Ad

செவ்வாய், 1 ஜூன், 2021

`பி.டி.ஆர்-யுடன் மோதல்.. அமைச்சரை ஜி.எஸ்.டி கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்!’ -கோவா எம்.எல்.ஏ

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாகக் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். முதல் முறையாக மத்திய அரசின் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பழனிவேல் தியாகராஜனின் உரை தேசிய அளவில் கவனம் பெற்றது. குறிப்பாக, `கொரோனா காரணமாக 2021-2022 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்’ போன்ற கருத்துகள் அதிகம் பகிரப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சருக்கும் கோவா சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்கு அளிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கான நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றிய கோவா போக்குவரத்துத்துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தனது எதிர்ப்பை சபையில் தெரிவித்தார். 'பெரிய அண்ணன் மனப்பான்மையில் பேசக்கூடாது!' என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிட்டு கோவா அமைச்சர் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அது முதற்கொண்டு இரு மாநில அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. தொடர்ந்து ட்விட்டரில் கருத்து பரிமாற்றமும் நடந்தது. பின்னர் இந்த விவகாரத்தில் கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவிக்க, விவகாரம் திமுக அமைச்சர் VS பாஜக எம்.எல்.ஏ என்றௌ மாறியது தனிக்கதை.

பழனிவேல் தியாகராஜன் - மவ்வின் கோடின்ஹோ

இந்த நிலையில் பி.டி.ஆர்-யுடன் மோதலில் ஈடுபட்ட அமைச்சரை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என கோவா எம்.எல்.ஏ ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி எம்.எல்.ஏ. சுதின் தாவலிக்கர், ``கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். கோவா மாநிலத்தின் சார்பில் மவ்வின் கோடின்ஹோவே தற்போதும் தொடர்கிறார். ஆனால், மாநில நிதித்துறை பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதல்வர் தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஜி.எஸ்.டி கவுன்சிலில் இருந்து மவ்வின் கோடின்ஹோ நீக்கப்பட வேண்டும்” என்றார்.

Also Read: ``திட்டினால்கூட மரியாதையாகத் திட்டும் ஊரில் பிறந்துள்ளேன்!'' - பி.டி.ஆருக்கு வானதி சீனிவாசன் பதில்

மேலும், `ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மிக தகுதிவாய்ந்த தமிழக நிதி அமைச்சருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதன் மூலம், அவர் கோவா மாநிலத்துக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளார்” எனவும் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/goa-mla-request-to-remove-mauvin-godinho-from-the-gst-council-following-his-spat-with-the-tn-finance-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக