Ad

வெள்ளி, 4 ஜூன், 2021

`தி ஃபேமிலி மேன் -2' வெப்சீரிஸை நிச்சயம் பார்க்கலாம்... சர்ச்சைகள் உண்டுதான், ஆனால்?!

''ஒரு குறிப்பிட்ட குழு மக்கள், எப்படி ஒரு தீவிரவாத கும்பலை ஆதரிக்கிறாங்க?''

''இந்த மக்களுக்கு அவங்க தீவிரவாதிகள் இல்லை, போராளிகள்."

"இந்த உலகத்துல தீவிரவாதிகளுக்கும், போராளிகளுக்குமான விளக்கம் சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி மாறிட்டேதான் இருக்கும். ஆளும் அரசுகள்தான் யார் போராளி, யார் தீவிரவாதினு முடிவு பண்றாங்க.

"என்னால மக்கள் ஏன் இவங்களை போராளிகள்னு நம்பறாங்கன்னு புரிஞ்சுக்க முடியுது."

"உன்னாலயும் புரிஞ்சுக்க முடியுதுன்னா, அப்புறம் ஏன் அவங்களைக் கொல்ல துப்பாக்கி எடுக்குற?''

''நான் என்ன நினைக்கறேன்னு முக்கியமில்ல. நான் என் வேலையை செய்றேன்.''

''ஆமா, அதான் இங்க யதார்த்தம். மூடிட்டு நம்ம வேலையை செஞ்சா இந்த அரசு மெடல் கொடுக்கும். நம்ம கருத்தை சொன்னோம்னா, நரகத்தைக் கொடுக்கும்.''

'தி ஃபேமிலி மேன் - 2' வெப் சீரிஸில் தமிழ், வட இந்திய காவலர்கள் பேசிக்கொள்ளும் ஒரு உரையாடல் காட்சி இது. முதல் பாகத்தைப் போலவே , இரண்டாம் பாகத்திலும் ஏகப்பட்ட சர்ச்சைகள், விவாதங்கள். காவல்துறை இந்த அரசையும், பாதிக்கப்படும் மக்களையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதற்கான குறைந்தபட்ச நியாயத்தை வெப் சீரிஸ் தான் தொடர்ந்து காட்டிவருகிறது. அமேஸான் ப்ரைமின் 'தி ஃபேமிலி மேன்' முதல் பாகம் கேரளத்தில் மூளைச் சலவை செய்த ISI தீவிரவாதிகள் பற்றியது என்றால், இரண்டாம் பாகம் முழுக்க தமிழகத்தைச் சுற்றி நடக்கிறது. தமிழகமும் ஈழமும், அதனைப் பகடைக்காயாக பயன்படுத்தும் ISI தீவிரவாதமும்தான் கதைக்களம். ட்ரெய்லரிலேயே தமிழக அரசு தடை கேட்கும் அளவுக்கு பஞ்சாயத்துக்களைப் பெற்ற 'தி ஃபேமிலி மேன்' இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது ?

Manoj

தேசிய புலனாய்வுத் துறையில் இருக்கும் ஒரு ரகசியப் பிரிவில் வேலை செய்கிறார் ஸ்ரீகாந்த். தவறு நடக்கும் முன்னர், அதைக் கண்டறிந்து தடுக்கும் வேலை. தன் குடும்பத்துக்கே இப்படியான வேலை என்பது தெரியாததால், குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்னைகள். இரண்டையும் எப்படி அவர் சமாளிக்கிறார் என்பதுதான் இரண்டு பாகங்களுக்குமான ஒன்லைன். ISI தீவிரவாத சம்பவங்களும், முடித்து வைக்கப்படாத பிரச்னைகளும் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றன. காஷ்மீர், டெல்லி, பாகிஸ்தான் என முதல் பாகத்தில் இருந்த கதைக்களம் இதில் முற்றிலும் வேறு. எந்த அமைப்பு என வெளிப்படையாக சொல்லாமல், ஈழத்தில் இருக்கும் ஒரு தமிழ் போராளிக்குழு இலங்கை அரசுடன் போரிட்டு மடிந்து போகிறது. இந்திய அரசின் உதவியுடன் நடக்கும் இந்த படுகொலைகளில், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் , சூழ்ச்சியின் காரணமாக ஈழ போராளி அமைப்பின் தலைவர் ISI அதிகாரி ஒருவருடன் இணைந்து தன் ரத்த இழப்புக்கான பழிதீர்க்க முடிவு செய்கிறார். அதை எப்படி ஸ்ரீகாந்த் திவாரி தகர்க்கிறார் என்பததான் ஒன்பது எபிசோடுகளாக நீள்கிறது. இதற்கிடையே சிதைந்துகொண்டிருக்கும் குடும்பத்தையும் இணைக்க வேண்டும். இதுதான் கதை.

ஸ்ரீகாந்த் திவாரியாக மனோஜ் பாஜ்பாய். ஐம்பது வயதைக் கடந்த பின் இன்னும் இளமையாகிக் கொண்டிருக்கிறார் மனோஜ். சட்டென ஒரு நொடியில் பொய்க் கதை சொல்வது, மனசாட்சிக்கு பயப்பட்டு மருகுவது, உடைந்து போவது என பக்காவாக செட் ஆகிறார். ''என்னால இதற்கு மேல முடியாது'' என சொல்லி விடைபெறும் காட்சியாகட்டும், தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் காட்சியாகட்டும்... பாஜ்பாய் செம பக்காவாக நடித்திருக்கிறார். மனோஜின் மனைவி சுசித்ராவாக ப்ரியாமணி. கிளைக்கதை என்றாலும், அதன் அழுத்தத்தைத் தொடர்ந்து பதிய வைக்கிறார். தமிழகக் காவலர்களில் உமையாளாக வரும் தேவதர்ஷினியும், முத்துபாண்டியாக வரும் ரவீந்திர விஜய்யும் ஈர்க்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட கிளைக்கதையில் முக்கிய முகம் சமந்தாவுடையது. ராஜலட்சுமி என்கிற ராஜியாக சமந்தா. 'சூப்பர் டீலக்ஸ்', 'ஜானு'வைத் தொடர்ந்து மற்றுமொரு ஆகச்சிறந்த பர்ஃபாமன்ஸ். தன் கண்களில் பயமோ, வருத்தமோ ஒரு துளியும் தெரியாத ஒரு கதாபாத்திரம். அதற்கு அந்த அளவுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதைத்தாண்டி கதாபாத்திரத்துக்கான நியாயத்தை தன் நடிப்பின்மூலம் ஏற்றுக்கொள்ள வைக்கிறார் சமந்தா.

Samantha

முதல் பாகத்தைப் போல, இதில் அவ்வளவு எளிதாக தமிழ் ஈழப் போராளிகளை தீயவர்களாக காட்ட முயற்சிக்கவில்லை. மிகவும் லாவகமாகவே ஸ்கிரிப்டை கையாண்டிருக்கிறார்கள் ராஜ் & டிகே. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் தொடர் என்பதால், மிகப்பெரும் சர்ச்சையாகிவிடும் என்பதால், பிரதமரை பெண்ணாக்கியது; தமிழ் ஈழ அமைப்பு வெறும் பகடைக்காய் என மாற்றியது என பல சாமர்த்திய முடிவுகள். அதேபோல், வட இந்தியர்கள் சால்ஜாப்புக்காக சொல்லும் 'எனக்கு சவுத் இந்தியன் ஃபுட் பிடிக்கும்' போன்ற வசனங்களுக்கு எதிர் வசனங்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களின் அதீத இந்தி திணிப்புக்கும் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் ஏன் மத்திய அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும் காட்டப்படுகிறது. மத்திய அரசை அதன் அரசியல் காய் நகர்த்தல்களுக்காக பல இடங்களில் விமர்சித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் டப்பிங் பட சூழலை உருவாக்காமல், பல தமிழ் நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தேவதர்ஷினி, மைம் கோபி, அபிஷேக், அழகம் பெருமாள், உதய் மகேஷ், ரவீந்திர முத்து என ஓரளவுக்கு சிறப்பாகவே அதைக் கையாண்டிருக்கிறார்கள். ஸ்மார்ட் மூவ் ரைட்டர்ஸ். ஆனால், உதய் மகேஷ் ஏற்றிருக்கும் செல்லம் போன்ற கதாபாத்திரம் எல்லாம் 'அந்நியன்' பிரகாஷ்ராஜ் போல் ஒரு கட்டத்துக்கு மேல் சிரிப்பைத்தான் வர வைக்கிறது. கேரள மாநில மூளைச்சலவை ISI, தமிழக ஈழ ஆதரவு தொடர்ந்து, மூன்றாவது பாகத்துக்கு வடகிழக்கு சர்ச்சைகள் நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். சர்ச்சைகளின் மூலம் கல்லா கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள் படைப்பாளிகள்.

சர்ச்சையாக்கப்பட்ட தொடரில் பிரச்னைகளே இல்லையா என்றால், அதெல்லாம் ஆங்காங்கே இருக்கிறது. அழுக்கு வீதிகளும், குடிசைகளும் தான் தமிழகம் என்னும் பழைய பாலிவுட் டிரெண்ட் இதிலும் தொடர்கிறது. ஒரு கிராமமே போராளிகளுக்கு உதவுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் மீறி ஸ்லீப்பர் செல் விஷமங்கள் இதிலும் தொடர்கிறது. உண்மையில் இங்கிருக்கும் ஈழ மக்கள் சின்ன சின்ன அடிப்படை வசதிகளுக்குக்கூட இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை இப்படி எந்நேரமானாலும் மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக காட்டுவது விஷமம். தேசப்பற்று சினிமாக்களில் இருக்கும் ஒரு சாபக்கேடு என்றாலும், இது அப்படியாக வாழ்வாதாரத்துக்குப் போராடும் மனிதர்களை அவர்களின் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்கும் என்பதை படைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

Samantha

இந்திய வெப் சிரீஸில் ஒரு நல்ல த்ரில்லர் பார்க்க நினைப்பவர்கள் நிச்சயம் 'தி ஃபேமிலி மேன்' சீரிஸைத் தேர்வு செய்யலாம்.



source https://cinema.vikatan.com/web-series/the-family-man-2-web-series-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக