Ad

புதன், 9 ஜூன், 2021

பழங்குடிப் பெண்ணுக்கு இலவச பிரசவம்; நெகிழ வைத்த தனியார் மருத்துவமனை!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாட்டையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா பேரதிர்ச்சியைவிட, தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளை அதிக அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ``தனியார் மருத்துவமனைகள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்” என்று சுகாதாரத்துறை அமைச்சரே கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் தற்போது முதலிடத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காக, சிறப்பு அதிகாரியே நியமிக்கப்பட்டார்.

ஒரு சில மருத்துவமனைகளுக்குக் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, இந்தக் காலகட்டத்திலும் இருளர் பழங்குடிப் பெண் ஒருவருக்கு இலவசமாகப் பிரசவம் பார்த்துள்ளது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை

Also Read: கோவை: கட்டண கொள்ளையை தடுக்க சிறப்பு அதிகாரி நியமனம்! - தனியார் மருத்துவமனைகளுக்கு செக்

பில்லூர் அணை அருகே உள்ள பரளிக்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி கூறுகையில், ``என் மனைவி மீனா கர்ப்பமா இருந்தாங்க. வெள்ளியங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துலதான் பார்த்துட்டு இருந்தோம். நல்லாதான் கவனிச்சாங்க. சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பிருக்குனு சொல்லிருந்தாங்க. ஆனா, ஏதாவது சிக்கல் வந்தா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவோம்னு சொன்னாங்க.

எங்களுக்குக் கொரோனா அச்சம் நிறைய இருக்கு. எங்க பக்கத்து ஊரான வெள்ளியங்காட்ல இருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குப் போனவங்களுக்குக் கொரோனா பாதிச்சுருச்சு. பழங்குடி கிராமங்கள்ல நிலைமை ரொம்ப மோசம். அப்படி கொரோனா பாதிச்சவங்களை ஊருக்குள்ளயே சேர்த்துக்கல.

அவங்க குடும்பத்துல ஆரம்பிச்சு கிராமம் வரை எல்லாரும் சம்பந்தப்பட்டவங்களைப் புறக்கணிச்சுருவாங்க. அதனாலயே, மேட்டுப்பாளையம் போக வேண்டாம்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்கப்பறம்தான் தனியார் மருத்துவமனையில பிரசவம் பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். நிறைய மருத்துவமனைகள்ல விசாரிச்சோம். லட்சங்கள்ல கட்டணம் சொன்னாங்க. எனக்கு சமுதாய பணிகள்ல ஈடுபாடு அதிகம். அந்தத் தொடர்புலதான் டாக்டர் மகேஸ்வரன் சாரோட 'சுபா' மருத்துவமனை பற்றி சொன்னாங்க.

பால்பாண்டி

`அங்க போ, நிலைமையை சொன்னா காசு குறைப்பாங்க'னு சொன்னதால வந்தேன். முதல்ல இங்க சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை ரெண்டுக்கும் ஒரு தொகை சொல்லிருந்தாங்க. மற்ற மருத்துவமனைகளைவிட அது குறைவுதான்.

4 மணி நேரம் தாமதமா வந்திருந்தா குழந்தை உயிருக்கே பாதிப்பாகிருக்கும். அந்த விஷயமே எங்களுக்கு இங்க வந்துதான் தெரிஞ்சது. பொதுவா ஞாயிற்றுக்கிழமை டாக்டர் மருத்துவ மனைக்கு வரமாட்டார்னு சொன்னாங்க. ஆனா, யாரும் எதிர்பாராத விதமா ஞாயிற்றுக்கிழமை டாக்டர் மகேஸ்வரனே நேர்ல வந்து விசாரிச்சார். அன்னிக்கு மதியம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க.

அன்றைய தினமே, `நீங்க சமூகப் பணிகள் செய்யுறதால உங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை'னு சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இக்கட்டான கொரோனா காலகட்டத்துல கட்டணத்துல இருந்து பாதுகாப்புவரை எங்களுக்கு நிறைவான ஒரு பிரசவ அனுபவம் கொடுத்த டாக்டருக்கும், உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார் நெகிழ்ச்சியுடன்.

இந்த மகேஸ்வரன் டாக்டர்தான், சென்ற வருடம் கொரோனா பயன்பாட்டுக்காகத் தனது மருத்துவமனையை அரசாங்கத்துக்கு ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பேசினோம்.

டாக்டர் மகேஸ்வரன்

``கர்ப்பப்பை நீர் குறைஞ்சதால வெள்ளியங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துல, அவங்களை மேல்சிகிச்சை வசதியுள்ள உள்ள மருத்துவமனைக்குப் போகச் சொல்லியிருக்காங்க. அவங்களாகத்தான் நண்பர்கள் மூலமா நம்ம மருத்துவமனைக்கு வந்தாங்க. நீர் வெளியேறிட்டதால அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை.

தாயும் சேயும் நல்லா இருக்காங்க. விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்க. பொதுவா பழங்குடி மக்களுக்கு என்னால முடிந்த உதவிகளைச் செய்துட்டு இருப்பேன். இயலாதவங்கனு தெரிஞ்சு அவங்களுக்கு உதவி பண்றதுல பெரிய சிறப்பு ஒண்ணுமில்லையே?!” என்றார் தன்னடக்கத்துடன்.



source https://www.vikatan.com/news/tamilnadu/mettupalayam-hospital-performed-labor-procedure-to-a-tribal-woman-at-free-of-cost

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக