உச்சம் தொட்டுவரும் கொரோனாவுக்கு எதிராக, 'தடுப்பூசி, ஊரடங்கு' என மத்திய - மாநில அரசுகள் போராடி வருகின்றன! ஆனாலும் அதிகரித்துவரும் ஆக்ஸிஜன் தேவை, வெண்டிலேட்டர் வசதியின்மை, தடுப்பூசி தட்டுப்பாடுகளை சமாளிக்க வழிதெரியாமல் திண்டாடி வருகிறது மத்திய அரசு.
இந்த நிலையில், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் கேட்டு தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினேன்....
``நெருக்கடியான இந்த கொரோனா பேரிடர் காலத்தில், 'சென்ட்ரல் விஸ்டா' எனும் புதிய பாராளுமன்ற கட்டடம், பிரதமர் மாளிகை எல்லாம் அவசியம் கட்டித்தான் ஆகவேண்டுமா?''
``கொரோனா பேரிடரை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், எந்த இடத்திலும் பணம் இல்லை என்ற பிரச்னையே எழவில்லை. அடுத்து இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டம் இன்றைக்கு பா.ஜ.க அரசு கொண்டுவந்த திட்டமும் அல்ல. தற்போதைய பாராளுமன்றக் கட்டடம் எந்தவித வசதிகளும் இல்லாத பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என 2010-லேயே முடிவெடுக்கப்பட்டுவிட்டது. பாதுகாப்பான கட்டடம் என்ற சான்றிதழைக்கூட இப்போதுவரை தீயணைப்புத் துறை தர மறுக்கிறது என்றால், பாராளுமன்றக் கட்டட நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
புதிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு முதல் கட்டமாக 751 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வருடங்களில் திட்டத்துக்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே, தற்போது வாடகை கட்டடங்களுக்காக ஆயிரக்கணக்கிலான கோடி ரூபாயை செலவு செய்துவருவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். ஆனால், இந்த நன்மைகளை எல்லாம் எடுத்துச் சொல்லாமல், வெறுமனே பிரதமருக்காக மட்டுமே 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஆடம்பர மாளிகையை கட்டுவதாக எதிர்க்கட்சிகள் விஷம பிரசாரம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.''
``சமூக ஊடகம் மீது மத்திய அரசு கொண்டுவரும் புதிய விதிகள், 'மத்திய அரசுக்கு எதிரான கருத்தை யாருமே பதிவு செய்யக்கூடாது' என்ற மிரட்டலாகத்தானே இருக்கிறது?''
``அப்படியில்லை.... என்னுடைய ட்விட்டர் கணக்கைப் போலவே போலியாக ஒரு கணக்கை ஆரம்பித்து, என் பெயரில் அவதூறு செய்திகளை சிலர் பரப்பிவருகிறார்கள். இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு பலமுறை ரிப்போர்ட் கொடுத்தும்கூட, இந்தப் போலிக் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கவில்லை. இதற்குமேல் இந்த விஷயத்தைக் கையாள்வதற்கு யாரை, எங்கே, எப்படி அணுகுவது என்ற முறையான - தெளிவான விவரங்கள் எனக்கேகூட இன்னமும் தெரியவில்லை. ஆனால், 'ட்விட்டரில் பதிவிடுபவர்களின் கருத்துகளுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்ற வசதியான விதியைப் பயன்படுத்தி ட்விட்டர் நிறுவனம் ஒதுங்கிக்கொள்கிறது.
அண்மையில், கொரோனா விவகாரத்தில், 'சிங்கப்பூர் வைரஸ்' என்று குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் கருத்துகள் பரவியபோது, சிங்கப்பூர் அரசு நிர்வாகம் இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. உடனே ட்விட்டர் நிறுவனமும் 'சிங்கப்பூர் வைரஸ்' என்பதுபோன்ற பதிவுகளை உடனடியாக நீக்கிவிட்டது. ஆனால், இந்தியாவில், 'நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து பதிவிடக்கூடாது' என்ற விதியை ட்விட்டர் நிறுவனத்திடம் தெரிவித்தால், அதுகுறித்து அந்த நிறுவனம் எந்தவித அக்கறையும் காட்டுவது இல்லை. மாறாக, 'இது உங்களுக்கும் பதிவு செய்பவர்களுக்கும் இடையே உள்ள பிரச்னை' என்று சொல்லி ஒதுங்கிக்கொள்கிறது.,
எனவேதான், இந்த நடைமுறை சிக்கல்களை எல்லாம் தீர்க்கும் வசதியாக, சமூக ஊடக நிறுவனங்களுக்கென்று இந்தியாவில் குறிப்பிட்ட முகவரி கொண்டுவர வேண்டும். அங்கே புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கான குறை தீர்ப்பு மையம் செயல்பட வேண்டும் என்றெல்லாம் மத்திய அரசு முயற்சி செய்கிறது. நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்ள சமூக ஊடக நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று மத்திய அரசு சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?''
``நுங்கம்பாக்கம் ஸ்வாதி படுகொலை, தப்லிக் ஜமா அத் மாநாடு குறித்தெல்லாம் கடந்த காலத்தில், 'சாதி - மத ரீதியாக விமர்சித்தவர்களே இன்றைக்கு 'பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்' சாதி அரசியலாக திசை திருப்பப்படுகிறது என்கின்றனரே?''
``தப்லிக் ஜமா அத் அமைப்பினர் இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் அல்ல. கடந்த வருடம், கொரோனா பரவிக்கொண்டிருந்த சமயத்தில், 'தப்லிக் ஜமா அத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்' என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அரசோடு அல்லது சுகாதாரத் துறையினரோடு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றபோதுதான் அதுகுறித்து நாம் வலியுறுத்திப் பேச நேர்ந்தது.
மற்றபடி பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்றதாக சொல்லப்படும் கொடும் செயல்கள் குறித்து பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அனைவரிடமும் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இப்போது விசாரணைதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைக்கொண்டு யார் மீதும் நாம் குற்றம் சுமத்திவிட முடியாது.
மேலும் இதேபோல் பல பள்ளிகளில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் மற்றும் இந்த விவகாரத்தை பொதுவெளிக்குக் கொண்டுவந்த பாடகி சின்மயிக்கு ஏற்கெனவே நடைபெற்ற பாலியல் கொடுமை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கை.''
Also Read: முதல்வரிடம் பாராட்டு பெற்ற தூய்மைப் பணியாளர்; உடல்நலக் குறைவால் முடக்கம்... உதவுமா அரசு?
``தமிழ்நாடு, 'கொரோனா பரவலில் முதலிடம் வகிக்கிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சொல்கிறார். ஆனாலும்கூட குஜராத்துக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்குவதென்பது, மத்திய பா.ஜ.க அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைதானே?''
``மே மாதம் 1-ம் தேதிக்கு முன்பு வரையிலான கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டே குஜராத் மாநிலத்துக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகம் இருப்பதால், நம் மாநிலத்துக்குத்தான் அதிகமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிவருகிறது.''
``தடுப்பூசிக்கு எதிராக கருத்துகளை பா.ஜ.க-வினரே கூறிவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ.க-வினர் பழி சுமத்துவது நியாயம்தானா?''
``கடந்த காலங்களில், தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தை திருமாவளவன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சியினர் தொடர்ந்து செய்துவந்தார்கள். இன்றைய முதல்வர் ஸ்டாலினேகூட, எதிர்க்கட்சியாக இருந்தவரையில், 'இன்னுமொரு ஊரடங்கை நாடு தாங்காது' என்று எதிர்ப்பு தெரிவித்துவந்தவர்தான். ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மறுநாளே முழு ஊரடங்கை அறிவிக்கிறார். கடந்த வருடம் கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக மக்கள் சொந்த ஊர் திரும்பியபோது கேள்வி எழுப்பியவரும் ஸ்டாலின்தான். ஆனால், இதோ இப்போது ஊரடங்குக்கு முன்பாக சொந்த ஊர் திரும்ப அவரது ஆட்சியிலும் பேருந்து வசதி செய்துதரப்பட்டிருக்கிறதுதானே! இப்படி, எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கிறபோது வேறொரு பேச்சுமாக செயல்படுவது நியாயம்தானா?''
Also Read: சென்னை: கோவிட்ஷீல்டுக்கு ரூ.500; கோவெக்சினுக்கு ரூ.800 - தடுப்பூசிக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்கள்!
``மாட்டுசாணம், மூத்திரம் கொரோனாவுக்கான அருமருந்து என்றெல்லாம் வட மாநிலங்களில் பா.ஜ.க தலைவர்களே வெளிப்படையாக கூறியிருந்தார்களே...?''
``இந்தியா முழுக்கவே, மாட்டு சாணம் மற்றும் கோமியம் மூலமாகக் கிடைக்கக்கூடிய மருத்துவக் குணங்களை இன்றைக்கும் பலர் பெற்றுவருகின்றனர். உதாரணமாக மொரார்ஜி தேசாய், திக் விஜய்சிங் உள்ளிட்ட தலைவர்களேகூட தாங்கள் கோமியம் அருந்துவதாகக் கூறியிருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில், ஒட்டக மூத்திரத்தைக்கூட மக்கள் குடித்து வருகிறார்கள். இவையெல்லாம் அவரவர் நம்பிக்கை அல்லது சிகிச்சை முறை. இவற்றை 'மூட நம்பிக்கை' என்று சொல்லி கொச்சைப்படுத்தக்கூடாது.
'இயேசுவை ஜெபியுங்கள்; கொரோனா குறையும்' என்று ஒருவர் அவரது மத நம்பிக்கையைச் சொன்னால், அதில் நாம் தலையிட முடியாது; தலையிடவும் கூடாது. அது ஏன்... பா.ஜ.க உறுப்பினர் சொன்னால் மட்டும் அதற்கு தவறான அர்த்தம் கற்பிக்கிறீர்கள்?''
``மாட்டு சாணம் குறித்த ஆய்வுக்காக மத்திய பா.ஜ.க அரசே 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனவே?''
``மாட்டு சாணத்துக்கு விசேஷமான மருத்துவக் குணம் உள்ளது என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்டுள்ளன. மற்றபடி, இந்த ஆராய்ச்சிக்காக தற்போதைய மத்திய அரசு, 500 கோடிகள் எல்லாம் ஒதுக்கியதாக எனக்குத் தெரியவில்லை. அதேசமயம், 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், குலாம்நபி ஆசாத் அமைச்சராக இருந்தபோது மாட்டு சாணம் குறித்த மருத்துவ ஆய்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.''
source https://www.vikatan.com/government-and-politics/policies/drinking-cow-urine-has-medicinal-values-bjp-narayanan-tirupati
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக