Ad

சனி, 9 ஜனவரி, 2021

கோலி, கேனோடு அல்ல போட்டி... ஸ்டீவன் ஸ்மித் மோதுவது பிதாமகன் பிராட்மேனோடு! #Smith #AUSvIND

டி20, ஒருநாள் நாள் என கிரிக்கெட்டின் இந்த இரண்டு ஃபார்மேட்டிலும் இல்லாத கிளாஸ் ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் இருக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கும், பெளலர்களும் இடையேயான தரமான, த்ரில்லான, திகிலான, சமமான போட்டா போட்டியை இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே பார்க்கமுடிகிறது. ஒருநாள், டி20 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனோ, பெளலரோ எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லையென்றால் அவரை முழுமையான கிரிக்கெட்டாராக உலகம் ஒப்புக்கொள்ளாது.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், விராட் கோலி, ஜோ ரூட் ஆகிய நால்வருக்கு இடையேதான் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் கடும் போட்டி இருக்கிறது. இந்த நால்வரில் தற்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் கொஞ்சம் பின்தங்கிவிட, ஸ்மித், வில்லியம்சன், கோலிக்கு இடையேயான போட்டி உச்சத்தில் இருக்கிறது.

கொரோனாவுக்குப் பிறகான டெஸ்ட் சீசனில் ஸ்மித், வில்லியம்சன் இருவரும் விளையாடிவரும் நிலையில், குழந்தை பிறப்பின் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் ஒரு டெஸ்ட்டோடு விலகிவிட்டார் விராட் கோலி. அதனால் இப்போது கேன் வில்லியம்சன் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்துவிட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித்துக்கும், வில்லியம்சனுக்கும் இடையேயான போட்டியாக மாறியிருக்கிறது.

அடிலெய்ட், மெல்போர்ன் என இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்மித்தால் சரியாக ரன்களை எடுக்கமுடியவில்லை. குறிப்பாக அஷ்வினுக்கு எதிராக அவர் திணறினார். அடிலெய்ட் டெஸ்ட்டில் 1 ரன்னில் அஷ்வின் பந்தில் அவுட் ஆனவர், இரண்டாவது டெஸ்ட்டில் அதே அஷ்வின் பந்தில் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸிலும் பும்ரா பந்தில் 8 ரன்களில் அவுட் என இரண்டு டெஸ்ட்கள், நான்கு இன்னிங்ஸ்களில் ஸ்மித் அடித்த ரன்கள் மொத்தமே 10.

#Smith #AUSvIND

ஸ்மித்துக்கு கம்பேக்குகள் ஒன்றும் புதிதல்ல. காகிதத்தாள் பிரச்னையில் சிக்கி, ஒராண்டு தடைக்குப்பிறகு களத்துக்கு வந்த ஸ்மித் 2019 ஆஷஸில் செய்த அற்புதங்களை யாரும் மறக்கமுடியாது. தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் எழும்போதெல்லாம் எழுச்சிகொள்ளும் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன், மாவீரன் ஸ்டீவ் ஸ்மித்.

அஷ்வின் தன்னை அச்சுறுத்துகிறார், ஸ்பின்னை எதிர்கொள்வதில் ஏதோ பிரச்னை புதிதாக முளைக்கிறது என்பதை உணர்ந்து ஸ்பின்னுக்கு எதிராகத் தன்னுடைய பேட்டிங்கில் மாற்றம் கொணடுவந்ததே சிட்னியில் ஸ்மித்தின் சதத்துக்குக் காரணம். ஸ்பின்னுக்கு எதிராக ஃபூட் மூவ்மென்ட்டை அதிகப்படுத்தி, அடிக்கடி கிரீஸைவிட்டு வெளியே வந்து அவர் ஆடிய அதிரடி ஆட்டத்தில் இந்தமுறை ஃபோகஸை இழந்தவர் அஷ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு ஒரு விக்கெட்கூட கிடைக்கவில்லை.

''அஷ்வினின் பெளலிங்கை பாசிட்டிவாக எதிர்கொள்ள ஆரம்பித்தேன். அவர் வந்ததுமே அவர் தலைக்குமேல் பந்தை ஓங்கி அடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஆடினேன். என்னுடைய இந்த அணுகுமுறையால், எனக்கு எங்கே பந்துகள் பிட்சானால் சரியாக இருக்கும் என நினைத்தேனோ அந்த லைனில் பந்துவீச ஆரம்பித்துவிட்டார் அஷ்வின். என்னுடைய ஆட்ட வியூகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இதை நினைக்கிறேன்'' என்று முதல் இன்னிங்ஸில் அஷ்வினை எதிர்கொண்ட விதம்பற்றி சொன்னார் ஸ்மித். இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் வீழ்த்திவிட்டார்தான். ஆனால், அதற்குள் 81 ரன்கள் குவித்து, அஷ்வினைப் பல ஓவர்கள் வீசவைத்து இந்தியாவை இம்சைக்குள்ளாக்கினார்.

ப்ரஷரில் விளையாடுவது எப்படி என்று மீண்டும் ஒருமுறை சிட்னியில் பாடம் எடுத்துவிட்டார் ஸ்மித். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இவர் அடித்திருக்கும் 8-வது சதம் இது. இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பான்ட்டிங் ஆகியோரோடு சேர்ந்து லெஜண்ட்ஸ் பட்டியில் இணைந்திருக்கிறார் ஸ்மித். இன்னும் ஒரு சதம் அடித்தால் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்திருக்கும் வீரர் என்கிற சாதனையைப் படைப்பார் ஸ்மித். இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் கொஞ்சம் தாக்குப்பிடித்திருந்தால் அந்த சாதனையும் நிகழ்ந்தேறியிருக்கும்.

அதேப்போல் ஸ்மித்துக்கு சிட்னி டெஸ்ட் சதம் 27-வது சதம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 27 சதங்கள் அடித்தவர் என்கிற பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் ஸ்மித். 27 சதங்களைக் கடக்க சச்சின் 88 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொள்ள, விராட் கோலி 84 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். இப்போது ஸ்மித் அதை 76 இன்னிங்ஸ்களில் கடந்திருக்கிறார்.

ஸ்மித்தின் மனம் முழுக்க கிரிக்கெட்டால் மட்டுமெ நிறைந்திருக்கிறது. அதுதான் அவரது பேட்டிங்கில் அது வெளிப்படுகிறது. சச்சின், கோலி, ஸ்மித், கேன் என மிகச்சிறந்த வீரர்கள் எல்லோருக்குமே தெளிவான மனம், தீர்க்கமான அணுகுமுறை இருந்ததால்தான் மிகப்பெரிய அளவில் அவர்களால் ரன்களைக் குவிக்க முடிந்தது. பெளலர் தனக்கு பந்தை எங்கே பிட்ச் செய்யவேண்டும், எந்த லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசவேண்டும் என்பதை ஒரு பேட்ஸ்மேன் முடிவெடுத்தால் அவர்தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். கோலி, கேன், ஸ்மித் எல்லாம் இந்த வரிசைதான்.

#Smith #AUSvIND

ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதம் அஷ்வின் என எல்லோரும் பரபரக்க, அஷ்வினை எதிர்கொள்ளும் கேம்பிளானோடு வந்து முதல் இன்னிங்ஸில் அவரது மொத்த பாசிட்டிவிட்டியையும் காலி செய்தார் ஸ்மித். முதல் இன்னிங்ஸில் அஷ்வினால் ஒரு விக்கெட்கூட எடுக்கமுடியவில்லை. அஷ்வினுக்கு எதிராக ஆக்ரோஷ ஆட்டம் ஆடிய ஸ்மித், அஷ்வினுக்கு மதிப்பளித்தும் ஆடினார். அஷ்வின் வீசிய நல்ல பந்தைகளை டாட் பால்களாக்கியும், தொடாமல் விட்டும், தடுத்தாடியும் மிகச்சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 62 ரன் ஆவரேஜ் வைத்திருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். டான் பிராட்மேனுக்கு அடுத்து அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தான்(50 டெஸ்ட்டுக்கு மேல் ஆடியவர்கள்). கிரிக்கெட்டின் பிதாமகன் 99.94 ரன் ஆவரேஜோடு முதல் இடத்தில் இருக்கிறார். அதிக ஆவரேஜ் வைத்திருக்கும் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே தற்போது விளையாடிக்கொண்டிருப்பவர். மற்றவர்கள் எல்லோருமே ஓய்வுபெற்றவர்கள். கேன் வில்லியம்சன் 54.31 ரன் ஆவரேஜிலும் விராட் கோலி 53.41 ரன் ஆவரேஜிலும் இருக்கிறார்கள். அதனால், இவர்களுக்கு ஸ்மித்தை நெருங்கவே இன்னும் சிலகாலம் பிடிக்கும். அதற்குள் ஸ்டீவ் ஸ்மித் டான் பிராட்மேனை நெருங்கிவிடுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

31 வயதான ஸ்மித்தின் கட்டுப்பாட்டில்தான் அடுத்த ஐந்து ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் இருக்கும் என நம்பலாம். காகிதத்தாள் பிரச்னையால் ஓர் ஆண்டு, கொரோனாவால் ஓர் ஆண்டு என ஸ்மித் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும்போதே இரண்டு ஆண்டுகள் வீணாகிவிட்டன. இல்லையென்றால் ஸ்மித்தின் ஆவரேஜ் இப்போது 70 ரன்களுக்கு மேல் எகிறியிருக்கும்.

#Smith #AUSvIND

54 டெஸ்ட், 80 இன்னிங்ஸ்கள் விளையாடி 99.94 ரன் ஆவரேஜ் வைத்திருக்கும் டான் பிராட்மேனை, 76 டெஸ்ட் 137 இன்னிங்ஸ்கள் விளையாடி 62.34 ரன் ஆவரேஜோடு விரட்டிக்கொண்டிருக்கிறார் ஸ்டீவன் ஸ்மித்.

கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேனா, ஸ்டீவன் ஸ்மித்தா என்கிற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும். டான் பிராட்மேன் விளையாடியதை நாம் பார்த்ததில்லை. ஆனால், டான் பிராட்மேனுக்கு இணையான ஒரு வீரன் நம் தலைமுறையில் நம் கண் முன்னால் விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனின் ஆட்டத்தை ரசிப்போம்... சமகால சாதனை நாயகனை கொண்டாடுவோம்!



source https://sports.vikatan.com/cricket/steve-smith-is-playing-against-don-bradman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக