Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

சென்னை: சினிமா உதவி இயக்குநர், வீடு புரோக்கர் கொலை!-புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்கள் வெறிச்செயல்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருத்ரன் (25). இவர் வளசரவாக்கத்தில் தங்கியிருந்து பிரபல சினிமா இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக வேலை செய்துவந்தார். புத்ததாண்டையொட்டி நண்பர்களுடன் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். கொரோனா காரணமாக இந்த ஆண்டு நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகளில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை. அதனால் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நண்பர் மணிகண்டன் (24) என்பவர் வீட்டில் மது விருந்துக்கு ருத்ரன் ஏற்பாடு செய்தார். மணிகண்டனும் சினிமா உதவி இயக்குநராக பணியாற்றிவருகிறார்.

கொலை

புத்தாண்டை கொண்டாட ருத்ரன், அவரின் நண்பர்கள் சஞ்சய், ராம்குமார் ஆகியோர் மணிகண்டன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அனைவரும் மதுஅருந்தி புத்தாண்டைக் கொண்டாடினர். இந்தச் சமயத்தில் ருத்ரன், சிகரெட் புகைத்திருக்கிறார். அந்தப் புகையை மணிகண்டன் முகத்துக்கு நேராக ஊதியதாகக் கூறப்படுகிறது. அதனால் போதையிலிருந்த மணிகண்டனுக்கும் ருத்ரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ருத்ரனைக் குத்தியிருக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் ருத்ரன் கீழே சரிந்தார். அதைப்பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ருத்ரனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ருத்ரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்து மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ருத்ரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பனைக் கொலை செய்த வழக்கில் உதவி இயக்குநர் மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர்.

Also Read: நெல்லை : `41 கொலை வழக்கு; தொடர்புடையவர்கள் அனைவரும் கைது!’ - 2020 க்ரைம் ரிப்போர்ட்

கொலை

மற்றொரு சம்பவம்!

நுங்கம்பாக்கம், காம்தார் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் காதர் (56). வீடு புரோக்கர். இவருக்கும் இவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வசித்த காதர், புத்தாண்டையொட்டி நண்பர் பழனியுடன் சேர்ந்து மது அருந்த திட்டமிட்டார். இதற்காக மதுவை வாங்கிக் கொண்டு பழனி வீட்டுக்கு காதர் சென்றார். அங்கு இருவரும் மது அருந்தினர். போதை தலைக்கெறியதும் காதர், ஆபாசமாக பேசியிருக்கிறார். அதை பழனி கண்டித்திருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த பழனி, கத்தியை எடுத்து காதரைக் குத்தி கொலை செய்தார். பின்னர் போலீஸிடம் சிக்காமலிருக்க என்ன செய்தென்று யோசித்திருக்கிறார்.

உடனடியாக தன்னுடைய சகோதரருக்கு போனில் பழனி தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து காதரின் சடலத்தை சாலையில் வீசி விட்டு தப்பிச் சென்றனர். காதர் கொலை செய்யப்பட்ட தகவல் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு பொது மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காதரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மது

பின்னர் கொலை குறித்து விசாரித்தபோது பழனியும் காதரும் மது அருந்திய தகவல் தெரியவந்தது. உடனடியாக பழனியைத் தேடி அவரின் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து பார்த்தபோது அங்கு ரத்தக்கறைகள் இருந்தன. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது இந்தக் கொலையில் பழனியின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் தலைமறைவாக உள்ள பழனியையும் அவரின் சகோதரரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பழனி, செக்யூரிட்டியாக வேலைப்பார்த்து வருகிறார்.

புத்தாண்டையொட்டி நடந்த மதுவிருந்தில் சென்னையில் 2பேர் நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/cinema-assistant-director-and-house-broker-murdered-by-his-friends-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக