Ad

வெள்ளி, 18 ஜூன், 2021

முதல்வர் ஸ்டாலினின் திடீர் ஆய்வு: `உதயநிதி வந்ததையே நான் பார்க்கலை’-ரேஷன் கடை ஊழியர் பகிரும் அனுபவம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, லாயிட் சாலையிலுள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது என்ன நடந்தது? அந்த`திக் திக்’ நிமிடங்களையும், நெகிழ்ச்சி தருணத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார், இந்தக் கடையின் ஊழியரான மாரியப்பன். பகிர்ந்துகொண்ட தகவல்கள் சுவாரஸ்யமானவை. அதேசமயம், முதலமைச்சரிடம் இவர் சொல்ல நினைத்த ஒரு விஷயம் நம் மனதைச் சற்று கனமாக்குகிறது.

பொதுவாக, முதலமைச்சர் ஓர் இடத்துக்கு ஆய்வுக்குச் செல்கிறார் என்றால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. சாதாரண அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தாலே ஊழியர்கள் பதற்றமடைவார்கள்... அதுவும் தமிழ்நாட்டின் முதலமைச்சரே நேரில் ஆய்வுக்கு வந்தால் இவர்களது மனநிலை எப்படியிருக்கும்? லாயிட்ஸ் சாலை ரேஷன் கடை ஊழியரான மாரியப்பனிடம் நம் கேள்விகளை முன்வைத்தோம்.

ஸ்டாலின்

``முதலமைச்சர் ஆய்வுக்கு வரப்போறாருங்கற தகவல் உங்களுக்கு எப்பதான் தெரியும்?”

``காலையில் பதினொன்றரை மணி இருக்கும். முதலமைச்சர் வரப்போறாருங்கற விஷயமே எனக்குத் தெரியாது. எப்பவும் போல, என்னோட வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். கொரோனா நிவாரணப் பொருள்களை கொடுத்துக்கிட்டு இருந்தேன். அந்த விவரங்களை நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கும்போது, திடீர்னு முதல்வர், எங்க கடைக்குள்ளார வந்ததும், எனக்கு ஒண்ணுமே புரியலை... அவரைப் பார்த்ததும் எனக்குக் கையும் ஓடலை... காலும் ஓடலை. பதற்றத்தோடு வணக்கம் சொன்னேன்... அவரும் வணக்கம் சொன்னார். என் பக்கத்துல அவர் வந்ததும், எனக்குக் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.

’பயப்படாதீங்க... ஏன் பதற்றப்படுறீங்கனு’’ மென்மையாகப் பேசி, என்னை ஆசுவாசப்படுத்திட்டு, ‘’எல்லாப் பொருள்களும் வந்துடுச்சா’னு முதல்வர் கேட்டாங்க. ’’எல்லாப் பொருள்களும் வந்துடுச்சுனு சொல்லி, அந்தப் பொருள்களைக் காட்டினேன். இன்னைக்கு எவ்வளவு பேருக்கு பணமும் பொருளும் கொடுத்திருக்கீங்கனு கேட்டுக்கிட்டே, மேஜையில இருந்த, நோட்டைப் பார்த்தாங்க. அந்த நோட்டை எடுத்துக்காட்டி, இன்னைக்கு 73 பேருக்கு பணமும் நிவாரணப் பொருள்களும் கொடுத்து கையெழுத்து வாங்கியிருக்கேன்னு சொல்லிட்டு, மெஷின்ல பதிவு செஞ்ச விவரத்தையும் காட்டினோம். அதுலயும் 73 பேருனு காட்டிச்சு. உடனே முதல்வர் சந்தோஷமாகி, கரெக்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்க... சந்தோசம், நல்லா செய்ங்கனு சொன்னார்’.

மாரியப்பன்

``அந்த நேரத்துல உங்கள் கடையில் பொதுமக்கள் எத்தனை பேர் இருந்தாங்க... முதலமைச்சர் கூட எத்தனை பேர் வந்திருந்தாங்க... அவங்க யாரும் உங்ககிட்ட ஏதாவது கேள்வி கேட்டாங்களா?”

’’பொதுமக்கள் பத்து பதினைஞ்சு பேர் இருந்தாங்க. முதலமைச்சரே தன்னோட கையால பணத்தையும் நிவாரணப் பொருள்களையும் கொடுத்தா நல்லா இருக்கும்னு எனக்கு ஆசை ஆனால் இதை அவர் எப்படி எடுத்துக்குவாரோ, அதிகாரிகள் எதுவும் கோபப்படுவாங்களோனு எனக்கு பயம். ஆனாலும் கூட தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, தயக்கத்தோடு அவர்கிட்டே சொன்னேன். முதலமைச்சர்ங்கற பந்தா கொஞ்சம்கூட இல்லை. நான் கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும், நிவாரணப் பொருள் பையையும் ஒரு பெண்கிட்ட கொடுந்தார். முதல்வர்கூட அதிகாரிகளும் கட்சிக்காரங்க சிலரும் வந்திருந்தாங்க. ஆனால் அவங்க எல்லாம் எதுவும் பேசலை. எந்த ஒரு பரபரப்பும் இல்லை’’

``உதயநிதி ஸ்டாலின் உங்களிடம் என்ன பேசினார்?”

``உண்மையைச் சொல்லணும்னா, அவர் வந்ததை நான் கவனிக்கவே இல்லை. அவர் வந்திருக்குற விஷயமே எனக்கு தெரியாது. பதற்றத்துல எனக்கு எதுவுமே தெரியலை. அவரும் அமைதியா இருந்துட்டாரு. டி.வி-யிலயும் பேப்பர்லயும் பார்த்தப்பதான் அவர் வந்த விஷயமே எனக்குத் தெரியும். இது சேப்பாக்கம் தொகுதி. எம்.எல்.ஏ-ங்கற முறையில அவரும் வந்திருக்காருங்கற விஷயமே பிறகுதான் தெரிஞ்சுது.”

``முதலமைச்சரிடம் நீங்க எதுவும் சொல்ல ஆசைப்பட்டீங்களா?”

``ஆமாம். நான் சில வார்த்தைகள் பேச நினைச்சேன். ஆனால் அப்போதைக்கு வார்த்தைங்க எதுவும் வரலை. ஒருவேளை நான் சொல்ல நினைச்சதைச் சொல்லியிருந்தால், என்னோட வேதனைக்கு தீர்வு கிடைச்சிருக்க வாய்ப்பிருக்கு. முதல்வர் அய்யாவோட சொந்த மாவட்டமான திருவாரூர்தான் எனக்கும் சொந்த ஊர். அங்கவுள்ள நீடாமங்கலத்துலதான் என்னோட வீடு இருக்கு. நான் சென்னைக்கு டிரானஸ்ஃபராகி வந்து, பத்து வருசம் ஆச்சு. சில வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எப்படியோ மீண்டு வந்து, தொடர்ந்து சென்னையிலயே வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பொண்ணை க்கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டேன். பையன் தனிக்குடித்தனம் போயிட்டான். என் மனைவிக்குக் குடல்ல கட்டி வந்துடுச்சு. ஆபரேஷன் பண்ணினோம். அதுக்குப் பிறகு கல்லீரல்லயும் கட்டி இருக்குறது தெரிஞ்சுது. அதையும் ஆபரஷன் பண்ணினோம்.

Also Read: ஸ்டாலின்- மோடி சந்திப்பு | நடிகை ரோகிணியின் புகார்| சசிகலாவுக்கு எதிரான தீர்மானம்| #Quicklook

இதனால் என் மனைவி ரணத்தை அனுபவச்சிக்கிட்டு இருக்காங்க. இந்தச் சமயத்துலகூட நான், அவங்க கூட இருக்க முடியலையேனு நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குப் போயி, மாத்திரை மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு, உடனே சென்னைக்கு வந்துடுவேன். எனக்கு திருவாரூருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சா, ரொம்ப உதவியாக இருக்கும். இதை நான் முதலமைச்சர் அய்யாகிட்ட சொல்லியிருந்தால், என்னோட வேதனைக்கு விடிவு பொறந்திருக்கும். நல்ல வாய்ப்பு கிடைச்சும்கூட, அதை விட்டுட்டோமேனு மனசு கிடந்து போராடுது. எங்களோட ரேஷன் கடைக்கு ஆய்வுக்கு வந்த முதலமைச்சர் அய்யாவோட நான் இருக்குற போட்டோவை பத்திரிக்கையில பார்த்துட்டு, திருவாரூர்ல உள்ள என்னோட சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாம் ஆச்சர்யமா விசாரிச்சாங்க. நான் என்னோட வேலையில ரொம்ப சரியா இருந்ததை, முதல்வர் அய்யாவே பாராட்டிட்டுப் போயிட்டார். இதுவே எனக்கு சந்தோசம்தான்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் மாரியப்பன்.



source https://www.vikatan.com/government-and-politics/news/ration-shop-employee-shares-his-experience-with-cm-stalin-during-his-inspection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக