Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

டிராஃபிக் போலீஸாக மாறிய பாடகர் சங்கர் மகாதேவன்!

ஜனவரி 18-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளைத் தடுக்க தேசிய சாலை போக்குவரத்துக்கழகத்தால் ஒவ்வொரு ஆண்டும் இது கடைப்பிடிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களில் உயிரிழந்து வருகின்றனர்.

டிராபிக் கான்ஸ்டபிளாக சங்கர் மகாதேவன்

மும்பையில் சாலை பாதுகாப்பு மாதம் டிராபிக் போலீசாரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு மாதத்தில் பொதுமக்கள் ஒரு நாள் மட்டும் டிராஃபிக் போலீசாக செயல்படும் திட்டத்தில் சேரலாம் என்று நவிமும்பை டிராஃபிக் போலீசார் அறிவித்திருந்தனர். இதற்காக பொதுமக்கள் தங்களை நவிமும்பை டிராஃபிக் போலீசாரின் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால் அவர்கள் ஒரு நாள் டிராஃபிக் போலீசாக பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்படும். அந்த வகையில், பாடகர் சங்கர் மகாதேவன் நவிமும்பை வாஷியில் ஒரு நாள் டிராபிக் போலீசாக செயல்பட்டார்.

மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிக்க வாஷி சிவாஜி சோக் சிக்னலில் அவர் டிராஃபிக் போலீசாக பணியாற்றினார். டிராஃபிக் போலீசாக பணியாற்றியதோடு ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கரம் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொண்டார். மும்பையில் டிராஃபிக் போலீசாக பணியாற்ற விரும்புபவர்கள் http://trafficnm.com என்ற இணையத்தில் பிப்ரவரி 17ம் தேதி வரை தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சங்கர் மகாதேவன் இறுதியில் தனக்கு பிடித்த ஒரு பாடலை பாடி விழிப்புணர்வு பிரசாரத்தை முடித்து வைத்தார். வாஷி பகுதியில் தான் சங்கர் மகாதேவன் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சிக்கி 500 பேர் வரை உயிரிழக்கின்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/bollywood/singer-shankar-mahadevan-becomes-traffic-constable

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக