Ad

செவ்வாய், 1 ஜூன், 2021

`லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிடும்!' - புதிய விதிமுறைகளை எதிர்க்கும் சூழலியலாளர்கள்

36 தீவுகளின் தொகுப்பான ஒரு தீவுக்கூட்டம்தான் லட்சத்தீவு. அங்கு தற்போது புதிய நிர்வாகியாகப் பதவி ஏற்றுள்ள பிரபுல் கோடா படேல் கொண்டு வந்துள்ள பல விதிமுறைகள் அங்கு வாழும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மாட்டுக் கறிக்கு தடை விதித்தது முதல் மது விற்பனையை ஊக்குவிப்பது வரை பல விதிமுறைகளை, குறிப்பாக இஸ்லாமிய மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதியில் கொண்டு வந்திருப்பது, அங்குள்ள மக்களின் கலாசார அடையாளத்தையே சிதைப்பதாக இருக்கிறதென்று லட்சத்தீவு மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

மேலும், தற்போது புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்களுடைய வாழ்வியலைச் சிதைப்பதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. லட்சத்தீவு வாழ் மக்கள், இதனால் அவர்களுடைய கலாசாரமே முற்றிலுமாக மாற்றப்படும் என்று அஞ்சுகிறார்கள்.

லட்சத்தீவு

லட்சத்தீவின் லோக் சபா பிரதிநிதியான முகமத் ஃபைசல், ``லட்சத்தீவின் இப்போதைய நிர்வாகி, உள்ளூர் மக்களுடைய நில உரிமை மீது நேரடித் தாக்குதலைத் தொடுக்கிறார். லட்சத்தீவு வளர்ச்சி ஆணைய ஒழுங்குமுறைக்கான வரைவின்படி உள்ளூர் மக்கள், அவர்களுடைய வீடுகளிலிருந்து, நிலத்திலிருந்து, நகரத் திட்டமிடுதல் மற்றும் இதர வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்படுவார்கள். அவர் இதைச் செய்தால், இங்குள்ள மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும். இப்போது நடந்துகொண்டிருப்பது, இப்பகுதியின் உள்ளூர் மக்களுடைய பல தலைமுறைகளாக வளர்ந்து வந்த வாழ்வியலை மாற்றியமைப்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

படேல் ஏற்கெனவே, பள்ளிகளின் மதிய உணவிலும் அரசு நிர்வகிக்கும் விடுதிகளிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அசைவ உணவுப் பண்டங்களை நிறுத்திவிட்டார். மேலும், மாடுகளை உணவுக்காக வெட்டுவது, மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்வது, விற்பது, வாங்குவது போன்ற செயல்பாடுகளையும் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு விலங்குப் பாதுகாப்புக்கான புதிய சட்ட வரைவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தச் சட்ட வரைவின்படி, அங்கு மாட்டுக் கறியை விற்பதும் தடை செய்யப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்குக்கூட மதிய உணவு மற்றும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளில் அசைவ உணவு தடை செய்யப்படுகிறது. இது அங்கு வாழும் பெரும்பான்மை சமூகமான இஸ்லாமிய மக்களின் உணவுமுறையில் வேண்டுமென்றே கை வைப்பதைப்போல் இருப்பதாக கல்வியாளர் ஸ்மித்தா குமார் கூறியுள்ளார். இதன்விளைவாக, கால்நடைகளை பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

Praful Patel

இதுமட்டுமன்றி, தற்போது லட்சத்தீவில் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் மக்கள் மாடு வளர்ப்பதைத் தடுப்பதற்கான வேலைகளும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

``உள்ளூர் மக்கள் சமூகங்களின் ஆன்மிக மற்றும் கலாசார அடிப்படையில், இந்தத் தீவுக்கூட்டத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக நான்கு தீவுகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பஞ்சாயத்து சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்தத் திருத்தங்களிபடி, இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் பங்கெடுப்பது தடை செய்யப்படும்.

இவற்றோடு, கேரளாவுடன் லட்சத்தீவுக்கு இருக்கும் தொடர்பையும் துண்டிப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இந்தத் தீவிலிருந்து புறப்படும் கப்பல்கள், கோழிக்கோட்டில் அமைந்துள்ள பெய்போர் துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி வரும். அதைத் தற்போது, கர்நாடகாவிலுள்ள மங்களூர் துறைமுகத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் முகமத் ஃபைசல்.

பிரபுல் கோடா படேல் குஜராத்தின் உள்துறை அமைச்சராக, 2012-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் இருந்தார். இதற்கு முன்னர், அரசு அதிகாரிகளே லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டனர். ஆனால், 1947-ம் ஆண்டிலிருந்து இப்போது வரையில், ஒரு அரசியல்வாதியை நிர்வாகியாக நியமித்திருப்பது இதுவே முதல்முறை.

Lakshadweep

மாட்டுக்கறியைத் தடை செய்தது, பஞ்சாயத்து சட்டத்திருத்தம் போன்றவை எந்தளவுக்கு அப்பகுதி மக்களின் கலாசாரத்தை சிதைக்குமோ, அதே அளவுக்கு லட்சத்தீவு வளர்ச்சி ஆணைய ஒழுங்கு முறைக்கான புதிய வரைவு அப்பகுதி மக்களுடைய நில உரிமையை அபாயத்துக்கு உள்ளாக்குகிறது. இதன்மூலம், வளர்ச்சிக்காக லட்சத்தீவு மக்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்துவது, மாற்றியமைப்பது போன்ற வேலைகளை எளிதில் மேற்கொள்ள முடியும்.

லட்சத்தீவில் நீண்டகாலமாக கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் செயல்பட்டு வரும் ஸ்மித்தா.பி.குமார், ``படேலின் திட்டங்கள், சுற்றுலாத் துறையை வளர்ப்பதோடு நின்றுவிடாது. குறிப்பிடத்தக்க தனியார் முதலீடு மற்றும் கட்டுப்பாடற்ற பன்னாட்டு நிறுவனங்களின் வேலைகளுக்கு வழிவிடுவதன் மூலம், இந்தத் தீவுக்கூட்டத்துடைய சுற்றுச்சூழல் மற்றும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மோசமான விளைவுகளைக் கொண்டுவரும்" என்று கூறியுள்ளார்.

லட்சத்தீவில் புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள கடலோர கட்டுமானங்கள், அதிகளவிலான கப்பல் போக்குவரத்து, சுற்றுலாவுக்கான கடலோர ரிசார்ட் கட்டுமானங்கள் போன்ற திட்டங்கள் கடலோர மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பெரியளவில் பாதிக்கும். இந்தத் தீவுக்கூட்டத்தில் இதுவரை பொறுப்புமிக்க, குறைந்த அளவிலான, அதேநேரம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய வகையிலான சுற்றுலா செயல்பாடுகள் இருந்து வந்ததாகவும் அதைத் தற்போதைய புதிய திட்டங்கள் சீரழிக்கும் என்றும் லட்சத்தீவு மக்கள் அஞ்சுகின்றனர்.

Narendra Modi

ஏற்கெனவே, 370 அறைகளைக் கொண்ட நீர் வில்லாக்கள் (Water villas), கடலோர ரிசார்ட்டுகள் போன்றவற்றைக் கட்டமைப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது. மேலும், சில கார்ப்பரேட் நிறுவனங்களின் தூண்டுதலால், மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தத் திட்டங்களால் லட்சத்தீவில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் குறிப்பிட்டு, நாடு முழுவதும் உள்ள 30 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த 114 ஆராய்ச்சியாளர்கள் லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.

இதன்விளைவாக, அந்த நிலப்பகுதியின் எளிதில் பாதிக்கக்கூடிய உவர்நீர் ஏரிகள், கடலோர சூழலியல் அமைப்புகளில் பெரிய பாதிப்புகள் நிகழும் என்றும் எச்சரித்தார்கள். அங்கு நடக்கப்போகும் புதிய கட்டுமானங்கள் மட்டுமன்றி, பெரியளவிலான சுற்றுலா வளர்ச்சி மற்றும் மது விற்பனைக்கு அனுமதித்தல் போன்றவை, மிகப்பெரிய சூழலியல் தாக்கத்தையும் கொண்டுவரும். தீவுக் கூட்டத்தில் நீரின் தரம் சீர்கெடுவதோடு, மோசமான நீர் மாசுபாடுகளைச் சந்திக்க நேரிடும்.

கூடுதலாக, சுற்றுலா பெருகும்போது கூடவே கழிவுகளும் பெருகும். இதனால், தீவு நிலம் மோசமாக மாசடையக்கூடும். இப்போதுள்ள சுற்றுலா செயல்பாடுகளே, கடல் நீரில் மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டை உண்டாக்கி, மீன் வளத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இதை இன்னும் பெரியளவில் கொண்டுவருவது பேரழிவாகவே இருக்கும் என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கேரளாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், அரபிக் கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டத்தில் 16 பவளத் திட்டுக்களும் 32 தீவுகளும் இருக்கின்றன. அதில் 11 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். அனைத்துத் தீவுகளின் கரைக்கடலும் மேற்கில் ஆழமற்றவையாகவும் கிழக்கில் செங்குத்தான பவளச் சரிவுகளாகவும் இருக்கின்றன. இந்த தனித்தன்மைகளின் காரணமாக, லட்சத்தீவுக் கூட்டம் சிறப்பான கடல் சார்ந்த தாவர மற்றும் உயிரின வளங்களைக் கொண்டுள்ளது.

லட்சத் தீவு

Also Read: லட்சத்தீவு மக்கள் கொந்தளிப்பு: காரணமாக இருக்கும் பிரபுல் கோடா படேல் - யார் இவர்?

மேலும் கடல்புற்களும் பவளப் பாறைகளும் அங்கு அமைந்திருப்பதால், பல்வேறு வகையான மீன் இனங்களுக்கு, முதுகெலும்பில்லாத உயிரினங்களுக்கு, கடல் ஆமைகளுக்கு, கடல் வாழ் பாலூட்டிகளுக்கு புகலிடமாகவும் இந்தத் தீவுக்கூட்டம் செயல்படுகிறது.

இந்நிலையில், தற்போது படேல் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய மாற்றங்கள், லட்சத்தீவு மக்களுடைய வாழ்வியலை முறையில் கை வைப்பதோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் அதன் சுற்றுச்சூழல் மீதும் மிகப்பெரிய சீர்கேடுகளைக் கொண்டுவரும்.

இதனால், இந்தத் தீவுக்கூட்டத்தையும் அதைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வையும் ஆபத்தில் சிக்க வைக்கக்கூடிய புதிய திட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று சமூக, சூழலியல் ஆர்வலர்களும் அங்கு வாழும் மக்களும் வலியுறுத்துகிறார்கள்.

ஒரு மண்ணின் மக்களுடைய வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் பற்றிச் சிறிதும் சிந்திக்காத ஒரு தலைமை அமைவதைவிட மோசமான பேரிடர் எதுவும் இருக்க முடியாது. அத்தகைய பேரிடரில் சிக்கிவிட்டோமோ என்ற அச்சத்தில் லட்சத்தீவு மக்கள் இருக்கிறார்கள். அப்படியில்லை என்று காட்ட வேண்டியது அதன் நிர்வாகியான பிரபுல் கோடா படேலின் கடமை. அதைச் செய்வாரா?



source https://www.vikatan.com/government-and-politics/environment/environmentalists-warns-about-lakshadweeps-new-regulations-and-its-impact

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக