Ad

புதன், 2 ஜூன், 2021

கருணாநிதியின் கடைசி பேட்டி : நண்பன் எம்ஜிஆர், உழைப்பாளி ஸ்டாலின், காழ்ப்புஉணர்ச்சி ஜெயலலிதா!

2016 அக்டோபரில் ஆனந்த விகடனின் 90-ம் ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு பேட்டியளித்தார் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி. அப்போது அவருக்கு வயது 93. இப்பேட்டி எடுக்கப்பட்ட நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கருணாநிதி, விகடனுக்குப் பேட்டியளித்த பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பின்னர் சுய நினைவை இழந்தார். அதனால், விகடனுக்கு அளித்தப்பேட்டியே கருணாநிதியின் கடைசிப் பேட்டியாக அமைந்தது.

அப்பேட்டியின் சுருக்கம் மட்டும் இங்கே!

‘‘விகடனின் பொன்விழாவில் கவிதை பாடினேன். அதற்குள் 90 வந்துவிட்டதா?” எனக் கேட்டபடி, அப்போது அவர் பாடிய கவிதையின் சில வரிகளை நினைவூட்டுகிறார்...

பல்கிப் பெருகும் சொல்வளச் சுனைகளாய்க்

கல்கியின் கதைகளோ கருத்தைக் கவரும்!

கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும் - அதைச்

சொல்கையிலே பண்பாடு தேவை யென்று

செய்கையிலே காட்டியவன் விகடன்தானே?

பொய்கையிலும் நீர்ப்பாசி மிதப்பதுண்டு - அதுபோலச்

சில நேரம் குறையும் உண்டு - ஆனால் குற்றம் இல்லை

என்பது அந்தக் கவிதையின் சில வரிகள். வாழ்த்துகளை வழங்கியபடி கேள்விகளுக்குப் பதில் தந்தார்.

‘‘ `நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்’ என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே... எதனால் இந்த வேகமும் கோபமும்?”

‘‘உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். `ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிடவேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப்பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”

‘‘எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?”

‘‘பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மன நிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேற வேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”

கருணாநிதி

‘‘ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?”

‘‘பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”

‘‘உங்கள் ஆட்சிக் காலத்தின்போது `தீர்க்க முடியாமல் போய்விட்டதே!’ என எந்த விஷயத்தை நினைத்து இப்போதும் வேதனைப்படுகிறீர்கள்?”

‘‘காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைதான் இன்றளவும் என்னை வேதனைப்படுத்துகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இருந்தும், பின்னர் நானே முதலமைச்சர் ஆன பிறகும், தொடர்ந்து பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பலமுறை கடிதங்கள் அனுப்பியும், நீதிமன்றங்களுக்குச் சென்றும் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைத்தும், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தும்கூட, இதுவரை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படாமல் காவிரிப் பிரச்னை முடிவு இல்லாமல் நீடித்துக்கொண்டே இருப்பது எனக்கு வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது.”

“ `ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்’ என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”

‘‘ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.”

கருணாநிதி - அண்ணாதுரை

‘‘தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”

“தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.”


‘‘ `கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!’ என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”

‘‘நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய ‘ஆனந்த விகடன்’ வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.”

“அரசியல் பரபரப்புகளில் இருந்து ஓய்வுபெற்று தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனை ஏதேனும் உங்களுக்கு உள்ளதா?”

“ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைப்பவன் இந்தக் கருணாநிதி. அதனால் தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனையே இல்லை என நீங்கள் ‘குழப்படி’ வேலை செய்ய வேண்டாம். எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்து கழகப் பணிகள் பலவற்றை தம்பி ஸ்டாலின்தான் ஆற்றிவருகிறார் என்பதுதான் உண்மை.”

“ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?”

“நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.”

“முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குணமாகவேண்டி முதலில் நீங்கள்தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!”

“அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது, ‘நானும் பிரார்த்திக்கிறேன்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனேயே, அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.”

ஸ்டாலின், கருணாநிதி

“ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?”

“பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”


“எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவரை ‘மிஸ்’ பண்ணிவிட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?”

“எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில், அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர, கட்சியைவிட்டுப் பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், அவர் மறைவுக்குப் பிறகு அவரை ‘மிஸ்’ பண்ணிவிட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.”


“இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?”
“என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”

“அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் எவை?”
“காழ்ப்புஉணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது; காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால்தான் பொதுவாழ்வில் வெற்றிபெற முடியும்.”


“கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?”

“நான் உரையாடல் எழுதி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரி குமாரி’ திரைப்படத்தை ஒருசில நாட்களுக்கு முன் மீண்டும் பார்த்தேன்.”

“டி.வி-யில் நீங்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி எது?”

“செய்திகளைத்தான் விரும்பிப் பார்ப்பேன். நான் எழுதி வெளிவரும் ‘ராமானுஜர்’, ‘தென்பாண்டிச்சிங்கம்’ போன்ற தொடர் நாடகங்களைப் பார்க்கிறேன்.”

கருணாநிதி!

“நாகரிகத்தால் வளர்ந்துவிட்ட இப்போதைய சென்னையைச் சுற்றிப் பார்க்கும் ஆசை உங்களுக்கு உள்ளதா?”

“அன்றாடம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது, சென்னையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டுதானே செல்கிறோம்.”

“கலாசார சீரழிவுகள் நாட்டில் அதிகமாகி வருகின்றனவே?”

“சீரழிவுகளை அதிகமாக்குவதே மனிதர்கள்தானே?”

“ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டனவே?”

“ தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் மேலும் சில ஆண்டுகள் நம்மோடு இருந்திருந்தால், ஆணவக் கொலைகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாமல் போயிருக்குமோ?”

“என்ன செல்போன் வைத்துள்ளீர்கள்?”

“நான் எனக்கெனத் தனியாக செல்போன் வைத்துக்கொள்வது இல்லை. முக்கியமாகப் பேசவேண்டும் என்கிறபோது, உதவியாளர் நித்யாவே அவருடைய ‘செல்போனில்’ தொடர்புகொண்டு என்னிடம் கொடுத்துவிடுவார்.”

“உங்களுக்குப் பிடித்த பண்டிகை எது?”

“ஆண்டுதோறும் வேளாண் பெருமக்கள் மன மகிழ்ச்சியோடு கொண்டாடும் ‘தமிழர் திருநாள்’ எனப்படும் பொங்கல் பண்டிகை.”

- பெருமிதத்துடன் முடிக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/dmk-leader-karunanidhis-last-interview-to-ananda-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக