புத்தாண்டில் புது அட்வைஸா என நண்பர்கள் யாரும் கடந்துவிடவேண்டாம். சமூக வலைதளங்களே வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட நிலையில் நிறுத்துங்க... இதையெல்லாம் நிறுத்துங்க என்கிற ஒரு நண்பியின் கடிதமே இது... நீங்க பண்ற எல்லாமே எங்களுக்குப் புரியது... எல்லாத்தையும் கடந்துபோகப் பழகிக்கிட்டோம்... ஆனா, எங்களுக்குத் தெரியாதுன்னு இதெல்லாம் பண்ணாதீங்க பாய்ஸ்!
ஃபேஸ்புக்கில் ஒரு பெண் காதல் ப்ரேக்-அப் கவிதை ஒன்றை பதிவிடுகிறார். அதை இன்னொரு பெண் பாராட்டுகிறார். இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் அதை கேலி செய்யும் விதமாக போட்டோ ஒன்றை கமென்ட் செய்கிறார். இன்னொரு ஆண் முதலில் கேலி செய்த ஆணை பாராட்டுகிறார். அவ்விடத்தில் அந்த இரண்டு பெண்களுக்குமே அதன் அர்த்தம் புரியாததால் உரையாடலில் பங்கேற்கவில்லை. ஆனால் அந்த ஆண்களின் உரையாடலை வைத்து இந்த பெண்களும் அதற்கு உடன்படுகிறார்கள் என நினைத்துக்கொண்டு அதே பாணியில் மற்ற ஆண்களும் பேச ஆரம்பிக்கின்றனர்.
மேலோட்டமாகப் பார்த்தால் ''ஒரு புறாவுக்குப் போரா?'' என்பதுபோல் இது மிகச் சாதாரண விஷயமாகத் தெரியும். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் ஓர் ஆணின் உளவியலை யாரும் பொருட்படுத்துவதில்லை. காலங்காலமாக சமூகம் என்பது ஆண்களையும், அவர்களை சார்ந்திருப்பவற்றையும் குறிப்பது. பொது இடங்கள், அதிகார மையங்கள் எல்லாம் இன்றும் பெரும்பாலும் ஆண்கள் புழங்கும் இடங்களாகவே இருக்கின்றன. அவற்றில் திடீரென்று பெண்கள் நுழையும்போது ஆண்கள் சிறிது கவனமாக, நாகரீகமாக இயங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது அவர்களுக்கு பிரச்னையாக இருக்கும் நேரங்களில் அவர்கள் இரண்டுவிதமான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
''உன் இடம் இதுதான்'' என வெளிப்படையாக வரையறை செய்து பெண்களை அதற்குள் நிறுத்த முயற்சி செய்வது.
ஆண்களின் அநாகரீக செயல்களை “ஈஸியா எடுத்துக்கிட்டு கடந்துபோக பழகிக்கொள்” என முற்போக்கு பேசும் பெண்களுக்கு அறிவுறுத்துவது.
சோஷியல் மீடியா வந்தபிறகு பொதுவெளியில் பெண்களின் இயங்குதளம் விரிவடைந்திருக்கிறது. ஒத்த கருத்துடையவர்களை இணைக்கிறது. ஓர் அரை நூற்றாண்டுகாலத்தை பத்து வருடங்களில் லாங் ஜம்ப் செய்து கடக்க முடிந்திருக்கிறது. அதேசமயம் இங்கு பெண்ணாக இருப்பதாலேயே அதிகம் ஃபாலோயர்ஸ் இருப்பார்கள், லைக் கிடைக்கும் எனும் பொதுக்கருத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்ணாக இருப்பதால் மட்டும் அதிகம் பேரால் விரும்பப்படுவார்கள் என்றால் இங்கு நயன்தாராவும், திரிஷாவும் அல்லவா சூப்பர்ஸ்டார்களாக இருந்திருப்பார்கள்?
இந்த உலகம் முழுவதுமே ஆணுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சோஷியல் மீடியாவும் அதன் அடிப்படையில்தான் இயங்குகிறது. நேரடி அரசியல் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களை தவிர்த்து அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து சோஷியல் மீடியாவில் எழுதி ஆண்களைவிட பிரபலமாக இருக்கும் பெண்களின் பெயர்களைக் கேட்டால், உங்களுக்கு நினைவில் வரும் பெயர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது.
பெண்களின் பதிவுகளில் “சாட்டையடி பதிவு டோலி” என்று கமென்ட் செய்து அது போஸ்ட்டாவதற்குள் அந்தப் பக்கம் அவசர அவசரமாக ‘ஆஃப்பாயில்', 'அரைவேக்காடு ஆன்ட்டி', 'ஆர்வக்கோளாறு' எனப் பட்டம் கட்டப்படுகிறது. ஏனென்றால் பெண்களின் எழுத்து இங்கே முன்முடிவுகளுடன் அணுகப்படுகிறது. முழுவதுமாக படிக்காமல், கருத்துகளை உள்வாங்காமல் விமர்சனம் செய்யப்படுகிறது. அவர்களின் எழுத்து நன்றாக இருக்கிறது என்பதை அவசர அவசரமாக மனம் நம்ப மறுக்கிறது. அந்த காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் “பெண்ணாக இருப்பதாலேயே லைக் வருகிறது” என்பது.
பெண்களின் அறிவு பெரும்பாலும் இளக்காரத்துடன்தான் பார்க்கப்படுகிறது. தனக்கு எதிர்க்கருத்து கொண்டிருக்கும் பெண்களை, பெண்ணியம், முற்போக்கு பேசுபவர்களே ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் கேவலப்படுத்துவது, கும்பல் சேர்த்துக்கொண்டு வரையறை இல்லாமல் வார்த்தைகளால் வன்முறை செய்வது, புதிதாக பேச, எழுத வரும் பெண்களை விமர்சனம் என்ற பெயரில் கேலி செய்து முடக்குவது, தங்களுடைய ப்ரொஃபைலை லாக் செய்து வைத்துக்கொண்டு மாற்றுக் கருத்துள்ள பெண்கள்மேல் வன்மம் கக்குவது, வேலை அல்லது தொழிலில் முன்னேறும் பெண்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, கல்வி, திறமை எதுபற்றியும் தெரியாமல் முன்னேற்றத்தை சந்தேகித்து Character assassination செய்வது என வீட்டை விட்டு சற்றே தெருவை எட்டிப்பார்த்தாலும் கல்லை விட்டெறிந்து அவளை நிரந்தரமாக வீட்டிற்குள்ளே அடைத்துவிடும் ஆதிக்க உணர்வு இங்கு ஆண், பெண் இருபாலருக்குமே உள்ளது.
பெரும்பாலும் இவற்றை செய்பவர்கள் தங்கள்மேல் நம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மையில் சுயபச்சாதாபம் தேடுபவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக தங்களுக்கு எதிர்கருத்து கொண்டிருக்கும் எல்லா பெண்களையும் குறிக்க ஒரே சொல்தான். ஆமாம்... இப்போது உங்கள் மனதில் தோன்றிய, இங்கே மிக சகஜமாக புழங்கக்கூடிய, பெண்கள் பார்த்தும் பார்க்காதது போல் கடக்க வேண்டும் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் அந்த சொல்!
இணைய வன்முறையைத் தாண்டி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள்வரை கருத்தியல் பேசும் பெண்களை முடக்க எல்லோரும் எடுக்கும் கேவலமான ஆயுதம் பாலியல்/பாலினம் சார்ந்த அவதூறுகள். அதில் ஒன்று புகைப்படங்களை மார்ஃபிங் செய்வது. அப்படி தவறாக சித்திரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை நீக்க சம்பந்தப்பட்ட பெண்ணே மிகப்பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. ஃபேஸ்புக் போன்ற தளங்களில் புகார் அளித்தால் Facebook Community Standardsன் படி அதில் எந்தத் தவறும் இல்லை என்று பதில் வரும்.
சமூகம் சார்ந்து இயங்கும் பெண்களின் வீட்டு முகவரி கேட்டு வெளிப்படையாகவே மிரட்டல் விடுபவர்களும் உண்டு. இந்த மிரட்டல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவுடன் முடிந்துவிடும் என எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. போட்டோ மார்ஃபிங் செய்பவர்களைவிட, ”இப்படி நடக்கும்னு தெரிஞ்சுதானே போட்டோ போடுற”,
”இதுக்குத்தான் பெண்கள் சோஷியல் மீடியாக்குலாம் வரக்கூடாது” என்று சொல்லும் “#துப்பட்டா_போடுங்கள்_தோழி” குரூப்தான் மிக ஆபத்தானவர்கள்.
பிடித்த சினிமா நடிகரின் படத்தை பகிர்ந்தால் ''உங்க வீட்ல அவர் ஒண்ணும் சொல்லமாட்டாரா” எனக் கேட்பது, காதல் கவிதை எழுதினால், ''அது அவளது கணவரை பற்றி அல்ல” என ஆணித்தரமாக நம்புவது, சோஷியல் மீடியாவில் சுதந்திரமாக புழங்கும் பெண்களுக்கு ''குடும்ப வாழ்க்கை சரியில்ல போல” என்று முடிவு செய்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது, ஒரு பெண் தன்னுடைய கமென்ட் செக்ஷனில் புதிதாக ஓர் ஆணுடன் பேசும்போது அந்த ஆணின் ஜாதகம் வரை அலசி ஆராய்வது, அந்த ஆண் யாரென்று கூச்சமில்லாமல் வெளிப்படையாக அந்த கமென்ட் செக்ஷனிலேயே கேட்பது என அநாகரிகங்களின் எல்லை மீறல் எக்கச்சக்கம்.
பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் #எனி_ஹெல்ப்_ஷாலினி என ஆஜராவது போல் பில்டப் செய்யும் #ஆண்_ஃபெமினிஸ்டுகள், யாராவது பிரபல எழுத்தாளர் 'பெண்களின் உள்ளக்கிடங்கை' ஆராய்ச்சி செய்து அசிங்கமாக கட்டுரை எழுதினால், முதல் ஆளாய் அங்கேபோய் 'பேருவகை' அடைந்து ஆஹா ஓஹோவென்று கமென்ட் செய்வது தொன்றுதொட்டு தொடரும் பாரம்பரியமாக இருக்கிறது.
ஒருபக்கம் தினமும் மது அருந்துவதை பெருமையாக போட்டோவோடு பதிவிடும் ஆண்கள், காதலிகள் நிறைய இருப்பதாக பீற்றிக் கொள்ளும் கவிஞர்கள், நடிகைகளின் அரை நிர்வாண படங்களை பகிர்ந்து #Discussion செய்யும் ஆண்கள் போன்றவர்களை #வாழ்ற_மச்சான் என கொண்டாடுவது, மறுபக்கம் ஒரு பெண் சாலையோர டீக்கடையில் டீ குடிக்கும் படத்தை பகிர்ந்தால்கூட, 'குடும்பப் பெண்' டெம்ப்ளேட்டுடன் ஓடி வருவதெல்லாம் வேற லெவல் முற்போக்கு.
திருமணம் ஆன பெண்களிடம் அவர்களின் கணவர் மற்றும் குழந்தைகள் படங்களை பகிருமாறு சொல்வது, குடும்ப விவரங்கள் பற்றி தொடர்ந்து பொதுவெளியில் கேள்வி எழுப்புவது, ஒரு பெண் குடும்ப அமைப்பில் வாழ்வதாக காட்டிக்கொண்டால் இணைய பாலியல் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும், மரியாதையாக(?!) நடத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்துவது, பேஸ்புக் குடும்ப பெண்களுக்கானது இல்லை அதனால்தான் என் மனைவியின் படத்தைப் பகிர்வதில்லை என்று வெளியில் அறிவுரை சொல்பவர்கள் இன்பாக்ஸில் வந்து “அழகாய் இருக்கிறீர்கள் தோழி” என வெட்கமே இல்லாமல் வழிவது, காதலி/மனைவியின் ஐடிக்களில் இருந்து அவர்களுடைய பெண் நண்பர்களின் புகைப்படங்களுக்கு கமென்ட் செய்வது, இன்னும் ஒருபடி மேலே போய் தன்னுடைய மனைவியின் பெயரில் ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி தன் ஆண் நண்பர்களையே வேவு பார்ப்பது, அந்த ஆண் நண்பர்களுடன் நட்பில் இருக்கும் பெண்களிடம் அவர்களைப் பற்றி கேவலமாக பேசுவது என தனி மனித சுதந்திரம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆண்கள் மட்டுமே செய்யும் சில வேலைகள் #WowBro என பிரமிக்க வைக்கின்றன.
பேஸ்புக் இப்படி என்றால், இன்ஸ்டாகிராம் வேறு ஒரு தனி கிரகம். அறிமுகமில்லாத பெண்களிடத்தில் கமென்ட் மற்றும் இன்பாக்ஸில் ஒருமையில் பேசுவது, முன் அறிமுகமில்லாதவர்களை நேரடியாக வீடியோ காலில் அழைப்பதெல்லாம் 90s மற்றும் 2K கிட்ஸின் #InstagramSpecials.
ஒரு பெண் சோஷியல் மீடியாவில் கணக்குத் தொடங்குவதே அவளிடம் எல்லா உரிமைகளும் எடுத்துக்கொள்ள அவள் கொடுக்கும் அனுமதி என நம்பிக்கொண்டிருக்கும் மூடர்கூடம் இன்னமும் உண்டு. ஸ்ஸப்ப்பாஆஆ! இறுதியாக, இவற்றை எல்லாம் வெளிப்படையாக பேசினால், “இவதான் எங்கயோ செமத்தியா வாங்கிருக்கா மச்சான்னு” நக்கல் செய்வது!
படித்து, எழுதி, விவாதம் செய்துதான் கற்க முடியும். அதற்கான பெரும்வெளியை இந்த சோஷியல் மீடியா அளித்திருக்கிறது.
பொதுவெளியில் இயங்கும் பெண்களை ஒழுக்கம் சார்ந்து ஒடுக்க நினைக்கும் சமூக சூழலில், இதுவரை முகநூலில் எழுதத் தயங்கிய பல இளம்பெண்கள் இப்போது தங்கள் மேல் கொட்டப்படும் வன்மத்தைக் கையாளும் விதம் பாராட்டுக்குரியது.
இன்பாக்ஸில் வரும் ஆபாசங்களின் ஸ்கீரின்ஷாட்களைப் பகிர்ந்து சம்பந்தபட்ட ஆண்களை அம்பலப்படுத்துகிறார்கள். பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சைபர் கிரைமில் புகார் அளிக்கிறார்கள். இந்த மாற்றம் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்லும் (#VictimShaming #VictimBlaming) சமூகத்தை பார்த்து பயப்படும் மற்ற பெண்களுக்கு இது உந்துசக்தியாக இருக்கும்.
மறுபக்கம் அதே பெண்கள் எல்லா ஆண்களும் ஒன்றுதான் என சலிப்படைகிறார்கள். ஒட்டுமொத்தமாக ஆண்களின்மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளின்போது என் நட்புவட்டத்தில் இருக்கும் பெண்களிடத்தில் ''எல்லா ஆண்களும் அப்படி கிடையாது” என ஆரம்ப நாட்களில் சொல்ல நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஓர் ஆணுக்கு ஆதரவாக எழும் குரல்கள், #NotAllMen என்பதே ஓர் ஆணாதிக்க வாக்கியமோ என சந்தேகம் கொள்ளவைக்கிறது.
இவ்வளவையும் கடந்து சாதி/மத/வர்க்க/பாலின ரீதியாக எல்லோரும் சமம் எனப் பேசினால், ''அரசியல் பேசி உறவுகளை இழக்காதே” என வாட்ஸப்பில் மிரட்டல் விடும் உறவினர்களின் அக்கப்போரை தனிக் கட்டுரையாகவே எழுதலாம்.
இந்த 2021லாவது இதெல்லாம் மாறுமா?
இவை சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு இடமில்லை எனும் புலம்பலோ, கூப்பாடோ அல்ல. நான் சோஷியல் மீடியா பயன்படுத்த ஆரம்பித்த ஒன்பதாண்டுகளில் பெண்களுக்கான பிரச்னைகள் கூடியிருக்கின்றன. அவற்றை எளிதாக அடித்து காலி செய்யும் மனவலிமையும் பெண்களுக்கு கூடியிருப்பதை காணமுடிகிறது என்பதை இப்புதிய ஆண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் கெத்தாக, திமிராக, தில்லாக சொல்லிக்கொள்கிறேன்!
பிகு 1: ஆண்கள் என்று குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களிலும் “பெரும்பான்மையான” எனும் முன்னொட்டு மறைந்திருக்கிறது என நினைவில் கொள்க.
பிகு 2: இங்கே எழுதியிருப்பவை எல்லாமே உண்மையான உண்மை என்பதாலும், உண்மை சுடும் என்பதாலும் யாருக்காவது இவை மன உளைச்சலை ஏற்படுத்துமாயின், “அதுக்கு விதை நீங்க போட்டது” என்பதையும் நினைவில் கொள்க!
source https://www.vikatan.com/oddities/women/on-this-new-year-lets-address-this-problematic-social-media-behaviour-of-men
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக