பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் அனைவரும் மெரினா பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா, மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பார்கள். குறிப்பாகப் பொங்கலுக்கு மறுநாளான திருவள்ளுவர் தினத்தன்றும், அதற்கு அடுத்த நாளான காணும் பொங்கலன்றும் இந்த இடங்கள் திருவிழாக் கோலத்தில் இருக்கும். அந்தளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால், இந்த வருடம் நிலைமையே வேறு. கொரோனா தொற்று இன்னமும் முழுமையாகச் சரியாகாத காரணத்தால் மேலே சொன்ன இடங்களுக்குப் பொங்கல் விடுமுறையின்போது (ஜனவரி 15, 16, 17) மக்கள் செல்வதற்குத் தடை உத்தரவு விதித்திருக்கிறது தமிழக அரசு. இந்தத் தடை உத்தரவை மீறி மக்கள் சென்றாலும், மேலே சொன்ன பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும். மெரினா கடற்கரையிலும் மாமல்லபுரத்திலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பொங்கல் விடுமுறையைக் கொண்டாட உதவும் முக்கியமான பொழுதுபோக்கு இடங்களுக்கு இந்த வருடம் செல்ல முடியாது என்பதால், பாதுகாப்பாக வேறு எங்கு செல்லலாம் என தொற்று நோயியல் மருத்துவர் சித்ராவிடம் கேட்டோம்.
``இப்போதுதான் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. தடுப்பூசியும் வந்திருக்கிறது. அதனால் அரசின் தடை உத்தரவை மதித்து நடப்பதுதான் நல்லது. இன்னமும் மழையும் பனியும் பொழிந்துகொண்டிருப்பதால் பெரும்பாலானோர் ஜலதோஷம், இருமல் என்று அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வழக்கமான சீசனல் ஜலதோஷமா, கொரோனா தொற்றா என்று புரியாமல் பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல பொங்கல் விடுமுறையில் கடற்கரை, வண்டலூர் பூங்கா போன்ற இடங்களில் கூட்டம் கூடாமல் இருப்பதே பாதுகாப்பு.
Also Read: பெண் குழந்தைகளைக் கொண்டாடும் சிறுவீட்டுப் பொங்கல்... எப்படி கொண்டாடப்படுகிறது?
விடுமுறையில் வெளியே சென்றே ஆக வேண்டுமென்றால், வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்காக்களுக்குச் செல்லலாம். அங்கும் கூட்டமிருக்கிறது என்றால், செல்லாமல் இருப்பதே நல்லது.
காணும் பொங்கலன்று உறவினர்களைப் பார்க்க வேண்டுமென்றால், வீடியோ காலில் பாருங்கள். அவுட்டிங் சென்றே ஆக வேண்டுமென்றால், உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நிலாச்சோறோ அல்லது கேண்டில் லைட் டின்னரோ சாப்பிடுங்கள்.
வழக்கமான பொங்கல் கொண்டாட்டங்களை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைப்பதுதான் புத்திசாலித்தனம்’’ என்கிறார் டாக்டர் சித்ரா.
source https://www.vikatan.com/news/general-news/how-can-we-spend-these-pongal-holidays-instead-of-visiting-public-places
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக