பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் இல்லாமல் இன்றைய உலகைக் கற்பனைகூட செய்யமுடியாது. ஆனால், அவற்றை பூமியிலிருந்து எடுப்பது, எரிபொருளாக சுத்தகிரிப்பது, பயன்படுத்துவது ஆகிய எல்லா அடுக்குகளின்போதும் கரிம உமிழ்வுகள் மிக அதிகமாக வெளிப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும்போது வெளியேறும் ஹைட்ரோகார்பன் மூலப்பொருள்கள், கரித்துகள்கள், உலோகங்கள் ஆகியவை காற்றை மாசுபடுத்துகின்றன. இந்த எரிபொருள்களைப் பயன்படுத்தும்போது நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுகின்றன.
புதைபடிவ எரிபொருள்களுக்கான குழாய்கள், கிணறுகள், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படும் இடங்களில் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களின் வாழ்விடமும் வாழ்வாதாரமும் பறிக்கப்படுகிறது. இவற்றை எதிர்க்கும் விளிம்பு நிலை மக்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகள் உலக வரலாறு முழுக்க காணக்கிடைக்கின்றன. புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டினால் வறியவர்கள், சிறுபான்மையினரே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது 2014ல் வெளியான ஓர் அறிக்கை.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், மொத்த கறுப்பின மக்களில் 68% பேர், அனல் மின் நிலையங்களிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிக்கிறார்கள். சிறுபான்மையினராகக் கருதப்படும் இவர்கள் வாழும் இடங்களுக்கு அருகில்தான் பெரும்பாலான அனல்மின் நிலையங்கள் தேடித் தேடி அமைக்கப்படுகின்றன. சூழல்சார் இனவாதத்தின் கோரமுகம் இது.
இன்னொரு புறம், புதைபடிவ எரிபொருள்கள், பொருளாதாரத்தை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கின்றன. அவை தங்கள் பிடியை மறந்தும்கூட தளர விடுவதில்லை. கச்சா எண்ணெய் விலை ஏறினாலோ இறங்கினாலோ உலகப் பொருளாதாரத்தில் என்னென்னவெல்லாம் மாற்றம் ஏற்படும் என்று படித்தாலே தலைசுற்றுகிறது. உலகளாவிய வலைப்பின்னலாக அது பரவியிருக்கிறது.
இத்தனைக்கும் மத்தியில், "புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளாவிட்டால் காலநிலைப் பேரிடரைத் தடுக்கவே முடியாது" என்ற கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இவர்கள் எண்ணெய் நிறுவனங்களை அசைத்துப் பார்ப்பதற்காக சும்மா இப்படிச் சொல்லவில்லை. இப்போது கைவசம் இருக்கும் எரிபொருள்களில் 60 சதவிகிதத்தைப் பயன்படுத்தினாலே சராசரி வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்வதைத் தடுக்க முடியாது! ஆனால் உலக நாடுகளோ கவலையேயின்றி புதுப்புது இடங்களில் எண்ணெய் கிணறுகளும் நிலக்கரியும் இருக்கின்றனவா என்று தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கின்றன. பனிப்பாறைகளுக்குக் கீழே, ஆழ்கடலில் என்று நாம் தேடாத இடம் இல்லை. இருப்பதையே எரிக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், இந்தத் தேடல்களின் தீவிரத்தைப் பார்த்துக் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
"நிகர பூஜ்ய உமிழ்வை சாத்தியப்படுத்துவோம்" என்று மாநாடுகளில் சூளுரைக்கும் நாடுகள், அடுத்த சில மாதங்களிலேயே புதிய அனல்மின் நிலையங்களை நிறுவுகின்றன. பல வருடங்களாக நடந்துவரும் கண்துடைப்பு அது. "சும்மா புள்ளிவிவரங்களைக் காட்டிப் பயனில்லை, முழுமூச்சில் புதைபடிவ எரிபொருள்களை விட்டு வெளியேறுங்கள்" என்று கெஞ்சிக் கேட்கிறார்கள் காலநிலை வல்லுநர்கள்.
Fossil fuel phasing out என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது, இப்போது இருக்கும் புதைபடிவ எரிபொருட்கள் மீதான நம் சாய்வைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, மாற்று எரிபொருளை நோக்கி நகர்வது. அதை எவ்வளவு விரைவாக செய்கிறோமோ அந்த அளவுக்கு நம்மால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். சில வல்லுநர்களோ, "அதெல்லாம் சரிப்பட்டு வராது, முழுவதுமாக புதைபடிவ எரிபொருள்களுக்குத் தடை விதித்துவிடுங்கள், கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதெல்லாம் சாத்தியமில்லை" என்கிறார்கள். மெதுவாகக் குறைப்பதற்கே ஒத்துழைக்காத உலக நாடுகள், புதைபடிவ எரிபொருள்களைத் தடை செய்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.
சரி.... என்னதான் செய்யலாம்?
சர்வதேச ஆற்றல் குழுமம் சில யோசனைகளை முன்வைக்கிறது:
-
இந்த வருடத்திலிருந்து உலகில் எந்த நாட்டிலும் எரிவாயு, கரி, எண்ணெய் தொடர்பான புது திட்டங்கள் தொடங்குவதை நிறுத்தவேண்டும். நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், எண்ணெய்க் கிணறு போன்ற எதையும் புதிதாக ஆரம்பிக்கக்கூடாது.
-
புதிய புதைபடிவ எரிபொருள் தளங்களைத் தேடிச் செல்லக்கூடாது.
-
2035ம் ஆண்டோடு, புதைபடிவ எரிபொருள்களால் இயங்கும் வாகனங்களின் விற்பனையை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
-
இப்போது புதைபடிவ எரிபொருள் துறையில் இயங்கும் எல்லா தொழிற்சாலைகளுக்கும் மானியங்களைக் குறைக்கவேண்டும், முடிந்தால் முற்றிலுமாக மானியங்களை நீக்கவேண்டும்.
-
புதைபடிவ எரிபொருள்களால் வரும் கரிம உமிழ்வுகளுக்கான வரியை/அபராதத்தை அதிகப்படுத்தவேண்டும்.
இது அதீதமாகத் தோன்றலாம், ஆனால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், இப்போது நம் கையிருப்பில் இருக்கிற எரிபொருட்களில் பன்னிரண்டில் ஒரு பங்கை மட்டுமே நாம் பயன்படுத்தவேண்டும் என்ற தரவைப் பார்த்தால், இந்த யோசனைகளின் முக்கியத்துவம் புரியும்.
இதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில், சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன:
-
இது சராசரி மனிதனுக்கான மின்சாரக் கட்டணத்தை/எரிபொருள் விலையை அதிகப்படுத்துமா?
-
ஏற்கனவே புதைபடிவ எரிபொருள் துறையில் பணியாற்றுபவர்களின் வேலைகள் என்னவாகும்? அவர்கள் எல்லாம் வாழ்வாதாரத்தை இழப்பார்களா?
-
இது உலகப் பொருளாதாரத்தை என்ன செய்யும்?
இவற்றுக்கான பதில்கள் நேரடியானவை அல்ல. புதைபடிவ எரிபொருள்களின் அளவு குறையக் குறைய, அவற்றை எடுப்பதற்கு செலவு அதிகமாகிறது. ஆகவே அதோடு ஒப்பிடும்போது மாற்று எரிபொருள்களின் நிகர செலவு குறைவாகவே இருக்கும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், வேறு எந்த எரிபொருளையும் விட, சூரியஒளி ஆற்றலின் நிகர செலவு குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா போன்ற ஒரு வெப்பமண்டல நாட்டுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. சாதாரண உள் எரிப்பு என்ஜின்களை விட, மின்சாரக் கார்களின் பேட்டரியால் ஏற்படும் மொத்த செலவு குறைவுதான் என்கிறது ஓர் ஆய்வு. பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், வேலைவாய்ப்பு என்னவாகும் என்பதெல்லாம் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
இந்தியாவையும் நிலக்கரியையும் எடுத்துக்கொள்வோம். அனல்மின் நிலையங்களின் மொத்த எண்ணிக்கை (coal fleet) வரிசையில், இந்தியாவுக்கு உலகிலேயே மூன்றாவது இடம். நிலக்கரியை எடுப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகக் குறைவான செலவுதான். அது போதுமான அளவில் இந்தியாவில் கிடைக்கவும் செய்கிறது. ஆனால், புதைபடிவ எரிபொருள்களிலேயே அதிகமான கரிம உமிழ்வுகளை வெளியிடுவது நிலக்கரிதான். இன்னும் சொல்லபோனால், உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கு, நிலக்கரியை எரித்ததால் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, நாம் நிலக்கரியைக் கைவிட்டே ஆகவேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்தியாவைப் பொறுத்தவரை, சூரிய ஒளி மின்சாரத்தை மேம்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தென் தமிழகம் போன்ற பல இடங்களில் காற்றாலைகள் அமைக்க சூழல் ஏதுவாக இருக்கிறது. இவை சில ஆதாயங்கள்.
ஜீவ நதிகள் ஓடுவதால் அணை கட்டி மின்சாரம் எடுக்கலாம்தான். ஆனால், அணை கட்டுவதால் இடம் பெயர்க்கப்படுபவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்கள் என்பதால் அங்கு சூழல்சார் நீதி நிலைநிறுத்தப்படுவதில்லை. இந்தப் பிரச்னையை சரிசெய்து, சூழல் தாக்க மதிப்பீடுகள் சரியாக நடத்தப்பட்டால் அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் ஓரளவு நமக்குக் கைகொடுக்கும். அணுமின் நிலையங்களில் தோரியம் பயன்படுத்தலாம் என்று சில வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கம் குறைவு என்று சொல்லப்படுகிறது.
Also Read: ஆபத்து இல்லை அன்டார்ட்டிகா!
நிலக்கரி சுரங்கங்களிலும் எண்ணெய்க் கிணறுகளிலும் வேலை செய்பவர்கள் மாற்று எரிபொருள் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படலாம். நடைமுறைப்படுத்தும் காலத்தில் சில வருடங்கள் எரிபொருள் கட்டணம் உயரும் என்றாலும், அதன்பிறகு கட்டணங்கள் குறையவே வாய்ப்பு அதிகம்.
இதில் முக்கியமான முட்டுக்கட்டையாக இருப்பது தொழில்நுட்ப முன்னேற்றம். தீர்வை எதிர்த்துவரும் எண்ணெய் நிறுவனங்களின் லாபி எல்லா இடங்களிலும் விரவி இருக்கிறது. ஆகவே மாற்று எரிபொருளை அனைவருக்குமானதாக, குறைவான செலவில் கொண்டு செல்லும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சரியான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டால் நாம் புதைபடிவ எரிபொருள்களைக் கைவிட்டு, சுத்தமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறலாம்.
புதைபடிவ எரிபொருட்களைத் தவிர, காலநிலைத் தீர்வில் முக்கியமான அங்கமாக வேறொன்று இருக்கிறது. நாம் எல்லாரும் அதனோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். அதை மாற்றாவிட்டால் காலநிலைப் பேரிடரைத் தடுக்க முடியாது... அது என்ன அம்சம்? அதிலிருந்து எப்படி விடுபடுவது?
அடுத்த கட்டுரையில் பேசலாம்.
- Warming Up...
source https://www.vikatan.com/social-affairs/environment/can-we-stop-climate-change-if-we-ban-petrol-diesel-and-coal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக