நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், நேற்று (13.1.2021) காலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இது. அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `துக்ளக் தர்பார்.’ இந்தப் படத்தில் நாம் தமிழர் கட்சியையும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானையும் சீண்டும்விதமாகக் காட்சியமைப்புகள் இருப்பதாகக் கூறி, டீசர் வெளியானதிலிருந்து நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கடுமையாக எதிர்வினையாற்றிவந்த நிலையில், நேற்று காலையில் இப்படி ஒரு ட்வீட்டைத் தட்டினார் நடிகர் பார்த்திபன்.
இந்தப் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், பார்த்திபன் வில்லனாகவும் நடிப்பதாகத் தெரிகிறது. அதில், பார்த்திபன் ஒரு கட்சியின் தலைவராக நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ராசிமான் எனவும், அவர் தலைவராக இருக்கும் கட்சியின் கொடி, லோகோ ஆகியவை நாம் தமிழர் கட்சியின் கொடியைப்போலவே இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல், `புலி இருக்கும் வரையில் உங்கள் புகழ் இருக்கும்’ என்கிற வரிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர், நாம் தமிழர் கட்சியினர்.
இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், வெற்றிக்குமரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், `நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எதிரானதுபோல கட்சியின் கோட்பாடுகளைக் களங்கப்படுத்துவதுபோல சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது. இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் திரு. லலித்குமார் அவர்களிடம் கேட்டபோது `தெரியாமல் நடந்துவிட்டது. அந்த மாதிரிக் காட்சிகளை CG பயன்படுத்தி, படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன்’ என உறுதி அளித்திருக்கிறார்.
இருப்பினும், இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இந்தப் படம் திரைக்கு வருமாயின், உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம்’ என மிகக் கடுமையாக எச்சரிக்கும்விதத்தில் அதில் கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
இந்தநிலையில், இன்று சீமானிடம் பேசிவிட்டேன் என பார்த்திபன் ட்வீட் செய்த பிறகு, வெற்றிக்குமரன் தன் முகநூல் பக்கத்தில்,
Also Read: ''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான் பாய்வது ஏன்?
` `துக்ளக் தர்பார்’ திரைப்பட விவகாரம் குறித்து சீமானிடம் பேசிவிட்டேன். அவர் பெருந்தன்மையோடு பதிலளித்தார்’ என திரு. பார்த்திபன் அவர்கள் ட்வீட் செய்திருக்கிறார்.
திரு. பார்த்திபன் அவர்களே...
எங்களின் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அடிக்கடி சொல்வார்... `எமது தேசியத்தலைவர் பிரபாகரன் அளவுக்கு நான் நல்லவன் கிடையாது. அவர் அளவுக்கு இரக்ககுணம் கொண்டவன், பெருந்தன்மையானவன் கிடையாது’ என்று. அதுபோலத்தான் நாங்களும் சொல்கிறோம்... நாங்களும் எங்கள் அண்ணன் சீமான் அளவுக்கு நல்லவர்களோ, பெருந்தன்மையானவர்களோ கிடையாது.
நாம் தமிழர் கட்சியையோ, அண்ணன் சீமான் அவர்களையோ அவமதிக்கும் வகையில் திரைப்படத்தின் காட்சிகள் இருந்தால், தம்பிகள் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
`சீமானிடமே பேசி சமாதானம் செய்த பிறகும் மீண்டும் எச்சரிக்கும்விதத்தில் பேசியது ஏன்?’ என வெற்றிக்குமரனிடம் கேட்க,
``டீசரில் வரும் பெரும்பாலான காட்சிகள் எங்கள் கட்சியை நினைவுபடுத்துவதுபோலவே இருக்கின்றன. வில்லன் கதாபாத்திரத்துக்கு எங்கள் அண்ணன் பெயரைப்போல, ராசிமான் என்கிற பெயரை வைத்திருக்கிறார்கள். ஏதோ உள்நோக்கத்துடன் செயல்பட்டிருப்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. அது போன்ற காட்சிகளை, கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் அழித்துவிடுவதாகத் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. காரணம், முழுப்படமும் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே வெளியானால் நிச்சயமாக நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். எங்கள் அண்ணன் வேண்டுமானால் பெருந்தன்மையாக நடந்துகொள்ளலாம். ஆனால், நாங்கள் அப்படி நடந்துகொள்ள முடியாது'' என்றவரிடம்,
`ஒரு திரைப்படத்தில் வரும் விமர்சனங்களை அதுவும் படமே இன்னும் வெளியாகாத நிலையில், வெறும் டீசரை மட்டும் பார்த்துவிட்டு இது போன்ற எதிர்ப்பு தெரிவிப்பது சரியா?’ என்று கேட்டோம்.
``படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் நடிகர்கள், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் தீனதயாளன் என அனைவரும் எங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டியிருக்கிறது. `800’ படத்தை தடுத்து நிறுத்தியதால், அதற்கான பழிவாங்கலோ என்று பார்க்க வேண்டியிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து உருவாக்கிக்கொண்டிருக்கும் கட்சியை, போகிற போக்கில் சினிமாவின் பேரில் கொச்சைப்படுத்துவதை, கொள்கைக் கோட்பாடுகளைக் காலி செய்வதை நாங்கள் ஏற்க முடியாது. அது போன்ற காட்சிகளுடன் படம் வெளியானால், நிச்சயமாகக் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்கிறார் அவர்.
மேலும் சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேசும்போது, ``அரசியல் நையாண்டித் திரைப்படங்கள் வெளியாவது இயல்பானதுதான். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகளை அப்படி விமர்சிக்கலாம். வளர்ந்துகொண்டிருக்கிற ஒரு கட்சியை கேலிப் பொருளாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல'' என்கிறார்கள். இது குறித்து விளக்கம் கேட்க, `துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரை நாம் பலமுறை தொடர்புகொண்டும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஆனால், படக்குழுவினர், ``திட்டமிட்டு உள்நோக்கத்தோடு எதுவும் செய்யவில்லை. எல்லாமே யதார்த்தமாக அமைந்ததுதான்'' என விளக்கம் தருகிறார்கள்.
அதேவேளையில், ``ஒரு திரைப்படம் வெளியான பின்னர், அதிலுள்ள கருத்துகள் யார் மனதையும் புண்படுத்தும்விதத்தில் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம். ஆனால், டீசர் வெளியான உடனேயே எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது. தமிழ்த் திரையுலகில் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளின் தலைவர்களை மட்டுமல்லாமல், மற்ற பல தலைவர்களையும் விமர்சித்து திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பல சிந்தாந்தங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கருத்துகளை, கருத்துகளால்தான் வெல்ல வேண்டுமே தவிர நெருக்கடி கொடுக்கக் கூடாது'' என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/why-do-nam-tamilar-party-warn-the-tuglak-darbar-film-crew
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக