இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் அனைவரும் தற்போது அச்சத்தை தவிர்த்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆனால், பல மாநிலங்களில் போதியளவில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் திட்டமிடல் குறைபாடே காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் சமீபமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் நடப்பாண்டில் தொடக்கம் முதலே மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக - முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக - வயது முதிர்ந்தவர்களுக்கும், மூன்றாம் கட்டமாக - நீரிழிவு உள்ளிட்ட இணை நோய்ப் பாதிப்புகளுடன் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த மாதம் 'புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கையை' அறிவித்து அதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. 50 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துகொள்ளும் என்றும், 50 சதவிகித தடுப்பூசிகளை மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்ட 3 தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகிய சில நாள்களிலேயே பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதன் காரணத்தால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இந்தியர்கள் அனைவருக்கும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தி விடுவோம் என்று மத்திய அரசு தனது இலக்கில் உறுதியாக உள்ள போதிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாக இல்லையென்று அரசியல் விமர்சகர்களும், மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக , கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தடுப்பூசிக்காக மட்டும் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், தடுப்பூசி விநியோக விவகாரத்தில் மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஏன் 18-44 வயது பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தக் கூடாதென்றும், தடுப்பூசி விநியோகம் தொடர்பான அனைத்து தரவுகளையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது.
தடுப்பூசி விநியோகம் மற்றும் கொரோனா பரவல் தொடர்பாகத் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு முன்னதாக, நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது களநிலவரங்களை ஆராய்ந்து விட்டுப் பேசிய நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஒரு சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
-
இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 'கோவின்' என்ற வலைத்தளத்தில் பதிவு செய்வது என்பது கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் உட்பட அனைவருக்கும் சாத்தியமா? என்பதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
-
மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள "புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசி கொள்கை" குறித்து 2 வாரங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கள நிலவரங்களை முழுமையாக ஆராய்ந்து அறிந்துகொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) மீண்டும் அதே நீதிபதிகளின் அமர்வுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்றும் சில உத்தரவுகளை மத்திய அரசுக்குப் பிறப்பித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள்:
-
மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை நீதிமன்றத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்காக மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகையில் ஏன் மத்திய அரசு 18-44 வயது பிரிவினருக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை வாங்க முடியாதா?, அப்படி முடியாதென்றால் அதற்கான உரிய விளக்கத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.
-
மத்திய அரசு இதுவரை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொள்முதல் செய்துள்ள ஸ்புட்னிக், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் முழு தரவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும்
-
இதுவரையில் எந்தெந்த தேதிகளில் எத்தனை தடுப்பூசிகள் வாங்கப்பட்டன, அவை எவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தரவுகள் விடுபடாமல் முழுமையாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
-
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் எத்தனை சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மீதமுள்ள மக்களுக்கு எவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது போன்ற விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
-
மத்திய அரசு சார்பில் சென்ற மாதம் 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில், மத்திய அரசின் இந்த முடிவினை மாநில அரசுகள் ஏற்கின்றனவா இல்லை மறுக்கின்றனவா என்பதை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி இலவசமாக செலுத்தச் சம்மதம் என்றால் இரண்டு வாரங்களுக்குள் அது குறித்த விவரங்களை மாநிலங்கள் புது மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
என்றுகூறி வழக்கு விசாரணையை இம்மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/supreme-court-slams-central-government-on-its-vaccination-policy-and-distribution-process
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக