Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

குடும்பத்துடன் நேரம் செலவிட புதிய வழிமுறை... `பணிக்கால விடுப்பு’ என்றால் என்ன?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் புதிய விடுப்புக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. சொந்த ஈடுபாடுகளில் நேரம் செலவிடுதல், பயணங்கள் மேற்கொள்ளுதல், புதிய படிப்பு ஒன்றில் சேருதல் என்பன போன்ற பல்வேறு காரணங்களாக எடுக்கப்படும் ‘சபாடிகல்’ எனப்படும் பணிக்கால விடுப்புகளின் பட்டியலில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது - குடும்பத்துடன் நேரம் செலவிடுவது!

கடந்த ஆண்டு முதல் பல்வேறு அலுவலகப் பணிகள், வேறு வழியே இல்லாமல் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலுக்குத் தகவமைத்துக் கொண்டன. சாத்தியமே இல்லை என்று நினைத்த பணிகளில்கூட வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் இயல்பாகியிருக்கின்றன.

புதிதாகவும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்கும் ஏற்றதாகவும் இருக்கிறது என்ற காரணத்தால் வீட்டிலிருந்து பணியாற்றுவதில் பணியாளர்கள் ஆரம்பத்தில் முதலில் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தொடர்ந்து அதிகரித்த கொரோனாவும், வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் ஏற்படுத்திய புதிய நெருக்கடிகளும் அந்த மகிழ்ச்சியை இல்லாமல் செய்தன. இது பணி, உடல்நிலை, குடும்பச் சூழல் ஆகியவை சார்ந்து பல்வேறு பிரச்னைகள் உருவாக்கியது.

Work From Home

இந்தப் பின்னணியில்தான், கொரோனா காலகட்டத்துக்கு முன்னதாக, பல்வேறு காரணங்களுக்காக எடுக்கப்படும் ‘சபாடிகல்’ விடுப்பை, இப்போது குடும்பத்துடன் செலவிடுவதற்காக ஏன் எடுக்கக் கூடாது என்ற யோசனை பல தரப்பினரிடம் எழுந்துள்ளது.

பயணங்கள் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இப்படியான ஒரு ‘சபாடிகல்’ குடும்பத்தோடு செலவிடுவதற்கு ஏதுவாகவும், பணி சார்ந்த மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு உடல்நிலையைச் சீராக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

சபாடிகல் விடுமுறை என்பது பணியிலிருக்கும்போது பணியாளர் ஒருவருக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் வசதிகளை உள்ளடக்கியது; பணிக்காலத்தில் இரண்டுமுறை இந்த வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு பணியாளருக்கு உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் வேலை - வாழ்க்கை சமநிலையைப் பேண இதுபோன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் உதவும் என்பதால், பணியாளர்களின் கவனம் இப்போது இதில் குவிந்துள்ளது!



source https://www.vikatan.com/news/career/home-sabbaticals-help-boost-family-bonding-during-this-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக