Ad

புதன், 2 ஜூன், 2021

’கர்ணன்’ திரைப்பட பாடல் மெட்டு.. கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தேனி ’ஹெட் கான்ஸ்டபிள்’!

தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகே செயல்பட்டு வருகிறது க. விலக்கு காவல் நிலையம். இக்காவல் நிலையத்தின் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் மணிகண்டன். காவல்துறையில் 16-வது ஆண்டாக பணியாற்றி வரும் இவர், பள்ளி பருவத்திலேயே சிலம்பாட்டக் கலையிலும், சொந்தமாகவே பாடல்கள் எழுதி மெட்டமைத்துப் பாடல் பாடியதிலும் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் மாநில நடுவராகவும், இந்திய சிலம்பாட்ட சம்மேளனத்தின் தேசிய நடுவராகவும் உள்ளார்.

விழிப்புணர்வு பாடல் பாடும் மணிகண்டன்

இவரது போலீஸ் பணிக்கு இடையில் கிடைக்கும் ஒரு மணி நேர ஓய்வு நேரத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டக் கலையை இலவசமாக கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். இதுவரை இவரிடம் 300-க்கும் மேற்பட்டோர் சிலம்பாட்டக் கலையைக் கற்று மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளனர். அதே ஓய்வு நேரத்தில், ’மரம் வளர்ப்பு’, ’பிளாஸ்டிக் ஒழிப்பு’, ’தீண்டாமை’, ’பெண் கல்வி’, ’சுயதொழில்’, ’வாக்குரிமை’ எனப் பல தலைப்புகளில் தானாகவே பாடல் எழுதி மெட்டமைத்து பாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தேனி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் ’சிலம்பம் மணிகண்டன்’, ’பாடகர் மணிகண்டன்’, ‘கிராமியக் கலைஞர் மணிகண்டன்’ என பல பெயர்களில் பிரபலமாகியுள்ளார். தற்போதையன் முழு ஊரடங்கு நேரத்தில் பணி ஒதுக்கப்படும் இடங்களில், மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் ‘கண்டா வரச் சொல்லுங்க… கர்ணனை கையோடக் கூட்டி வாருங்க” என்ற பாடலில், பாடல் வரிகளை மாற்றி விழிப்புணர்வு பாடலாக பாடி வருகிறார். இவர் பாட, பாடலுக்கேற்றவாறு ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்களின் பறை இசையும் கலந்து தேனி நகரின் முக்கியச் சாலைகள் எங்கும் எதிரொலிக்கிறது.

மணிகண்டன்

”பேரு ஏதோ… கொரோனாவாம்… பிறந்த ஊரு ஜில்லாவாம்...

பாதகத்தி நோயி வந்து ஜனம் தீய்க்கு வேகுதப்பா../

ஊரடங்கி இருங்க… அரசு உத்தரவை மதிங்க..

கொஞ்சம் வீட்டுலயே இருங்க… வீணா ரோட்டுலயே சுத்தாதீங்க..

அம்மாடி ஜி.ஹெச்சுல… ஆம்புலன்ஸு வரிசையில…

ஆக்சிஜனும் பத்தவில்ல.. அது மூச்சடிச்சு கொள்ளும் புள்ள…

ஊரடங்கி இருங்க… அரசு உத்தரவை மதிங்க..

கொஞ்சம் வீட்டுலயே இருங்க… வீணா ரோட்டுலயே சுத்தாதீங்க…

ஊரெல்லாம் பரவுதப்பா… ஊரடங்கு போட்டமப்பா..

இப்போ உருமாறித் தாக்குதப்பா.. உயிர் கொத்துக் கொத்தாச் சாகுதப்பா...”

என 4.39 நிமிடங்கள் உடையதாக உள்ளது அந்தப் பாட்டு.

’காக்கிச்சட்டை பாடகர்’ மணிகண்டனிடம் பேசினோம், “தமிழ் என்னோட தாய் மொழின்னா.. சிலம்பம் என்னோட தாய்க்கலை.. பாரம்பர்யக் கலை. பரம்பரை பரம்பரையா கத்துக்கிட்டு வர்றோம். ஆர்வமுள்ளவங்களுக்கு கத்துக்கொடுத்துட்டும் வர்றோம். புது முயற்சியா சிலம்பம் சுத்திக்கிட்டே பாடல்களைப் பாடினேன், கவிதை சொன்னேன். தொடர்ந்து விழிப்புணர்வு பாடல்களைப் பாடினேன். அதுக்கப்புறம் நானே பாடல்களை எழுதி மெட்டமைச்சு பாட ஆரம்பிச்சேன்.

பாடல் பாடும் மணிகண்டன்

போன வருசம் மார்ச் 26-ம் தேதியில கொரோனா முதல் அலையின் போது பரவல் தடுப்பு நடவடிக்கையா முழு ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. 25-ம் தேதி ராத்தியோட ராத்திரியா ’பேட்ட’ படத்துல வர்ற, ”தட்லாட்டம் தாங்க.. தர்லாங்க சாங்க../ உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க..”ங்கிற பாட்டுல, வரிகளை மாத்தி, “சொன்னா கேளுங்க.. கொரோனா வருதுங்க../ இது காவல்துறையோட வேண்டுகோளுங்க../ அரசாங்கத்தோட அறிவுரைதாங்க/ 144 ன்னு உத்தரவுங்க..” என பாடினேன்.

தமிழ்நாட்டுலயே முதல்ல கொரோனா விழிப்புணர்வு பாட்டு பாடுனது நான்தான். இந்த வருசம் ’கர்ணன்’ படத்துல வர்ற ‘கண்டா வரச்சொல்லுங்க”ங்கிற பாட்டை வரிகளை மாத்தி பாடியிருக்கேன். தினமும் எங்கெல்லாம் டூட்டி போடுறாங்களோ அதுல முக்கியச் சாலைகளில் மைக்கில் இந்தப் பாட்டை பாடுவேன். என் பாட்டுக்கேத்த மாதிரி ஊர்க்காவல் படை நண்பர்கள் பறை இசைப்பாங்க. பாடல் மூலமா கொரோனா விழிப்புணர்வு மட்டுமில்லாம, கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமம் கிரமமா ஆட்டோவுல மக்கள் மத்தியில மைக்குல பேசிட்டு வர்றேன்.

சிலம்பத்துடன் மணிகண்டன்

கொரோனா மூணாவது அலையா வரப் போகுதுன்னு சொலறாங்க என்றவர், “கொரோனா என்பது பேரலையா? பல உயிரைக் கொல்லும் எரிமலையா?/ இவ்வுலகம் முழுவதும் இனி கல்லறையா? இதனைத் தொடர்ந்து இனி மூன்றாம் அலையா?/ இறைவா இறைவா.. உன்னில் கருணை இல்லையா? இரண்டாம் அலையில் மடியும் உயிர்கள் போதவில்லையா?..” என மனிதன் இறைவனிடம் கேட்பது போல ஒரு பாடலைப் பாடி நிறைவு செய்தார்.

வீடியோவை காண... https://fb.watch/5U6V0_yzvf/



source https://www.vikatan.com/news/tamilnadu/theni-head-constable-singing-karnan-movie-song-melodic-corona-awareness-song

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக