Ad

வியாழன், 17 ஜூன், 2021

திருச்சி: கிடப்பில் மலைக்கோட்டை ரோப் கார்; அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு! - நிறைவேற்றுமா திமுக?

கடந்த தேர்தல் நேரத்தில் மலைக்கோட்டைக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க-வினர் வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் வெற்றிபெற்ற பிறகு, அத்திட்டத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தற்போது, இவ்விவகாரத்தை தி.மு.க கையில் எடுத்திருக்கிறது. இவர்களாவது நிறைவேற்றுவார்களா என ஏங்குகிறார்கள் திருச்சி மக்கள்.

மலைக்கோட்டையில் ஆய்வு செய்யும் அமைச்சர் சேகர்பாபு

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மாணிக்க விநாயகர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். ``ஐந்து திருக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.

சேகர்பாபு ஆய்வு

அதன்படி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருநீர் மலை முருகன் கோவில், சோளிங்கர் நரசிம்மர் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ரோப் கார் வசதி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கோவிலாக ஆய்வு செய்து வருகிறோம். திருச்சி மலைக்கோட்டை கோவிலிலும் ஆய்வு செய்தோம் விரைவில் நவீனத் தொழில்நுட்ப வசதியுடன் உலகத்தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்: என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டுச் சென்றார் அமைச்சர் சேகர்பாபு.

திருச்சி மலைக்கோட்டை

இதுகுறித்து மலைக்கோட்டை பகுதி மக்களிடம் பேசினோம். ``273 அடி உயரமுள்ள மலைக்கோயிலுக்குச் செல்ல 418 படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்குச் செல்வதற்குள் ரொம்ப சிரமப்பட்டுத் தான் செல்லவேண்டும். நடக்க முடியாதவர்களும் படிக்கட்டில் ஏறமுடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச் சென்று விடுகின்றனர்.

அமைச்சர் சேகர்பாபு

அப்படிப்பட்டவர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைக்கப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இங்கு ரோப்கார் திட்ட அமைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடந்த 1977-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபொழுது 10 லட்ச ரூபாயை இந்த திட்டத்திற்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்கள், 'ரோப் காருக்கு பதிலாக இழுவை ரயில் அமைக்கலாம்’ என்று யோசித்தனர். அதோடு மலைக்கு லிப்ட் வசதி செய்யலாம் என்றனர்.

இப்படியே எழுந்த புதுசு புதுசான யோசனையின் விளைவு இன்றுவரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படவே இல்லை. கடந்த 1998- ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் அமைக்கத் திட்டம் போடப்பட்டது. ஆனால் நிதி திரட்ட முடியாமல் மீண்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016 தேர்தல் நேரத்தில் கூட அ.தி.மு.க-வினர் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்கள்.

மலைக்கோட்டை

அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன் இதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. 1970 களிலிருந்து இத்திட்டம் கிடப்பில் கிடக்கிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் இத்திட்டத்தைப்பற்றிப் பேசுவார்கள். நிறைவேற்றியபாடு இருக்காது. இப்போது, தி.மு.க ஆட்சியில் ரோப் கார் விவகாரத்தை நிறைவேற்றுவதாக மீண்டும் பேசுகிறார்கள் இவர்களாவது நிறைவேற்றுவார்களா என்று பார்ப்போம்” என்று ஆதங்கப்படுகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-dmk-bring-rope-car-system-in-malaikottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக