கோபிசெட்டிபாளையம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க ஆட்சி மீது எந்தக் குறையும் சொல்ல முடியாததால, தினமும் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளையும், அறிக்கைகளையும் ஸ்டாலின் சொல்லிக்கிட்டு இருக்காரு. நான் இப்ப சொல்றேன். எந்த இடத்துக்கு நீங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன். எந்தத் துண்டுச்சீட்டும் இல்லாம வாங்க... தைரியம் இருந்தா வாங்க. நான் கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க. நீங்க கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்றேன். இந்த கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து சவால்விடுறேன். உண்மையைப் பேசுங்க. இல்லைன்னா வர்ற தேர்தல்ல எதிர்க்கட்சியாகக்கூட வர முடியாது” என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் சவாலுக்கு இன்று அறிக்கை மூலம் பதிலளித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அதில் அவர், ``என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?’ என்று முதலமைச்சர் பழனிசாமி நேற்று சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்!
அதற்கு முன்னர் பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, ``சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்” என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும். “எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.
அதே மாதிரி “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள்.
முடிந்தால் ஓ. பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில் குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படி கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள், என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள், என்ன கலெக்ஷன் செய்துள்ளீர்கள், எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாக தொங்க விடுகிறேன். நான் ரெடி, முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: ஈரோடு: ``சவால் விடுகிறேன்... தைரியம் இருந்தா வாங்க!” - ஸ்டாலினுக்கு எதிராகக் கொதித்த பழனிசாமி
source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-says-he-will-take-the-challenge-of-edappaadi-palanisamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக