பெனிசிலின், அமினோகிளைகோசைட்ஸ், டைக்ளோஃபெனக் போன்ற மருந்துகளால் அலர்ஜியை எதிர்கொள்வோர், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
- கர்ணன்
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
``எந்தவிதமான மருந்து அலர்ஜி உள்ளவர்களும் தைரியமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே வேறு ஏதோ தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதன் விளைவாக அதிக காய்ச்சலோ, நரம்புத்தளர்ச்சியோ, கைகால்கள் செயலிழந்த உணர்வோ, மயக்கமோ வந்திருந்தால் அவற்றைத் தடுப்பூசி தொடர்பான தீவிர பின்விளைவுகள் என்று புரிந்துகொள்ளலாம். இதற்கு முன் இப்படிப்பட்ட அனுபவம் உள்ளவர்கள் மட்டும் மிகவும் யோசித்து, மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து அவர்களின் அறிவுரையின் பேரிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மருந்து அலர்ஜி இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்."
என் வயது 50, கால் அரித்து அரித்து புண்ணாக இருக்கிறது. அலர்ஜி போல் இருக்கிறது. சர்க்கரைநோயும் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடலாமா?
- பக்ருதீன் (விகடன் இணையத்திலிருந்து)
``நீரிழிவு நோய் உள்ளவர்கள் முதலில் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளோ, இன்சுலினோ எடுத்துக்கொள்ள வேண்டும். HbA1c எனப்படும் மூன்றுமாத கால ரத்தச் சர்க்கரை அளவு 6.5 முதல் 7-க்குள் இருக்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகச் சொல்கிற புண்ணுக்கு மருத்துவப் பரிந்துரையோடு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொண்டு புண் ஆறியதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், அந்தப் புண் ஆறாமலிருக்கிறது, ரத்தச் சர்க்கரையும் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்ற நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சரியான ஆலோசனையல்ல. உங்களுக்கு கால்களில் நரம்பு சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை இருந்தாலும் புண் ஆறாமலிருக்கலாம். எதற்கும் ஒருமுறை மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். பொதுவாக எந்த நோய் இருந்தாலும் அதன் தீவிரத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இதயநோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா என எந்தப் பிரச்னை இருந்தாலும் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இணைநோய்களுக்கான சிகிச்சைகளை எடுத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்பதே எங்களைப் போன்ற மருத்துவர்களின் அறிவுரை.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உங்களுக்குத் தயக்கமோ, பயமோ இருந்தால் அதற்கு இது போன்ற விஷயங்களைக் காரணம் காட்டி, தப்பிக்க நினைக்காதீர்கள்".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/news/healthy/can-the-people-who-are-allergic-to-medicines-take-covid-19-vaccines
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக