மணிரத்தினம் இயக்கிய 'உயிரே' படத்தில் வரும் ’தய்ய... தய்யா...’ பாடலில் ஷாருக் கானுடன் நடனமாடி இருப்பார் மலைக்கா அரோரா.
பாலிவுட் நடிகை. 47 வயதிலும் தனது உடலின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருபவர். யோகா போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் யோகா, உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்வது வழக்கம். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். நேற்று, இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த ஒரு பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவருக்கு கொரோனாவால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும், அதிலிருந்து மீண்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
மலைக்கா அரோரா பதிவு!
''நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி, கண்டிப்பா உங்களுக்கு எல்லாம் சுலபமா இருக்கும் எனப் பலர் அடிக்கடி சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆம், என்னுடைய வாழ்க்கையில் எல்லாம் சிறப்பாகத்தான் அமைந்தது. ஆனால், அதிர்ஷ்டம் என் வாழ்வில் சிறிய அளவில் தான் பங்களித்தது. அதேப்போல சுலபமாக எதுவும் அமைந்துவிடவில்லை.
எனக்கு, கொரோனா பாசிட்டிவ் என கடந்த வருடம் செப்டம்பர் 5 அன்று ரிசல்ட் வந்தது. உண்மையில் மிகவும் மோசமான அனுபவம். வெளியில் இருந்து கொண்டு சிலர் கொரோனாவிலிருந்து மீள்வது எளிது என்கிறார்கள். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் கொரோனா பற்றி தெரியாதவர்களாக இருக்க வேண்டும். கொரோனாவை தாண்டி விட்டேன். ஆனால், அது சுலபம் என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளமாட்டேன்.
கொரோனா உடல்ரீதியாக என்னை முடக்கியது. இரண்டு அடி எடுத்து வைத்து நடப்பது கூட கடினமாக இருந்தது. உட்காருவது, படுக்கையிலிருந்து எழுவது, ஜன்னலோரம் நிற்பது என இருந்தேன். உடல் எடை அதிகரித்தது. மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். ஸ்டாமினாவை இழந்தேன். என்னுடைய குடும்பத்தை விட்டு தள்ளி இருந்தேன்.
செப்டம்பர் 26, 2020 கொரோனா நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்தது. மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். ஆனால், உடல் பலவீனம் தொடர்ந்தது. என் மனதிற்கு ஏற்ப என் உடல் ஒத்துழைக்கவில்லை. என்னுடைய, பலத்தை திரும்ப பெற முடியாதோ என மிகவும் பயமாக இருந்தது. 24 மணி நேரத்தில் எதாவது ஒரு வேலையாவது செய்ய முடியுமா என யோசித்தேன்.
முதல் நாள் நான் செய்த உடற்பயிற்சி செய்ய முயன்று தோற்றுப்போனேன். ஆனால், இரண்டாவது நாள் நமக்கு நாமே என ஊக்கப்படுத்திக்கொண்டென். அப்படியே நாட்கள் தொடர்ந்தது. தற்போது, கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்து 32 வாரங்கள் ஆகிவிட்டது. ஒரு வழியாக கொரோனா பாசிட்டிவ் வருவதற்கு முன் இருந்த ஆரோக்கிய நிலை இப்போது வந்துவிட்டதாக உணர்கிறேன். என்னால், நன்றாக மூச்சு விட முடிகிறது. உடல்ரீதியாகவும், மனரீதியாவும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறேன்.
என்னை இந்த நிலைக்கு தூண்டிய நான்கு எழுத்து வார்த்தை HOPE (நம்பிக்கை). முடியாது என்ற நிலையிலும் கூட எல்லாம் சரியாகிவிடும் என்பதை நம்பிக்கைதான் அளித்தது. உலகத்தில் உள்ள அனைவரும் நல்ல முறையில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். மன உறுதி, நன்றி உணர்வு (GRIT & GRATITUDE) இந்த இரண்டு வார்த்தைகளினால் இதிலிருந்து மீண்டு விட்டேன்'' என்று அவர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
source https://cinema.vikatan.com/celebrity/actress-malaika-arora-opens-up-about-covid-struggle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக