பிர்சா முண்டாவை, `தார்தி அபா' என்று பழங்குடிகள் அழைக்கத் தொடங்கினர். ‘தார்தி அபா’ என்றால் ‘மண்ணின் தகப்பன்' என்று பொருள்.
1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்' என்று பெயர். பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக, 1900-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிர்சா முண்டா கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலிருந்த மூன்று மாதங்களில், ரத்த வாந்தியெடுத்து, கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிர்சா முண்டா, காலரா பாதிப்பால் இறந்துவிட்டதாகப் பிரிட்டிஷ் காவல்துறை அறிவித்தது; பிர்சா முண்டா இறந்தபோது அவருக்கு வயது 25.
பிர்சா முண்டா இறந்து சரியாக எட்டு ஆண்டுகள் கழித்து சோட்டாநாக்பூர் சட்டம் (Chotanagpur Tenancy Act 1908) கொண்டுவரப்பட்டது. ஆதிவாசிகளின் நிலத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்தது. பிர்சா முண்டாவை நினைவுகூரும் வகையில் இன்றைக்கு அவர் பெயரில் ஜார்கண்டில் விமான நிலையம், பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பழங்குடிகளின் வாழ்வில் இத்தகையை ஒரு போராட்ட வரலாறு இருந்தபோதிலும், இன்றளவிலும் அவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படவில்லை. வளர்ச்சி நடவடிக்கைகள் என்ற பெயரில் முதலில் பாதிப்புக்குள்ளாவது பழங்குடிகளே. இறந்து 120 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் அதே தீவிரத்துடன் இன்றும் நினைவுகூறப்படுகிறார் பிர்சா முண்டா; என்றாலும் அவர் விட்டுச் சென்ற பணியும், அவர் கண்ட கனவும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது!
source https://www.vikatan.com/oddities/miscellaneous/tribal-freedom-fighter-activist-birsa-mundas-121st-death-anniversary-remembrance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக