ஆடி, பிஎம்டபிள்யூ, ஜாகுவார் போன்ற லக்ஸூரி காரை எடுத்துக் கொள்ளுங்கள். ‘‘ஸ்டீயரிங் வீலே செமையா இருக்குல்ல… ஜாகுவாரோட ரோட்டரி கியர்பாக்ஸ் தரமே தனி… வாவ்… வால்வோவில் எத்தனை ஏர்பேக்ஸ்’’ என்று நாமே புளகாங்கிதமடைவோம். பெரும்பான்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இவையெல்லாம் அந்தந்த கார் நிறுவனங்களின் சொந்தத் தயாரிப்பாக இருக்காது. இதுபோன்ற உதிரி பாகங்களை வெளியே ஒரு கம்பெனியில் வாங்கித்தான் பொருத்துகின்றன கார் நிறுவனங்கள். ஆடி, ஜாகுவார், பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்ய வேண்டும் என்றால், அது எப்படிப்பட்ட தரமான தயாரிப்பாக இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட நிறுவனம்தான் ஆட்டோலிவ் (Autoliv).
ஸ்வீடனைச் சேர்ந்த இந்த Autoliv நிறுவனம் – காற்றுப்பைகள், குழந்தைகளுக்கான ISOFIX மவுன்டட் சீட்கள், ஸ்டீயரிங் வீல்கள், சீட் பெல்ட்கள் போன்ற முக்கியமான பாதுகாப்புச் சாதனங்களைத் தயாரிப்பதில் எக்ஸ்பர்ட். ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜாகுவார், சிட்ரான், ஹூண்டாய், ஹோண்டா, கியா, லெக்ஸஸ், ஃபோர்டு, டொயோட்டா, இன்ஃபினிட்டி, கேடில்லாக் என்று உலகளவில் உள்ள ஏகப்பட்ட கார் நிறுவனங்கள், Autoliv–ன் வாடிக்கையாளர்கள்.
ஆட்டோலிவ் நிறுவனத்தின் ஹைலைட்டான பாதுகாப்பு அம்சம் என்றால், Torricelli Brake சிஸ்டத்தைச் சொல்லலாம். இதை Autonomous Emergency Braking என்றும் சொல்கிறார்கள். அதாவது, எமர்ஜென்சி நேரங்களில் தானாகவே பிடிக்கும் ஆட்டோமேட்டிக் அம்சம் இது. வழக்கமாக நிற்கும் தூரத்தை ஒப்பிடும்போது, 40% குறைவான தூரத்திலேயே இதன் ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் இருக்கும். பாதசாரிகளுக்கான காற்றுப்பைகளையும் உற்பத்தி செய்து அசத்திக் கொண்டிருக்கிறது Autoliv. வால்வோ போன்ற கார்களில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் உண்டு.
இதைவிட ஹைலைட்டான விஷயம் – Autoliv நிறுவனம், இந்தியாவில்… இல்லை தமிழ்நாட்டில்… அதுவும் செய்யாரில் ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவிக் கொண்டிருக்கிறது. இதற்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறதாம் Autoliv. அதாவது, இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலிருந்தே கார்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்க இருக்கிறது. இதனால், கார்களின் விலை குறையும் என்பதைத் தாண்டி, இதனால் சுமார் 400 பேருக்கு வேலை வாய்ப்பும் காத்திருக்கிறது.
ஆரம்பத்தில் வியட்நாம்தான் தொழிற்சாலை நிறுவ சரியான இடம் என்று வியட்நாமுக்கு வண்டியை விட்டதாம் Autoliv. அது சரி வரவில்லை; பிறகு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்… அதுவும் சரி வரவில்லை. இந்தியாவில் தமிழ்நாடுதான் சரிப்பட்டு வரும் என்று ஆட்டோலிவ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் மையம் கொண்டு விட்டனர்.
‘‘எக்கனாமிக்கலாகவும் சரி; தொழில்ரீதியிலும் சரி – தமிழ்நாட்டை விட்டால் வேறெதுவும் எங்களுக்கு செட் ஆவதுபோல் தெரியவில்லை. இதை இங்குள்ள பல மேஜரான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெளிவுபடுத்துகின்றன'’ என்கிறது Autoliv தரப்பு.
ஆட்டோலிவ் சொல்வது உண்மைதான். நெதர்லாந்தைச் சேர்ந்த Dinex எனும் நிறுவனம், மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் 100 கோடி முதலீடு செய்து வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒரு புராெஜெக்ட்டை சமீபத்தில் தொடங்கியுள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்த BYD எனும் நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் தொடங்கியிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம், Ola Electric Mobility நிறுவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் 2,354 கோடி ரூபாய் முதலீடு செய்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
இப்படி கடந்த ஆண்டில் மட்டும் 2 பில்லியன் டாலர்களுக்கு ஆட்டோமோட்டிவ் துறையில் முதலீடு நடந்துள்ளது. தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று சும்மாவா சொன்னார்கள்!
source https://www.vikatan.com/automobile/motor/autoliv-seatbelt-airbag-signs-deal-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக