சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பைகளும், 700 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிப்பு திடக்கழிவுகளும் உருவாகின்றன. இவற்றில் குடியிருப்புகளிலிருந்து 68 சதவிகிதமும், வர்த்தகரீதியான இடங்களிலிருந்து 16 சதவிகிதம், அரங்கங்கள், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 14 சதவிகிதம், தொழிற்சாலைகளிலிருந்து இரண்டு சதவிகிதக் குப்பைகள் உருவாகின்றன. மருத்துவக் கழிவுகள் அனைத்தும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நியமித்திருக்கும் ஏஜென்டுகள் மூலமாக அகற்றப்பட்டுவருகின்றன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை தற்போது 19,300-க்கும் அதிகமான தூய்மை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகள் உள்ளது. இதில் அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களை உர்பசேர் - சுமித் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் குப்பைகள் சுத்தம் செய்யப்படு வருகிறது. அம்பத்தூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர் ஆகிய மண்டலங்கள் ராம்கி என்ற தனியார் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள அண்ணாநகர், திரு.வி.க.நகர், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது. இதில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் மண்டலங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக, இந்த மண்டலங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியிழக்கும் நிலை உருவாகியுள்ளது.
முதற்கட்டமாக அண்ணாநகர் மண்டலத்தில் பணியாற்றிவரும் 550-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கள் காலை பணிக்கு வந்த ஊழியர்களை இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தூய்மை தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையிலும், அண்ணாநகர் மண்டல அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாநகரைத் தொடர்ந்து திரு.வி.க.நகர், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களையும் அந்த மண்டலங்களிலிருந்து ராம்கி நிறுவனம் செயல்படும் மண்டலங்களில் பணியமர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
தற்போது நீக்கப்பட்ட ஊழியர்களும் சரி, நீக்கப்பட உள்ள ஊழியர்களும் சரி, இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றியவர்கள். இந்த கொரோனா பேரிடரில் மொத்த நகரமும் வீட்டுக்குள் இருக்கச் சென்னை மாநகராட்சியின் கழிவுகளை அகற்றி நகரத்தைத் தூய்மையாக வைத்திருந்தவர்கள். கொரோனா பேரிடரின் போது நூற்றுக்கணக்கானத் தூய்மை தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது சிலர் தங்களது உயிர்களையும் இழந்துள்ளனர்.
Also Read: தயவுசெய்து குப்பைக்காரரே, `இந்தா குப்பை'னு கூப்பிடாதீங்க!
``கொரோனா பேரிடர் மட்டுமல்ல, தற்போது சென்னை கனமழையிலும் சரி, சென்னைக்கு வெள்ளம் வந்தாலும், புயல் வந்தாலும், எந்த பேரிடர் வந்தாலும், எவ்வளவு பெரிய நோய்த் தொற்று வந்தாலும் அந்த கடுமையான நேரங்களிலும் இவர்களில் பலரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். கடுமையான நேரங்களிலும் தொடர்ந்து பணியாற்றிய தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் இப்படி திடீரென்று பணியை விட்டு நிறுத்தியது எங்களை மட்டும் அல்ல எங்களின் குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்துள்ளது" என்று பணியிழந்த ஊழியர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
மாநகராட்சியின் இந்த செயல்பாட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ``கோவிட் போர் வீரர்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டாலும், இந்த இ.பி.எஸ் அரசு சென்னையில் 700 துப்புரவுத் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துள்ளது. நாம் பெருந்தொற்றின் போது அவர்களைச் சார்ந்து இருந்தபோதும், அவர்களுக்கு உரிய நேரம் தரப்படாமல் அதுவும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் மோசமான செயல்.பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்குக் காட்டும் நன்றி இதுதான்”. என்று தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ``கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன் களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரைச் சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமெனச் சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்" என்று தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேசினேன், ``சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் தூய்மை பணி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை பணியில் உள்ள 75 சதவிகித தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்கள் தான். மறுசீரமைப்பின் பொது அதில் 90 சதவிகிதத்தினுக்கு ஏற்கனவே பணிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் பணி வழங்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களின் ஊதியம் தினசம்பளம் என்றக் காரணத்தினால், வேறு மண்டலம் மாற்றும் வரை தற்காலிகமாகப் பணி வழங்காது நிறுத்து வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ``தூய்மைத் தொழிலாளர்களில் வயது முதிர்ந்தவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பணியில் ஒழுங்கில்லாதவர்களைத் தவிர மற்ற அனைவருமே வேறு மண்டலத்தில் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் அனைவருமே கடுமையான நேரங்களிலும் மாநகராட்சியில் பணியாற்றியவர்கள். மாநகராட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேறு மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் வேறு மண்டலத்தில் பணி வழங்கப்படும்" என்று கூறினார்.
மிகக் கடினமான காலங்களிலும் தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது உழைத்தவர்களை பணிநீக்கம் செய்தது. அவர்களை விரைந்து பணியமர்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/sudden-dismissal-of-550-contract-sanitation-workers-in-chennai-corporation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக