Ad

சனி, 9 ஜனவரி, 2021

வட கொரியா: `அமெரிக்காதான் முதன்மையான எதிரி; பகை தொடரும்!’- கிம் ஜாங் உன்

``அமெரிக்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும் அமெரிக்காதான் எங்களுக்கான மிகப்பெரிய எதிரி’’ என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இறுதியில், பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. நான்காண்டு காலமாக நடந்து வந்த ட்ரம்ப் ஆட்சியை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்கா நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

கிம் ஜாங் உன்

இதற்கிடையே, வட கொரியாவில் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், ``அமெரிக்காவின் அதிபராக யார் பதவியேற்றாலும், அமெரிக்காவின் நிலைப்பாடானது நமது நாட்டுக்கும், நமது புரட்சிக்கும் முரணானது. அதனால், அமெரிக்கா நமக்கு எதிரிதான் என்பதில் எப்போதும் மாற்றமில்லை. அமெரிக்கா நமது முதன்மையான எதிரி” என்று கூறியதாகத் தகவல் வெளியானது.

முன்னதாக, ட்ரம்ப் பதவியேற்றபோது வட கொரியாவின் மீதும், அதிபர் கிம் ஜாங் உன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி சர்ச்சைகளை கிளப்பினார். பின்னர், ட்ரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்ந்தது. அச்சந்திப்பானது, சர்வதேச அரசியல் வெளியில் பேசுபொருளானது.

தொடர்ந்து பேசிய கிம் ஜாங் உன், ``வட கொரியா தற்போது அணுசக்தி ஆராய்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், பல அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Also Read: வடகொரியா: கோமாவில் அதிபர் கிம் ஜாங் உன்... ஆட்சிப் பொறுப்பில் இருப்பது யார்?

அமெரிக்கா வட கொரியாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும். வட கொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அதேபோல், ட்ரம்ப் ஆட்சிக்குப் பிறகு அமெரிக்கா- வட கொரியா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கிம் ஜான் உன்னின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/international/us-principal-enemy-says-north-koreas-kim-jong-un

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக