Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

`ஓய்வில் இருக்கிறார், உயிர்த்தெழுவார்’ -இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா (வயது 38). திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றிவருகிறார். தேனியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் அன்னை இந்திராவிற்கு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், அன்னை இந்திரா, கிருஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனால் பால்ராஜுக்கும், அன்னை இந்திராவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அன்னை இந்திராவின் உடல்

Also Read: `சந்தேக நபரைப் புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி

இந்நிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார். இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியுள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஒரு வருடத்திற்கு முன் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்த அன்னை இந்திரா, கடந்த அக்டோபர் 16-ம் தேதி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பாத அன்னை இந்திரா பற்றி விசாரிக்க, அவரது வீட்டிற்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றுள்ளனர்.

ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியுள்ளனர். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அன்னை இந்திராவின் குழந்தைகள்

தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையை திறந்து பார்த்தனர். அங்கே, இறந்த நிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த டிசம்பர் 7-ம் தேதி படுக்கையில் இருந்த இந்திரா சுயநினைவை இழந்துள்ளார். ஜெபம் சொல்லி சரி செய்வதாக கூறி மதபோதகர் சுதர்சன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். கண்விழிக்காத உடலில் இருந்து இரண்டு நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியுள்ளார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Also Read: திண்டுக்கல்: `இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி..!’ - சர்ச்சையான அமைச்சர் சீனிவாசன் பேச்சு

பெண் காவலர் அன்னை இந்திரா

உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்ற போது, அதனை வாசுகி மற்றும் சுதர்சன் தடுத்துள்ளனர். ’அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் உயிர்தெழுவார்.!’ என கூறியுள்ளனர். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அன்னை இந்திராவின் குழந்தைகள், தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களது தந்தை பால்ராஜிற்கு தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாட்கள் வீட்டில் வைத்து ஜெபம் சொல்லிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/crime/female-police-was-kept-in-home-after-she-lost-consciousness-dies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக