சென்னை தாம்பரத்தை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ரம்யா (40) (பெயர் மாற்றம்). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். ரம்யா, சித்தாள் மற்றும் ரயிலில் பொருள்களை விற்கும் வேலை செய்து வந்தார். பல்லாவரத்தில் குடும்பத்தினரோடு குடியிருந்த ரம்யா சில காரணங்களுக்காக செங்கல்பட்டு அடுத்த பரனூருக்கு குடியிருப்பை மாற்றினார். தினமும் பரனூரிலிருந்து பல்லாவரத்துக்கு வேலைக்கு மின்சார ரயிலில் ரம்யா வந்துச் செல்வது வழக்கம். இந்தச் சூழலில் கடந்த 8-ம் தேதி வேலை முடிந்து ரம்யா, பரனூருக்குச் செல்ல பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் ஏறியிருக்கிறார்.
ரயிலில் கூட்டம் இல்லாததால் இருக்கையில் படுத்துறங்கினார் ரம்யா. அவர் சென்ற ரயில் செங்கல்பட்டு வரைச் சென்று விட்டு மீண்டும் சென்னை கடற்கரைக்கு திரும்பியது. தூக்கத்திலிருந்தால் ரம்யா, பரனூரில் இறங்கவில்லை. சென்னை கடற்கரைக்கு வந்த மின்சார ரயில் மீண்டும் தாம்பரம் வரை இரவு வந்திருக்கிறது. பின்னர் அந்த ரயில் பராமரிப்பு பணிக்காக தாம்பரம் ரயில்வே பணிமனைக்குச் சென்றிருக்கிறது. அப்போதும் ரம்யா கண்விழிக்கவில்லை. அதை பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் ரயில்வே ஊழியர்களும் கவனிக்கவில்லை.
பணிமனைக்குச் சென்ற மின்சார ரயிலை சுத்தம் செய்ய 2 ரயில்வே ஊழியர்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு ரயில் பெட்டியாக சுத்தம் செய்து வந்தபோது ஒரு பெட்டிக்குள் ரம்யா படுத்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் ரயில்வே ஊழியர்களுக்கு சபல புத்தி ஏற்பட்டிருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த ரம்யாவை வலுகட்டாயமாக 2 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அவர்களிடம் ரம்யா போராடி தோற்றுபோயிருக்கிறார். பின்னர் தனக்கு நடந்த கொடுமை குறித்து 9-ம் தேதி காலையில் தாம்பரம் ரயில்வே போலீஸாரிடம் கூறியிருக்கிறார். ரம்யா கொடுத்த தகவலின்படி இரவு நேரத்தில் ரயில் பராமரிப்பு பணியிலிருந்த ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது தன்னிடம் தவறாக நடந்தவர்களை ரம்யா அடையாளம் காட்டியிருக்கிறார்.
Also Read: சென்னை: 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆண் நண்பருடன் சிக்கிய பெண்!
இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களின் பெயர் சுரேஷ் (30), அப்துல் அஜிஸ் (30) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீஸார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்த இளம்பெண் ரம்யாவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. சம்பவத்தன்று ரயிலில் ஏறும்போதே ரம்யா மது அருந்திருக்கிறார். அதனால் போதையில் அவர் ரயிலிலேயே மயங்கி விட்டார். அதனால் பரனூரில் அவர் இறங்காமல் ரயிலிலேயே பயணித்திருக்கிறார். வழக்கமாக பராமரிப்பு பணிக்காக ரயில் பணிமனைக்கு செல்வதற்கு முன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள். ஆனால் அவர்களும் ரம்யா ரயிலுக்குள் இருந்ததைக் கவனிக்கவில்லை. அதனால்தான் இரவு பணிக்கு வந்த சுரேசும் அப்துல் அஜிஸிம் சேர்ந்து ரம்யாவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இந்தச் சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியிருக்கின்றனர். ரம்யா அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.
மின்சார ரயிலுக்குள் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/woman-raped-inside-the-train-in-tambaram-yard
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக