``டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு என்னவேண்டும் என்றும், விவசாய சட்டத்தால் என்ன பிரச்னை என்றும் தெரியாமல் இருக்கின்றனர். இதன் மூலம் யாரோ சொல்வதால்தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது. எனவேதான் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இதில் ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை” என்று நடிகையும் மதுரா தொகுதி பா.ஜ.க எம்.பி.யுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், ``பஞ்சாப்பில் மொபைல் டவர்களை சேதப்படுத்துவது நல்லதல்ல. பஞ்சாப் அதிகமான இழப்புக்களை சந்தித்துள்ளது.
விவசாயிகள் மொபைல் டவர்களை சேதப்படுத்துவதை பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. ஆனால் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கான கொள்கை இல்லாமல் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசி குறித்து குறிப்பிட்ட ஹேமமாலினி, ``கொரோனாவிற்கு தடுப்பூசி வந்திருப்பது நல்லது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன். இந்த தடுப்பூசி குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அரசு என்ன சொன்னாலும் அதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சீர்திருத்த சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் 7 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை.
விவசாயிகளும், மத்திய அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் இதில் தலையிட்டு மத்திய அரசின் சட்டங்களுக்கு தடை விதித்திருப்பதோடு விவசாய சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. ஆனால் அக்கமிட்டியில் மத்திய அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பதால் அதனை ஏற்க முடியாது என்று கூறி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/farmers-protesting-unknowingly-says-hemamalini
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக