கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை என்கிற நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
``கொரோனாவைப் போல, பூஞ்சைத் தொற்றுக்கான சிகிச்சையையும் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்திலும் பூஞ்சை நோய்க்கான சிகிச்சையையும் சேர்க்க வேண்டும்" எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவைப் போல, கறுப்புப் பூஞ்சை நோய்க்கு தனியார் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் பெற முடியுமா என்கிற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது. இது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சி.பாலாஜி பாபுவிடம் பேசினோம்.
``எதிர்பார்த்ததைவிட கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே புதிதாகப் பரவிவரும் வெள்ளை மற்றும் கறுப்புப் பூஞ்சை நோய் பரவலும் மருத்துவத் துறைக்கு மிகப் பெரிய சவாலாகவும், மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.
இந்நிலையில், இந்த பூஞ்சை நோய்களுக்கான சிகிச்சைக்கு க்ளெய்ம்கிடைக்குமா என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுந்திருக்கிறது. இந்தப் பூஞ்சை நோய்கள், புதிய தொற்று கிடையாது. முன்பிருந்தே இருக்கக்கூடிய ஒரு வியாதி என்பதால், இதற்கான சிகிச்சைகளுக்கு அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மூலம் க்ளெய்ம் பெற முடியும்.
Also Read: கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கொரோனாவுக்குத் தனியாக பாலிசிகள் இருப்பது போல, இந்த பூஞ்சை நோய்களுக்கும் தனியாக பாலிசி எடுக்க வேண்டுமா என்று கேட்டால், தேவையில்லை என்பதுதான் எனது பதில். கொரோனாவுக்கு என்று தனியே பாலிசிகள் எடுக்காவிட்டாலும், ஏற்கெனவே எடுத்திருக்கும் மெடிக்கல் பாலிசிகள் மூலமும் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும். அது போல, பூஞ்சை நோய்களுக்கும், ஏற்கெனவே உள்ள பாலிசிகள் மூலம் க்ளெய்ம் பெறலாம்" என்றார் தெளிவாக.
source https://www.vikatan.com/business/finance/can-a-person-claim-health-insurance-for-black-fungus-infection-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக