Ad

செவ்வாய், 12 ஜனவரி, 2021

234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு... சீமானின் `சீர்திருத்தம்’ எடுபடுமா?#TNElection2021

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே, வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவெடுத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தேர்தல் களத்தில் எந்த அளவுக்கு மாற்றத்தை உண்டாக்கும் என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான். ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட, 19 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள் சமூக வலைதளங்களில் தனிக்கவனம் பெற்றார். நாம் தமிழர் கட்சியை அரசியல்ரீதியாகக் கடுமையாக விமர்சனம் செய்துவந்தவர்கள்கூட, சீமானின் இந்தச் செயலைப் பாராட்டினர். காளியம்மாள் போன்றவர்களுக்குப் பல்வேறு தளங்களிலிருந்து ஆதரவும் பெருகியது. அதைத் தொடர்ந்து. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்து பெருவாரியான தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார் சீமான். கடந்த சில மாதங்களாகவே அவர்கள் தீவிரமாகப் பிரசாரமும் செய்துவருகின்றனர். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் ''அமைச்சரவையிலும், சட்டமன்றத்திலும் 50 விழுக்காடு பெண்கள் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை'' என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

கமல்

சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமானின் இந்த முடிவு, தொடர்ச்சியாக கமல்ஹாசனின் கருத்து... ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், பெரிய கட்சிகளை இவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்துப் பேசினார் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா.

ஓவியா (பெண்ணியச் செயற்பாட்டாளர்)

``அரசியலில் பெண்களுக்கு சரிபாதி இடங்கள் வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை, இலக்கு. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா பல ஆண்டுகளாக நிறைவேறாமல் கிடப்பில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களிலேயே சரிபாதியாக பெண்களை நிறுத்துவதே அதை அடைவதற்கான வழி. இதை நாங்கள் பல ஆண்டுகளாக மேடைகளில் முழக்கமாக கட்சிகளிடம் முன்வைத்துவருகிறோம். இந்தநிலையில் ஒரு கட்சி, அது நாம் தமிழராக இருக்கட்டும், கமல்ஹாசனின் கட்சியாக இருக்கட்டும்... அந்த நிலைப்பாட்டை எடுக்கும்போது அதை நல்ல விஷயம் என நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எடுத்தவுடனேயே, அதைக் கேலிக்குரிய ஒன்றாகப் பார்ப்பது என்பது தவறு. காரணம், பெண்களுடைய நடமாட்டம் தேர்தல் களத்தில் அதிகமாவது யாரால், எந்தக் கட்சியால் நடந்தாலும் அதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். இந்த மாதிரியான ஓர் அரசியல் அமைப்பில் மாற்றங்களின் தொடக்கம் இப்படித்தான் இருக்குமென்றால், அது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்தப் பார்வையோடு மட்டும் இந்த விஷயத்தை முடித்துவிட முடியாது.

ஓவியா

காரணம், பெரிய கட்சிகளுக்கு வேட்பாளர் தேர்வென்பது கிட்டத்தட்ட வாழ்வா, சாவா பிரச்னை. அவர்கள் சந்திக்கும் பிரச்னையின் அளவென்பது வேறு. அதை கமல்ஹாசனின் கட்சி, நாம் தமிழர் கட்சி சந்திக்கும் பிரச்னைகளுடன் ஒப்பிட்டுக்கூடப் பார்க்க முடியாது. இவர்கள் இருவரும் அதிகமான வாக்குகளை வாங்கப்போவதில்லை என்பது மக்களுக்கும் சரி, கட்சித் தலைமைக்கும் சரி, நிற்கப்போகும் வேட்பாளர்களுக்கும் சரி... மிக வெளிப்படையாகவே தெரியும். அதனால் அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

இந்தத் தொகுதிகளில் இவர்களை வேட்பாளராக நிறுத்தலாமா என்பதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சியோ, போட்டியோ, போராட்டமோ அவர்களுக்குக் கிடையாது. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை கமல்ஹாசனாகப் பார்த்து யாரையாவது வேட்பாளராக நிறுத்துவார். அதாவது, ஓர் ஆணை நிறுத்துவதற்கு பதிலாக ஒரு பெண்ணை வேட்பாளராகக் கைகாட்டிவிடுவார் அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சியில் கடந்த தேர்தலில் இதே நிலைதான் இருந்திருக்கும். இந்தத் தேர்தலில் வேண்டுமானால் சில போட்டிகள் உருவாகியிருக்கலாம். ஆனால், பெரிய கட்சிகளில் மிகக் கடுமையான போட்டியிருக்கும்.

பெரிய கட்சிகளிலும், `பெண்களை நிறுத்தாதீர்கள், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தாதீர்கள்’ எனக் கட்சி நிர்வாகிகள் யாரும் கோரிக்கை வைக்க மாட்டார்கள். தனக்கு சீட்டு வேண்டும் என்றுதான் பிடிவாதமாக இருப்பார்கள். செல்வாக்குமிக்க பலர் சீட்டுக்காகப் போட்டியிடும்போது ஒருவருக்குக் கொடுத்தால், மற்றவர்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் பெரிய கட்சிகளுக்கு இருக்கிறது. அதேவேளையில், சிறிய கட்சிகளின் முயற்சிகளை அப்படியே புறந்தள்ளிவிடவும் முடியாது. அதை எதிர்காலத்துக்கான அடையாளக் குறியீடாகப் பார்க்க பெரிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளர்களுக்கான போட்டிக் களத்தில் ஏன் பெண்கள் அதிகமாக இல்லை என்பதற்கான கேள்விக்கும் பெரிய கட்சிகள் விடை தேட வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து, ஒன்றியச் செயலாளர் பதவி முதல் பலகட்டப் பதவிகளை பெண்களுக்குக் கொடுத்தால்தான் அவர்களும் வேட்பாளர் போட்டிக்கு அதிகமாக வருவார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.

பெண் விடுதலைக் கட்சியின் தலைவர் சபரிமாலா ஜெயகாந்தனும் இதே கருத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகிறார்.

சபரிமாலா

சபரிமாலா ஜெயகாந்தன் ;

``வேட்பாளர்களில் சரிபாதி பெண்களை நிறுத்துவது வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால், சமூகத் தெளிவோடு, அரசியல் தெளிவோடு இருக்கிற பெண்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா... உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்கும் பல பெண்கள் அதிகாரமற்றவர்களாக, வெறும் கையெழுத்து வேட்பாளர்களாக மட்டும் நிறுத்தப்படுகிறார்கள். பின்னணியில், ஓர் ஆண்தான் அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறார். ஒரு கட்சியில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவது, அமைச்சரவையில் இடம் கொடுப்பது மட்டும் பெண் விடுதலை ஆகிவிடாது. கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இடம் கொடுக்க வேண்டும். மொத்தமுள்ள மாவட்டச் செயலாளர்களில் எத்தனை பேர் பெண்கள் இருக்கிறார்கள்... மாநிலத் தலைமைப் பொறுப்புகளில், முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்... மகளிர் அணியில் மட்டுமல்லாமல் பொதுத் தலைமைகளில் பெண்கள் பெரும்பான்மையாக வருவது மட்டுமே இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்''என்கிறார் அவர்.

கடைசியாக நாம் தமிழர் கட்சி, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் மாநிலத் தலைவர் சிவசங்கரியிடம் பேசினோம்.

Also Read: எதிராகக் களமிறங்க சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ரெடி... ஈஸி டார்கெட் ஆகிறாரா ஸ்டாலின்?#TNElection2021

சிவசங்கரி :

`` `பெண்களை வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது’ என வளர்ந்த கட்சிகள் யோசிப்பதே அடிப்படையில் தவறான விஷயம். இத்தனை வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நல்லாட்சியைத் தந்திருந்தால் யாரை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களே... மக்கள் நம்பிக்கையைப் பெறுகிற அளவுக்கு அவர்கள் ஆட்சிபுரியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அதைக் காரணம் காட்டி, பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, இது மக்களுக்கான தேவையாகப் பார்க்கிறோம். அதேபோல, எங்கள் கட்சியில் மகளிரணியில் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளராக, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளராக எனப் பல முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்தான் இருக்கிறார்கள். மற்ற கட்சிகளில் பெண் தலைவர்களாக இருப்பவர்கள், அரசியல் வாரிசுகளாக, பாரம்பர்ய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், எங்கள் கட்சியில் யாரும் அப்படியில்லை. எல்லோருமே எளிய குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள்.

சிவசங்கரி

அதேபோல, எங்கள் கட்சியில் வேட்பாளர்களாக நிற்கும் பெண்கள் அனைவருமே அரசியல்படுத்தப்பட்டவர்கள். சீமான் அண்ணனுக்கு நிகராக மேடைகளில் பேசக்கூடிய ஆளுமைகள். அந்தந்தப் பகுதி பிரச்னைகளுக்காகப் போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர்கள். தற்போது தூத்துக்குடி வேட்பாளராக நிற்பவர்கூட ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டவர்தான். இப்படி அரசியல் புரிதலோடு மக்கள் சேவை செய்யும் பெண்கள்தான் எங்கள் கட்சியின் வேட்பாளர்களாக, பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல் முழுமையாக வந்த பிறகு நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்

கேரளாவில் தற்போது உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 60 சதவிகித இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எங்கள் கட்சியின் சார்பில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது கேரள தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதன் தாக்கமே கேரளாவில் ஆளும்கட்சியே இப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. தமிழகத்திலும் இதுபோல ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/117-out-of-234-constituencies-for-women-will-seamans-reform-will-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக