Ad

சனி, 9 ஜனவரி, 2021

`எதிரி நாட்டில்கூட இப்படி நடக்காது!’- முள்ளிவாய்க்கால் நினைவிடத் தகர்ப்பைக் கண்டிக்கும் தலைவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட நிகழ்வு இலங்கை தமிழர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. 

இரவில் இடிக்கப்பட்ட நினைவிடம்.

தற்போது ஒரே இரவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டதால்  மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே போராட்டமும் நடத்தினர். இலங்கை அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பழ.நெடுமாறன் - தமிழர் தேசிய முன்னணித் தலைவர்

``யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும்  நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை சிங்கள ராணுவம் அகற்றியுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பந்தமான எந்த அடையாளமும் இருக்கக்கூடாது என்பதில்  சிங்கள அரசு தீவிரமாக இருக்கிறது. 2009ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் நினைவாக அவ்விடத்தில் ஏராளமான உடல்கள் மற்றும் ராணுவம் விட்டுச்சென்ற ஆயுதங்கள் கிடந்தன. அதை உலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் சென்று பார்த்து அச்செய்தியை உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தனர். இதன் காரணமாக அவ்விடத்தில் இருந்த அனைத்து தடயங்களையும் அழித்துவிட்டனர்.  அழித்ததோடு மட்டுமல்லாமல்  அவ்விடத்தை சுற்றிலும் வேலி அமைத்து அவ்விடத்தை பார்ப்பதற்கு தடை போட்டு விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மனித உரிமை கமிஷன் மற்றும் உலக நாடுகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பழ.நெடுமாறன்

ஜெர்மனி நாட்டில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்கா மற்றும் சோவியத் வீரர்களின் நினைவுச்சின்னம் இன்றும் உள்ளது. ஆனால், இலங்கையில்  நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு சின்னத்தை அகற்றியது மட்டுமல்ல அதற்கு முன்பும் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர்களின் நினைவு சின்னங்களை முழுவதுமாய் தகர்த்து விட்டார்கள். இனப்படுகொலை தொடர்பான எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. அதற்குண்டான செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

எந்த நாட்டிலும் இறந்தவர்களின் கல்லறைகளையும் அல்லது நினைவுச் சின்னங்களை அழிப்பது கிடையாது. முதல் உலகப் போரில் இறந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் கல்லறைகள் சென்னையில் உள்ளன. இன்றும் இங்கிலாந்திலிருந்து அவ்வழியில் வந்த மக்கள் மரியாதை செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். மேலும், 1857ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின் போது இறந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் கல்லறைகள் இன்னும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன. நாம் சுதந்திரம் பெற்ற பிறகும்கூட நாம் அதை அழிக்கவில்லை. உலகம் முழுவதும் இந்த மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால் இலங்கையில் மட்டும் இறந்தவர்களையும் அவமதிக்கக் கூடிய போக்கு தொடர்கிறது. இதை உலக நாடுகள் முன்வந்து இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும்.”

தீபச்செல்வன் - ஈழக் கவிஞர்

நேற்று நடந்த நிகழ்வான,  பல்கலைக்கழகத்தில் நினைவிடத்தை அகற்றியது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நினைவுத் தூண்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தூய்மை இல்லங்களை அழித்தனர். இந்த முறை இந்த அரசு பதவி ஏற்ற பிறகு நினைவுகளையே அழிப்பதற்கான செயலில் தீவிரம் காட்டி வருகிறது. நினைவுகளை அழிப்பதற்கான இந்த செயல் இன ஒடுக்குமுறை, இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. தமிழ் மக்களைத் தொடர்ந்து பழி தீர்ப்பதும் அவர்களை மனரீதியாக புண்படுத்துவது இம்முறையும் தொடர்ந்துள்ளது. அரசியல்ரீதியாகத் தீர்வு காணும்போதுதான் நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கான ஒரு முடிவு பிறக்கும். இப்போது இலங்கையில் இருக்கும் சூழல்,  அரசியல் பற்றி பேசாத... அரசியல் தெரியாதவர்களையும் கூட இந்த சம்பவம் அரசியலை பற்றி சிந்திக்க வைத்துள்ளது.

தீபச்செல்வன்

இங்குள்ள தமிழர்களின் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்த்தது ஒரு கள்ளத்தனமான மேலும் சட்ட விரோதமான செயலாகும். அரசியல்ரீதியாக  போர் வீரர்களை நினைவு கூறுவதே  இதற்கான தீர்வாகும்.”

சிவாஜிலிங்கம் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உறுப்பினர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவு. அந்தப் போரை நடத்தி படுகொலை செய்த ஆட்சியாளர்கள், தங்கள் எந்தவிதக் குற்றத்தையும் செய்யவில்லை என்று சொல்லிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், கடந்த அரசாங்கம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக சொன்னபோது இந்த சம்பவத்தை அரங்கேற்றி அரசு பின்வாங்கியுள்ளது.  ராணுவத்தால் தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு அவர்களைப் புதைத்த இடங்களையும் இயந்திரங்களின் மூலம் சேதப்படுத்தி அந்த இடத்திலேயே ராணுவ முகாம்களை அமைத்துள்ளார்கள்.  ஒரு எதிரி நாட்டில்கூட போருக்காகச் செல்லும்போது அங்கே இருக்கும் கல்லறைகளை யாரும் சேதப்படுத்துவது இல்லை.

சிவாஜிலிங்கம்

அப்படியிருக்க இலங்கையில் மட்டும் இச்சம்பவம் தொடர்ந்து வருகிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த ஆட்சியாளர்களின் வெறிச்செயல் இன்னும் தொடரத்தான் செய்யும் இவ்வாறு தொடர்ந்தால் நாங்கள் எப்படி அந்த ஆட்சியாளர்களுக்கு கீழ் வாழ்வை நகர்த்துவது? இந்த ஆட்சியாளர்கள் `தேசிய நல்லிணக்கம், எதிர்காலத்தில் சமத்துவம்’ என்று வாயால் பேசிக்கொண்டே இன ரீதியாகவும் மத ரீதியாகவும் எங்களை துன்புறுத்துகிறார்கள். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்ததற்குத் தீர்வாக உடனடியாக அதை கட்டிக் கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்குத் தீர்வு காணும் வகையில் வருகின்ற 11ஆம் தேதி இங்குள்ள தமிழ்  கட்சிகளும் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து   காலை 6 முதல் மாலை 6 மணி வரை முழுநேரக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் சுழற்சி முறையில் நடைபெறும். இங்கு சட்டம் ஒழுங்கு என்பது கிடையாது. இங்குள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தை மீறி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்கள். இதற்கான தீர்வு என்றால் தமிழ் மக்களும் தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து போராடுவதுதான்.”



source https://www.vikatan.com/social-affairs/controversy/sri-lanka-authorities-destroy-monument-at-jaffna-university

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக