Ad

வியாழன், 17 ஜூன், 2021

விழுப்புரம்: `எனக்கு பி.டெக் படிக்க ஆசை.. ஆனா சாதி சான்றிதழ் தர மாட்டேங்கிறாங்க!’ - தவிக்கும் மாணவன்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர், தனக்கு சாதி சான்று வழங்கப்படாததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல் போய்விட்டது என கலங்கி நிற்கிறார். படிப்பதற்கு விருப்பம் இருந்தும், சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாமல் தவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அந்த மாணவனிடம் மேற்கொண்டு பேச தொடங்கினோம். "என்னோட பெயர் அருண்குமார். என் அப்பா பெயர் தர்மன். நாங்க பாலப்பாடி கிராமத்தில வசிக்கிறோம். நாங்க ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். ஆதிதிராவிடர் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவங்க. அந்த பிரிவில் உள்ள சுமார் பத்து குடும்பங்கள் எங்க ஊர்ல இருக்கு. நான் சத்தியமங்கலத்தில் இருக்கிற அரசு உயர்நிலைப் பள்ளியில்தான் 12 வது படிச்சி முடிச்சேன். பத்தாவதுல 418/500, பன்னிரண்டாவதுல 410/600 மார்க் எடுத்தேன்.

மாணவன் அருண்குமார்.

12வது படிச்சி முடிக்கிற வரைக்கும் சாதி சான்றிதழுடைய முக்கியத்துவம் எனக்கு தெரியல. கல்லூரில சேரணும் எனும் போது தான் அதன் முக்கியத்துவம் புரிய வந்துச்சு. சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். ஆர்.ஐ (Revenue Inspector) கிட்ட போகும்போது 'ரிஜெக்ட் ஆகிடுச்சு'ன்னு சொன்னாங்க. உடனே ஆர்.ஐ கிட்ட நாங்க போய் கேட்டோம். 'விழுப்புரத்தில், இந்த கம்யூனிட்டிகு தர கூடாதுன்னு ஸ்ட்ரைக் பண்ணி இருக்காங்க' அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறமா செஞ்சி தாலுகா ஆபீஸ்ல போய் கேட்டோம். அவங்களும் அதே போல பதில் சொல்லி அனுப்பிட்டாங்க. அதுக்கு அப்புறமா விழுப்புரம் கலெக்டர் ஆபீசுக்கு போய் கேட்டோம். ஸ்ட்ரைக் பண்ணதா சொல்லப்படுகின்ற ஆந்திரா நபர்கள் கிட்ட விசாரிச்சுட்டு சான்றிதழ் தருவதாக சொன்னாங்க. ஆனா, என்னுடைய அக்கா, என்னுடைய சித்தப்பா மகள் இருவருக்குமே சம்பந்தப்பட்ட பிரிவு பெயரை போட்டு ஜாதி சான்றிதழ் ஏற்கனவே கொடுத்திருக்காங்க. ஆனா, நான் போய் கேட்கும்போது எனக்கு கிடைக்கல.

எனக்கு பி.டெக் படிக்கணும் அப்படின்னு ஆசை. கல்லூரியில் சேர்வதற்கு நேரம் குறைவு என்பதாலும், எனக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கல என்பதாலும், என் அக்காவின் சாதிச் சான்றிதழை மையமாக வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு வழக்கு போட்டோம். வழக்கு முடிவுல, '4 வாரத்திற்குள்ளாக விசாரித்து சான்றிதழ் கொடுக்கனும்னு' கோர்ட்டில சொல்லிட்டாங்க. இது நடந்து ஒரு மாசத்து கிட்ட இருக்கும்போது, தாலுக்கா ஆபீஸ்ல இருந்து ஒரு பெண் அதிகாரி வந்து விசாரிச்சுட்டு போனாங்க. ஆனால், எந்தவித ரெஸ்பான்ஸும் இதுவரை இல்லை. அதுக்கப்புறமா மீண்டும் தாலுகா ஆபீஸ் போனோம். அதே பதிலையே திருப்பி சொன்னாங்க.

அங்கிருந்து கலெக்டர் ஆபீஸ் போனோம். அங்கேயும் சரியா பதில் கிடைக்கல. அப்போ தான், எங்க ஊர்ல இருக்க ஒரு அண்ணன் சொன்னாங்க, முதலமைச்சரின் தனி பிரிவிற்கு ஆன்லைன்ல புகார் கொடுக்கும் படி. அப்போது, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராய் இருந்தாங்க. அப்போ சி.எம் செல்லுக்கு மெயில் போட்டேன். விசாரணை நடத்தும்படி கலெக்டருக்கு பார்வேர்ட் பண்ணி இருக்கிறதா வந்து இருந்துச்சு. ஆனா எந்த பயனும் இல்லை. இப்போதும் சி.எம் செல்லுக்கு மெயில் போட்டேன். அதைபோலவே, கலெக்டர் விசாரிக்கும்படி பார்வேர்ட் பண்ணி இருக்குறதா வந்து இருந்துச்சு. ஆனா இதுவரைக்கும் எனக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கல” எனக் கலங்கினார்.

நீதிமன்ற ஆணையின் முதல் பக்கம்.

தொடர்ந்து பேசியவர், ``கோர்ட்டு சொல்லியும் ஒரு வருஷம் கிட்ட ஆகப்போகுது. எப்போது தான் எனக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும்னு தெரியல. இதனால கடந்த ஒரு வருஷமா எனது படிப்பு போச்சு. காலேஜ்ல சேர முடியாம போனதால புதுவீடுகளில் டைல்ஸ் போடும் வேலைக்கு போயிட்டு இருக்கேன். எனக்கு சீக்கிரம் ஜாதி சான்றிதழ் கிடைச்சி கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு" என்றார் மிகுந்த ஏக்கத்துடன்.

இந்த மாணவனின் இப்போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தால், அதனை உரிய பரிசீலனையுடன் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். சாதி சான்றிதழ் காரணமாக ஒரு மாணவனின் உயர் கல்வி பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!



source https://www.vikatan.com/social-affairs/politics/a-student-who-is-unable-to-attend-college-due-to-non-issuance-of-caste-certificate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக