Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

மதுரை: பிரமாண்ட ஏற்பாடுகள்... `ரஜினி வழியா... கமல் வழியா?’ - மு.க.அழகிரி நாளை முடிவு!

பரபரப்பாக எழுந்த ரஜினியின் அரசியல் என்ட்ரீ அதே பரபரப்புடன் முடிந்துள்ள நிலையில், தென் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக மு.க.அழகிரியின் ஆலோசனைக் கூட்டம் ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 வருடங்களாக தி.மு.க-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி, ஒருவழியாக ஜனவரி 3-ல் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்ததை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அழகிரி நடத்தும் கூட்டமெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதுபோல் தி.மு.க தலைமையின் செயல்பாடு உள்ளது.

அழகிரி

இச்சூழலில் அழகிரி நடத்தும் ஆலோசனைக் கூட்ட ஏற்பாடுகள் தற்போது மதுரையில் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதுமிருந்து ஆதரவாளர்கள் திரண்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுவதால் மதுரையில் பெரிய விழா அரங்கமான பாண்டி கோயில் அருகே நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள துவாரகா பேலஸ் அரங்கத்தை பிடித்திருக்கிறார்கள். சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான தொழிலதிபருக்கு சொந்தமான இந்த அரங்கத்தின் ஒரு நாள் வாடகை 4 லட்சம் என்று சொல்லப்படும் நிலையில் இந்தக் கூட்டத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான சிலர்.

முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கமான இதன் வளாகமும் மிகப்பெரியது. கார் பார்க்கிங் விசாலமாக இருந்தாலும் வாகனங்கள் அதிகம் வரும் என்பதால் அருகிலுள்ள தனியார் இடத்திலும் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்துள்ளார்கள். இருபதாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் உள்ள அரங்கம்

மாலையில் நடக்கும் கூட்டம் என்றாலும் அனைவருக்கும் பிரபலமான மனப்பட்டி சமையல்காரர்களின் கைவண்ணத்தில் மட்டன் பிரியாணி வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் டீ காபி ஸ்நாக்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. இக்கூட்டம் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் நடைபெற காவல்துறையினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆளும் தரப்பில் அதிகாரிகளுக்கு செவிவழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாம். வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை எந்த சோதனையும் செய்யப்பட மாட்டாது என்கிறார்கள்.

``ரஜினிக்கு ஆதரவு அல்லது தனிக் கட்சி என்ற இரண்டே இரண்டு அஜெண்டாவை பற்றி மட்டும் ஆலோசிக்கவிருந்த நிலையில், அரசியலுக்கு நோ சொன்ன ரஜினியின் அறிவிப்பு உற்சாகமாக இருந்த அழகிரியை யோசிக்க வைத்துள்ளது. ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்ட நேரத்தில் அழகிரியும் அதே போயஸ் கார்டன் ஏரியாவிலுள்ள மகன் துரை தயாநிதி வீட்டில்தான் இருந்தார். தன்னுடைய ஆப்ஷனில் ஒன்றுக்கு இனி வேலை இல்லை என்பதால் ஆலோசனைக் கூட்டத்தில் தனிக்கட்சி பற்றி மட்டும் ஆதரவாளர்களி டம் கருத்து கேட்க உள்ளார்.

எப்போதும் தன் வீட்டுக்கு அருகிலுள்ள தயா மண்டபத்திலோ அல்லது ராஜா முத்தையா மன்றத்திலோதான் இதுவரை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அழகிரி, பாண்டி கோயில் அருகே நிகழ்ச்சி நடத்துவதற்கு சென்டிமென்டும் காரணம்” என்கிறார்கள்.

அரங்கம் உள்ளே

இங்குதான் அழகிரியின் எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதா 2011 -ல் தேர்தல் பிரசாரம் செய்து பெரு வெற்றி பெற்றார். அந்த மைதானத்தில் நடத்தவில்லை என்றாலும், அதன் அருகேயுள்ள அரங்கத்தில் நடத்துவது தனக்கு அரசியலில் வெற்றியைத் தரும் என்று அழகிரி நம்புகிறார். கொரோனா கட்டுப்பாடு மட்டும் இல்லையென்றால் இந்தக் கூட்டத்தை பெரும் மாநாடாக நடத்தியிருப்போம் என்கிறார்கள் ஆதரவாளர்கள். தி.மு.க-வில் நடக்கும் உள்குத்துகளால் இந்தமுறை வட மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களில் இருந்து பெருவாரியாக ஆதரவாளர்கள் வருவார்கள் என்கிறார்கள்.

ஆலோசனைக் கூட்ட ஏற்பாட்டில் தீவிரமாக செயல்பட்டு வரும் முன்னாள் தி.மு.க மண்டலத் தலைவரும், அழகிரியின் தீவிர விசுவாசியுமான இசக்கிமுத்துவிடம் பேசினோம், ``நாங்கள் என்றைக்குமே தி.மு.கதான். தி.மு.கவுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை. அதே நேரம் அண்ணன் அழகிரி எடுக்கும் முடிவைத்தான் ஏற்றுக்கொள்வோம்.

இசக்கிமுத்து

இன்று வரை பல்லாயிரக்கணக்கான பேர் தி.மு.க-வில் இருந்துகொண்டே அண்ணனின் ஆதரவாளர்களாக தொடர்கிறார்கள். கட்சிக்காகத்தான் அல்லும்பகலும் உழைத்தார். தென் மாவட்டங்களில் தி.மு.கவை கட்டுக்கோப்பாகவும் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெறவும் அண்ணன் அழகிரிதான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரின் வளர்ச்சியும் புகழும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அதனால் பல பொய்ப்புகார்களை கூறி கட்சியை விட்டு நீக்கினார்கள்.

எல்லாக் கட்சியிலும் வருவது போன்ற உள் கட்சி விவகாரம் என்பதால்தான் 6 வருடங்களுக்கு மேலாக அண்ணன் அமைதியாக இருந்து வந்தார். நாங்களும் அவர் பின்னால் அமைதியாக இருந்து வருகிறோம். அண்ணன் நினைத்தால் அப்போதே கட்சி ஆரம்பிக்க முடியாதா? இவ்வளவு ஏன் கலைஞர் மறைவுக்காக அண்ணன் சென்னையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். அப்போதே அவர்களை வைத்து தனி இயக்கம் தொடங்க விரும்பவில்லை. தான் எடுக்கும் எந்த முடிவும் அண்ணா, கலைஞரால் வளர்க்கப்பட்ட இயக்கத்துக்கு இடையூறாகிவிடக் கூடாது என்று பொறுமை காத்தார். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. பழையபடி மீண்டும் தி.மு.க-வில் இணைந்து செயல்பட அண்ணன் தயாராக இருந்தும், ஸ்டாலின் தரப்பு அதற்கு ஒத்துவரவில்லை. அப்படி என்ன தப்பு செய்து விட்டார்?

இசக்கிமுத்து

தி.மு.க-வை அழிக்க தனிக்கட்சி தொடங்கிய வைகோவை தன் கூட்டணியில் வைத்திருக்கும் ஸ்டாலின், தி.மு.க-வை வளர்த்த அண்ணனை எதிரியாக பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை. தென் மாவட்டங்களில் நடந்த பல இடைத்தேர்தல்களில் வெற்றி, நீண்ட காலத்துக்குப்பின் மதுரை நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க வசமாக்கியது என்று அவரின் உழைப்பால் தி.மு.க பலமாக இருந்தது. நாங்களும் அண்ணன் தி.மு.க-விலிருந்து செயல்பட வேண்டுமென்றே விரும்புகிறோம். வருகின்ற சட்டமன்ற தேர்தல் அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல தி.மு.க-வுக்கும் வாழ்வா சாவா போராட்டம்தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் தி.மு.க குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. அது மீண்டும் நடக்காமல் இருக்க ஸ்டாலின் யோசிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் தி.மு.க தோற்க கூடாது என்று நினைக்கிறோம்.

அண்ணனுக்கு பா.ஜ.க-வில் சேருகிற எண்ணமோ, அதை ஆதரிக்கிற என்ணமோ எப்போதும் இல்லை. அவரை யாரும் இயக்கவில்லை. எங்கள் பலம் என்ன என்பதை காட்டத்தான் இந்த ஆலோசனைக்கூட்டம். இந்த கூட்டத்தின் முடிவை 30-ம் தேதி வருகிற அண்ணனின் பிறந்த நாளில் அறிவிப்பார். தமிழக அரசியலில் அண்ணன் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை காட்டுவோம்" என்றார்.

ஆலோசனைக் கூட்ட விளம்பரம்

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் என்று அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பிலிருந்து சிலர் அழகிரிக்கு இப்போதே மெசேஜ் அனுப்பி வருவதாக சொல்கிறார்கள். அழகிரி எடுக்கப்போவது ரஜினி வழியா...கமல் வழியா என்பது நாளை மாலை தெரியும்....!



source https://www.vikatan.com/news/politics/mk-azhakiri-plan-for-2021-election-meeting-to-be-held-tomorrow

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக