கடந்த அத்தியாயத்தில் கிரெடிட் கார்டைப் பெறும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் கிரெடிட் கார்டைப் பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி என்று பார்ப்போம்.
முழுமையாக பணம் கட்டிவிடுங்கள்
கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது பயன்படுத்திய தொகை முழுவதையும், கடன் அட்டை மாதாந்திரத் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பிச் செலுத்தும் தேதிக்கு முன்பாக செலுத்திவிடுவதே நல்லது. மாதாந்திரக் கடன் அட்டை தகவல் அறிக்கையில் உபயோகித்த தொகை முழுமையுமோ அல்லது அதில் 5% திருப்பிச் செலுத்தினால் போதுமானது என்று இரண்டு விருப்பத் தேர்வுகள் தந்திருப்பார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் முழுத் தொகையையும் நீங்கள் கட்டிவிட்டால், பிரச்னையே இல்லை. வெறும் 5% பணம் மட்டும் கட்டினால், கட்டாய பணத்துக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு உங்களைக் காணாமல் அடித்துவிடுவார்கள் என்பதை மறக்காதீர்கள்.
மோசடியிலிருந்து தப்பிக்க இ.எம்.வி
கிரெடிட் கார்டிலும் டெபிட் கார்டிலும் பல விதமான மோசடிகள் நடைபெறுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வங்கிகள் தற்போது இ.எம்.வி (EMV) சிப் பொருத்தப்பட்டுள்ள கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. எந்த விதமான நவீன தொழில்நுட்பம் உடைய அட்டைகளை வழங்கினாலும், வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இல்லாமல் இருந்தால் அது எவ்விதத்திலும் பயனளிக்காது. இந்த மாதிரியான மோசடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இனி....
11 எச்சரிக்கை பாயின்டுகள்...
1. எந்தக் காரணத்தைக் கொண்டும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வேறு ஒருவரிடம் உபயோகத்திற்காக கொடுக்காதீர்கள். நீங்களே நேரடியாக சென்று கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்துங்கள்.
ஆ. OTP, CVV, PIN, UPI MPIN என்று எந்தவிதமான பாஸ்வேர்டுகளையும் யாரிடமும் எக்காரணம் கொண்டும் கூறாதீர்கள்.
2. ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது அது பாதுகாப்பான வலைதளம்தானா என்று உறுதி செய்துகொண்டு பொருள்கள் வாங்கவும். அதாவது, அந்த ஷாப்பிங் வலைதள முகவரிக்கு முன்பு https:// என்று இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பொருள்கள் ஆர்டர் கொடுக்கவும்.
3. என்னதான் பாதுகாப்பான வலைதளமாக இருந்தாலும் அதில் உங்களின் கடன் அட்டை பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பதைத் தவிர்க்கவும்.
4. மெயிலிலோ, வாட்ஸ்அப்பிலோ வரும் எந்த சந்தேகத்துக்கிடமான வலைதள முகவரி லிங்குகளையும் க்ளிக் செய்ய வேண்டாம். அதேபோல, மெயிலிலும் வாட்ஸ்அப்பிலும் வரும் எந்த சந்தேகத்துக்கிடமான இணைப்புகளையும் திறக்க வேண்டாம்.
5. கடைகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது உங்களின் கண்பார்வையில் இருக்குமாறு பயன்படுத்துவது சிறந்தது.
6. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எந்தப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தும்போதும், அந்தப் பரிவர்த்தனை பற்றிய விவரங்கள் உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் வசதியையும், தங்களின் மெயிலுக்கு தகவல் வரும் வசதியையும் தங்களின் வங்கிக் கணக்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பரிவர்த்தனை நடந்தாலும், அது தங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். அதை வைத்துக்கொண்டு தாங்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
7. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்குத் தெரியுமாறு எங்கும் எழுதி வைக்காதீர்கள். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் `பின்’ (PIN) எண்ணை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. அந்த `பின்’ எண்ணை அந்த அட்டையிலேயே எழுதி வைக்காதீர்கள். இந்த மாதிரி கடவுச்சொல்களையும், `பின்’ எண்களையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு என்றே சில செயலிகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி அந்தக் கடவுச்சொல்களையும், `பின்’ எண்ணையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
8. நீங்கள் பல வங்கிக் கணக்குகள் வைத்திருந்து, பல கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்துபவர்களாக இருந்தால், அப்போது அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் `பின்’ எண்ணை, அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள 16 இலக்க எண்ணைக் கொண்டே நிர்ணயித்துக் கொள்ளலாம். அதாவது, முதல் நான்கு இலக்க எண்கள் அல்லது கடைசி நான்கு இலக்க எண்கள் (யூகிக்க எளிதானது என்பதால் இதை மட்டும் தவிர்க்கலாம்) அல்லது முதல் நான்கு இலக்க எண்ணின் முதல் இரண்டு எண்களையும் மற்றும் கடைசி நான்கு இலக்க எண்ணின் முதல் இரண்டு எண்களையும் சேர்த்தோ அல்லது கடைசி நான்கு இலக்க எண்ணில் ஒன்றுகூட்டி வருகிற நான்கு இலக்க எண்ணையோ, இப்படியாக பல்வேறு விதமான வடிவமைப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் `பின்’ என்னை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு ஒரே மாதிரியாக வைத்துக்கொள்ளும்போது, அந்த `பின்’ எண்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வடிவமைப்பு முறையை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படுத்தினால், அது உங்களிடம் உள்ள அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமையும். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் மாதிரியைக் கொண்டே, உங்களின் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் `பின்’ எண்கள் அமைந்துள்ளதால், அனைத்து அட்டைகளிலும் எளிதாக மோசடிகள் செய்வதற்கு வழிவகுக்கும்.
9. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள விவரங்களை எக்காரணத்தைக் கொண்டும், நண்பர்களோ அல்லது வங்கியிலிருந்தோ தொடர்புகொண்டு கேட்டால் தராதீர்கள். வங்கியிலிருந்து தொடர்புகொள்கிறோம் என்று சூழ்ச்சி செய்து தங்களிடம் உள்ள கடன் மற்றும் பற்று அட்டைகளின் விவரங்களை வாங்கிக்கொண்டு, அதை பயன்படுத்தி மோசடிகள் செய்துவிடுவார்கள். நண்பர்களிடம்கூட சொல்லக்கூடாது என்பதற்குக் காரணம், அவர் எந்த அளவுக்கு பொறுப்புணர்வுடனும் பயன்படுத்துவார் என்று நமக்குத் தெரியாது. ஒருவேளை, அந்த விவரங்கள் அந்த நண்பரிடம் இருந்து ஒரு மோசடி கும்பலின் கையில் கிடைத்துவிட்டால் அதனால் ஏற்படும் நஷ்டம் உங்களையே வந்துசேரும்.
10. உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தாதபோது உங்களின் அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பார்வேர்ட் எண் (One Time Password- OTP) குறுஞ்செய்தியாக வந்தால், உடனடியாக அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, அந்த வங்கிக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது நன்மை பயக்கும். அவர்கள் மேலும் அந்த கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என்று தெரிவிப்பார்கள். இல்லை எனில், தற்போது உபயோகிக்கும் கடன் அட்டையை முடக்கிவிட்டு, புதிய கடன் அட்டையைத் தருவார்கள்.
Also Read: இதெல்லாம் செய்தால் கிரெடிட் கார்டும் உங்கள் தோழனே... எப்படி? - #LoanVenumaSir - 11
11. இணையத்திலிருந்து எந்த விதமான செயலியைத் தரவிறக்கி பயன்படுத்தினாலும் அது பாதுகாப்பான செயலிதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு பயன்படுத்துவது நல்லது. யாரேனும் தங்களுக்கு வாட்ஸ்அப்பிலோ அல்லது குறுஞ்செய்தியிலோ லிங்க் அனுப்பி, இந்தச் செயலியைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால் தயவுசெய்து செய்யாதீர்கள். அந்தச் செயலி மூலமாக தங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விவரங்களை பெற்றுக்கொண்டு, மோசடிப் பேர்வழிகள் தங்களின் கைவரிசையைக் காட்டிவிடுவார்கள்.
பலவிதமான மோசடிகள்...
மேலும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி Cloning, Skimming, Phishing, Smishing, Juice jacking என்று பலவித மோசடிகள் நடைபெறுகின்றன. இதில் Cloning என்பது தங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைப் போலவே மோசடியாக வேறொரு கார்டு தயார் செய்வது ஆகும். இது பெரும்பாலும் கிரெடிட் கார்டில் நடைபெறும்.
Skimming எனப்படுவது ஏ.டி.எம்-ல் நடைபெறுவது ஆகும். அதாவது, உங்கள் ஏ.டி.எம் டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும்போது, அந்தத் தகவல்களை அந்த ஏ.டி.எம்-ல் மோசடியாகப் பொருத்தப்பட்டுள்ள ஒரு கருவியைக் கொண்டு அபகரித்து,வேறொரு கார்டு தயார் செய்து தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுவது ஆகும்.
Phishing எனப்படுவது உங்களுக்கு வருமான வரியைத் திரும்பக் கொடுக்கிறோம் என்றோ, பொருள்களை மிக அதிகத் தள்ளுபடியில் கொடுக்கிறோம் என்றோ, தங்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பி, அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் தங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களை வாங்கி, அதைப் பயன்படுத்தி மோசடி செய்வது ஆகும். இதே போன்று மோசடி செய்திகளையும், மோசடி லிங்குகளையும் குறுஞ்செய்தியாக அனுப்பி உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களை மோசடியாக கேட்டுப் பெற்றால், அது Smishing ஆகும். தங்களின் மொபைல் மொபைல் போனை பொதுவெளியில் உள்ள சார்ஜர்களில் சார்ஜ் செய்யும் போது, தங்களின் மொபைல் போனில் உள்ள தகவல்களைத் திருடும் முறைக்குப் பெயர்தான் Juice jacking.
Also Read: சைபர் அட்டாக்கில் இது புதுசு... மின்சாரம் தந்து தகவல் திருடும் 'ஜூஸ் ஜேக்கிங்'! #JuiceJacking
ஆகவேதான் இத்தகைய மோசடிகள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் நடைபெறாமல் இருக்க, அந்த கார்டுகளை தங்களின் கண் பார்வையில் தாங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், அந்த கார்டில் உள்ள தகவல்களை எக்காரணத்தைக் கொண்டும் யார் கேட்டாலும் தரக்கூடாது. இத்தகைய மோசடிகளைத் தவிர்க்க தங்களின் வங்கிக் கணக்கு அறிக்கையும் கடன் அட்டை தகவல் அறிக்கை ஒவ்வொரு மாதமும் சரிபார்க்க வேண்டும். அவ்வாறு தங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் மோசடிகள் நடைபெற்று இருக்கும் நிலையில் அதை உடனடியாக வங்கியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். மேலும், தங்களின் வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கணக்குகளில் நடைபெறும் பரிமாற்றங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, வங்கிக் கணக்கில் மற்றும் கடன் அட்டை கணக்கிலும் வங்கி கொடுக்கும் குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வாங்குவோம்.
source https://www.vikatan.com/business/banking/how-can-we-safeguard-our-credit-and-debit-cards-against-hackers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக